அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான எஸ்.பி.வேலுமணியின் கருத்துக்கு பாஜக முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாக பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி இருந்திருந்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார்.
இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு பேசுகிறார்கள். இல்லை என்றால் ஒரு பேச்சு பேசுகிறார்கள். எனக்கு தெரிந்து, வேலுமணிக்கும் எடப்பாடிக்கும் இடையே பிரச்சினை” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 6) மாலை தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது தமிழ்நாட்டில் 2026ல் பாஜக ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்த அவர், எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலையின் கருத்து குறித்து பேசினார்.
“தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி இருந்திருந்தால் இன்று திமுகவுக்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது. இது யதார்த்தமான உண்மை. கூட்டணி என்பது அரசியல் வியூகம். இந்த வியூகத்தை தமிழ்நாட்டிலும், இந்தியளவிலும் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது எதார்த்தமான உண்மை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.
அதுபோன்று 2026ல் கூட்டணியா இல்லையா என்பதை தலைமைதான் முடிவு செய்யும். அதிமுக குறித்த அண்ணாமலையின் கருத்தை பற்றி அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டார்.
அவரிடம், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வந்துவிட்டீர்கள்… உங்களுக்கு அமைச்சரவையில் பதவி கொடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், மக்கள் சேவை செய்ய வந்திருக்கிறேன். மக்கள் மனசுதான் சிம்மாசனம். 3 லட்சம் மக்கள் அவர்களது மனதில் இடம் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் 3 லட்சம் பேர் வாக்களித்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேன். எனவே ஆண்டவனிடமும், ஆண்டு கொண்டிருப்பவரிடமும் விட்டுவிடுகிறேன்” என்று பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பாஜக ஐடி விங்கிற்கு தமிழிசை எச்சரிக்கை!
ஃபேக் எக்சிட் போல்… பங்கு சந்தை முறைகேடு: மோடி, அமித்ஷாவை குற்றம்சாட்டும் ராகுல்