கோவை சம்பவம் குறித்து இன்னும் ஆராய வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று (அக்டோபர் 27 ) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் “கோவையில் எல்லா இடமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கோவை என்றாலே பரபரப்பு என்று இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். தீவிரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்.
பாராபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ. விசாரணை உதவி செய்யும். அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்கிறோம் என்பதற்கு ஒரு உத்திரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்பதும் எனது கருத்து.
இதை ஆளுநராக இல்லாமல் கோவையின் மருமகளாய் கூறுகிறேன். கோவை மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு வரவேண்டும்.
இச்சம்பவத்திற்கு முன்பே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அதனை முற்றிலும் ஆராய்ந்து இதை போன்ற சம்பவங்கள் வேறு எங்கும் நடைபெறாது என்பதை தமிழக காவல் துறை உறுதிசெய்ய வேண்டும். கார் வெடிக்கும் வரை நமக்கு எப்படி தெரியாமல் போனது என ஆராய வேண்டும்.
மேலும் குண்டு வெடித்து பா.ஜ.க. சொல்லிதான் மக்கள் பீதி அடைய வேண்டுமா? மக்கள் அனைவரும் தொலைக்காட்சிகளைப் பார்த்து அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளனர். மற்றவர்களை குறை சொல்லாமல் என்ன குறை என பார்ப்பது நல்லது.
ஜனநாயக நாட்டில் பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வது போல் எதிர்ப்பை தெரிவிக்க இதுவும் ஒரு வழிமுறை.
பந்த் நடத்துவது என்பது போராட்ட வழிமுறை. இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக, எதிர்ப்பை தெரிவிக்க நடத்துவது தான் பந்த். கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.
மேலும் அரசியல் தலைவர்களை பொருத்தவரை சமூக வலைத்தளப் பதிவுகளில் நாகரீகமான முறையிலேயே நடந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.
தமிழ் மொழியை தமிழகத்தில் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதனை சரியாக கையாளப்பட வேண்டும் என்பது எனது ஆசை என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பத்திரிக்கையாளர்கள் குரங்குகளா? அண்ணாமலைக்கு குவியும் கண்டனங்கள்!
வெளியானது சமந்தாவின் யசோதா டிரைலர்!