தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் அருகருகே உள்ள இருக்கைகளில் அமர்ந்தனர்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதினார்.
ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்தார். இதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் துவங்கியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்தார். அவருக்கு அருகில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ. பன்னீர் செல்வம் அமர்ந்திருந்தார்.
ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு, ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையான சொற்களால் விமர்சித்து வருகின்றனர்
இந்தநிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் அருகருகே அமர்ந்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இன்று மாலை 4.30 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
பொங்கல் பரிசு தொகுப்பு: முதல்வர் துவங்கி வைத்தார்!
சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்!