புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமாக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் இன்று (மார்ச் 18) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில், சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழிசை, நேரடி அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழிசை,
“தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதால் ராஜினாமா செய்துள்ளேன். தெலங்கானா மற்றும் புதுச்சேரி மக்கள் என் மீது காட்டிய அன்பிற்கு நான் என்றும் நன்றியுடையவளாக இருப்பேன்.
ஆளுநராக வாய்ப்பளித்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய ராஜினாமா முதலில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதன்பிறகு எனது வருங்கால திட்டத்தை தெரிவிக்கிறேன். மோடி, அமித்ஷாவிடம் சொல்லிவிட்டு தான் ராஜினாமா செய்தேன். என்னுடைய விருப்பத்திற்கு அவர்கள் தடை விதிக்கவில்லை.
நேரடி அரசியலில் ஈடுபட போகிறேன். ஏற்கனவே எனக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுத்தார்கள். தற்போது இன்னும் அதிகமாக ஆதரவு கொடுப்பார்கள். புதுச்சேரியில் இன்னும் இரண்டு வருடங்களும், தெலங்கானாவில் 6 மாதமும் பதவி காலம் உள்ளது.
ராஜினாமா செய்ததால், இவ்வளவு வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு மறுபடியும் அரசியலுக்கு போகிறீர்களா என்று தான் அனைவரும் கேட்டார்கள். உங்கள் அனைவருக்கும் தெரியும், ஆளுநரின் வாழ்க்கை முறை மிக மிக வசதியானது. அதை விட்டுவிட்டு மக்களுக்காக வருகிறேன் என்றால், மக்கள் எனது அன்பை புரிந்துகொள்வார்கள்” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
6 மாநில உள்துறை செயலாளர்களை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
கோவையில் பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’