உட்கட்சித் தலைவர்களையே விமர்சிக்கும் பாஜக இணையதளவாசிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.
தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஜூன் 6) அத்தொகுதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் ஒன்றை தொடங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் ஸ்டாலின் போன்றவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். உங்கள் இணையதளவாசிகளை அடக்கி வையுங்கள். தோல்வி என்பது எல்லோருக்கும் வரும். ஆனால் இஷ்டத்துக்கு எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
மறுபடியும் என்னை பரட்டை என்று எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். பரட்டை என்றாலும் இது ஒரிஜினல். என்ன விளையாடுகிறீர்களா…
என் முகத்தை இன்று விகாரமாக ஒருவர் போட்டிருக்கிறார். நான் அழகி என்று சொல்லிக்கொள்ளவில்லையே. தோல்வி எல்லாம் சகஜம் தான். அகில இந்தியளவில் நாங்கள் வெற்றி பெறவில்லையா?.
40எம்.பி.க்கள் வைத்திருக்கிறீர்கள்… என்ன செய்ய போகிறீர்கள்… வெளிநடப்புதான் செய்வீர்கள். நாங்கள் வந்திருந்தால் வழிநடத்தியிருப்போம். ஸ்டாலின் தவறு செய்துவிட்டார். இவர்களுக்கு அரசியல் மட்டும் தான் சேவை.
தென்சென்னை மக்கள் சேவையில் என் பக்கத்தில் இவர்களால் நிற்ககூட முடியாது” என்று சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மற்ற கட்சி இணையதள வாசிகளுக்கு எச்சரிக்கை விடுப்பது போலவே, உட்கட்சி இணையதள வாசிகளையும் எச்சரிக்கிறேன். உள்ளே உள்ள கட்சி தலைவர்களை தவறாக எழுதினீர்கள் என்றால் முன்னாள் மாநில தலைவராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன்.
தலைவர்கள் சொல்லும் கருத்தை அப்படி, இப்படி எழுதாமல் என்ன சொல்கிறார்களோ, அதை மட்டும் எழுதுங்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
”பதவிய காப்பாத்திக்கோங்க அண்ணாமலை” – அதிமுக தாக்கு!
சவுக்கு சங்கர் வழக்கு: டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க உத்தரவு!