தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு.
2023 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளே ஆளுநர் உரையால் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து 2வது நாள் கூட்டத்தொடர் மறைந்த திருமகன் ஈவெரா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடர் வழக்கம் போல் நடைபெற்று வந்தது. இன்று (ஜனவரி 13) முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பதில் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடையும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் காலை 10 மணிக்குத் தொடங்கியது கேள்வி நேரம் நடைபெற்றது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஏற்கெனவே நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து முதலமைச்சர் உரையாற்றினார்.
தொடர்ந்து பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
4 மசோதாக்கள் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு பேரவைக் கூட்டத் தொடரைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, கூட்டத்தொடரைத் தேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவர் அப்பாவு ஒத்தி வைத்தார்.
மோனிஷா
பேட்டரி வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை!