தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் மேற்கொள்வதற்கான ஏலத்துக்கு அனுமதி அளித்து சில நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், கடந்த 6ம் தேதி அதை விலக்கிக் கொள்வதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 8) நன்றி தெரிவித்துள்ள நிலையில் இந்த செய்தி பிரதமர் தமிழ்நாட்டுக்கு வர உள்ள சில மணி நேரங்களுக்கு முன் பேசுபொருளாகியுள்ளது.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு 6வது நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வான 29 நிறுவனங்களுடன் மத்திய அரசு ஏற்கனவே ஒப்பந்தம் முடித்துவிட்டது. அடுத்த கட்டமாக 7வது சுற்று ஏலம் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 106 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏலம் கோரப்பட்டது.
இந்த அறிவிப்பு பட்டியலில் தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி தரும் விதமாக தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டிருந்தது. இந்த மூன்று மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் வரும் நிலையில் விவசாய நிலங்களை நிலக்கரி சுரங்கமாக மாற்றும் நடவடிக்கைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாயிகள், விவசாய சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலக்கரிச் சுரங்க ஏல அறிவிப்பு என்பது தமிழ்நாடு அரசை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதல்வர் குற்றம் சாட்டினார். உடனடியாக இதை விலக்கிக் கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இதுகுறித்து பேசப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 6ம் தேதி மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகாத் ஜோஷி ட்விட்டரில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு பாஜக, அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் ஆகிய ட்விட்டர் கணக்கையும் டேக் செய்துள்ளார்.
அதில், “கூட்டாட்சிக்கு மதிப்பளிக்கும் வகையிலும் தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வுகளின் அடிப்படையிலும் நிலக்கரி சுரங்க ஏலப்பட்டியலில் இருந்து தமிழ்நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 3 இடங்களை நீக்கும்படி கூறியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார் நிலக்கரித் துறை அமைச்சர். மேலும், அந்த ட்விட்டரில் அவர் தமிழ்நாடு பாஜக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரையும் டேக் செய்து இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் அண்ணாமலை தன்னை சந்தித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
2 நாட்களுக்கு முன்னதாகவே இந்த அறிவிப்பு வந்தும் கண்டுகொள்ளப்படாத நிலையில் பிரதமர் மோடி சென்னைக்கு வர உள்ள சில மணிநேரங்களுக்கு முன்பு தற்போது அண்ணாமலை நன்றி தெரிவித்து ட்விட் செய்யவும் வெளியே தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில்… மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு பாஜக, அண்ணாமலை ஆகியோரை டேக் செய்திருப்பது அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது.
-வேந்தன்