கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று(அக்டோபர் 2) விசிக நடத்தவிருக்கும் மாநாட்டுக்கு அக்கட்சி தொண்டர்களே ஆதரவு தெரிவிக்கவில்லை என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
காந்தியடிகளின் 156வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் அவரது சிலை மற்றும் உருவப்படங்களுக்கு இன்று காலை முதல் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
புது டெல்லியில் உள்ள காந்தியடிகளின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டில் சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்கள் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இதுமட்டுமல்லாமல் இன்று முன்னாள் தமிழக முதலமைச்சரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான காமராஜரின் நினைவு தினம் என்பதால், அவரது சிலைக்கும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கும் அதற்கு அருகில் காமராஜ் மண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கும், பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த தமிழிசை சௌந்தரராஜனிடம், இன்று விசிக நடத்தவிருக்கும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு பற்றி கேட்கப்பட்டது.
திருமாவளவனுக்கு குற்றவுணர்ச்சி!
அதற்குத் தமிழிசை சௌந்தரராஜன் “ மது ஒழிப்பு மாநாட்டிற்கு விசிக கட்சி தொண்டர்களே ஆதரவு தெரிவிக்கவில்லை. விசிக தலைவர் திருமாவளவன் இன்று காந்தி மண்டபத்தைத் தாண்டி சென்று காமராஜரின் நினைவகத்திற்கு தான் முதலில் மரியாதை செலுத்தினார்.
காமராஜருக்கு அவர் மரியாதை செலுத்தியது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் அதற்கு ஏன் காந்தியடிகளின் சிலையைத் தாண்டி சென்று அவர் மரியாதை செலுத்த வேண்டும்? ஒரு வேலை அவருக்கு, ‘நாம் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம் ஆனால் அதை நடைமுறைப் படுத்த முடியவில்லை’ என்ற குற்றவுணர்ச்சியால் அவர் அப்படிச் செய்திருக்கலாம்.
இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் மது ஆறாக ஓடுவதற்குக் காரணமான திமுகவை திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைத்துள்ளார்.
தமிழ்நாட்டை தற்போது ஆளும் திமுக அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 36 மருத்துவக் கல்லூரிகளில், 11 மருத்துவக் கல்லூரிகளில் ‘டீன்’கள் இல்லை.
பெரும்பான்மையான கல்வி நிறுவனங்களில், துணை வேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. இதைப் பற்றி துளியும் கவலைப்படாத திமுக அரசு, ஜாமீனில் வந்துள்ள செந்தில் பாலாஜியை அவசரமாக அமைச்சராக்கியது.
இது அனைத்தையும் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு ஊழலை முற்றிலுமாக ஆதரிக்கிறது.” என்று பதிலளித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
’என் கையை பிடித்து ரஜினி சொன்னது இதுதான்’ : அப்பல்லோ மருத்துவர் சொக்கலிங்கம் விளக்கம்!
நடிகை வனிதா 4வது திருமணமா? ராபர்ட் மாஸ்டருடன் கைகோர்ப்பா?
காந்தி 156வது பிறந்தநாள் : ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!