கேரளா ஸ்டோரி திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கேரளா ஸ்டோரி திரைப்படம் மே 5-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்க உள்ளேன். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிரானதாக இத்திரைப்படம் உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருப்பவர்கள் கேரளா ஸ்டோரி திரைப்படம் தங்களுக்கு எதிரானதாக நினைப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடி கூறியதை போல தீவிரவாதம் எந்த வகையில் எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எதிர்க்கட்சிகள் தங்களுக்கு வேண்டிய கருத்தை வைத்து படம் எடுத்தால் கருத்து சுதந்திரம் என்பார்கள். மக்களுக்கு சொல்ல வேண்டிய கருத்தை வைத்து படம் எடுத்தால் கருத்து சுதந்திரம் கிடையாது படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். கேரளா ஸ்டோரி படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். உண்மை தன்மை எங்கே இருந்தாலும் அதனை பார்க்க வேண்டும். மோடி ஆவணப்படம் வெளியான போது கருத்து சுதந்திரம் என்று கூறியவர்கள். இப்போது ஏன் சொல்ல மறுக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனையை பற்றி பேசும்போது ஜாதி, மதத்தை வைத்து பிரித்து பார்ப்பவர்களால் திராவிட மாடலை புரிந்து கொள்ள முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அண்ணன் ஸ்டாலினிடம் நான் கேள்வி கேட்கிறேன். எப்படி பிரித்து பார்ப்பதினால் இந்துக்களுக்கு நீங்கள் பண்டிகை தினங்களில் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்.
திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளம்பரங்களை அனைத்து அமைச்சர்களும் பத்திரிகைகளில் கொடுத்துள்ளார்கள். அமைச்சர்களின் துறைகளில் நிதி இருக்கிறதோ இல்லையோ உதயநிதி இருக்கிறார். திமுகவின் இரண்டு ஆண்டு சாதனையில் வாரிசு உருவானது மற்றொரு சாதனை. அறிவிப்புகளை திரும்ப பெறும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்