நெல்லையில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய தமிழ்நாட்டின் 2வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 24) மதியம் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.
சென்னை செல்வதற்காக நெல்லையில் துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருநெல்வேலி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பயணித்தனர்.
இந்த நிலையில் மதுரை ரயில் நிலையம் வந்தடைந்த வந்தே பாரத் ரயிலுக்கு பாஜக நிர்வாகிகள் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமைச்சருக்கு கேக் ஊட்டிவிட்ட ஆளுநர்!
இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மதுரை ரயில் நிலையத்தில் இறங்கிய தமிழிசை சவுந்தர ராஜன் முன்னிலையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் கேக் வெட்டப்பட்டது.
அப்போது தமிழிசை சௌந்தர்ராஜன் அருகில் இருந்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கேக் ஊட்டி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
தமிழகத்தின் மீது அன்பு!
இதனை தொடர்ந்து மதுரையில் தமிழிசை செளந்திர ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “கொங்கு மண்டலம் மற்றும் தென் தமிழ்நாட்டிற்கு என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் விடப்பட்டுள்ளன.
மத்திய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது. தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை நம்ப வேண்டாம். பிரதமர் தமிழகத்தின் மீது அன்பு கொண்டுள்ளார் என்பதை நம்ப வேண்டும்.
வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்ட அனுபவம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் ஆர்வமுடன் தங்களது பயணக் குறிப்புகளை என்னிடம் உற்சாகமாக பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
சாதாரண குடிமகளாக தமிழகத்தின் மகளாக வந்தே பாரத் ரயிலில் மக்களோடு மக்களாக வந்தேன். வந்தே பாரத் ரயிலில் பயணித்த மக்களின் மகிழ்ச்சியை பாரத பிரதமரிடம் சமர்ப்பிக்க உள்ளேன்.” என்று தமிழிசை பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஹவுஸ்ஃபுல்லாக புறப்பட்ட ’நெல்லை – சென்னை’ வந்தே பாரத் ரயில்!
திரில்லர் படங்களின் வழிகாட்டி இயக்குநர் கே.ஜி. ஜார்ஜ் காலமானார்!