ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனக்கு அறிவுரை தான் வழங்கியதாக முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை இன்று (ஜூன் 13) விளக்கமளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று (ஜூன் 12) சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழா மேடைக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன், அங்கு உட்கார்ந்திருந்த அமித்ஷா, வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோருக்கு வணக்கம் செலுத்தியவாறு சென்றார்.
அப்போது தமிழிசையை அழைத்த அமித்ஷா, அவரை கண்டிக்கும் தொனியில் பேசினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தநிலையில், தமிழிசை சுயமரியாதை உணர்வோடு பாஜகவில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கேரள காங்கிரஸ் வேண்டுகோள் வைத்திருந்தது.
மேலும் தமிழிசைக்கு ஆதரவாகவும் அண்ணாமலைக்கும், அமித்ஷாவுக்கும் எச்சரிக்கை விடுத்தும் நாடார் சங்கங்கள் சுவரொட்டிகள் ஒட்டி இருந்தன.
இதுதொடர்பாக இன்று விளக்கமளித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், “ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மக்களவை தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக நேற்று சந்தித்தேன்.
மக்களவை தேர்தலுக்கு பிறகான பணிகள் மற்றும் தமிழகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து என்னிடம் கேட்டறிந்தார். நான் அமித்ஷாவிடம் இதுதொடர்பாக பேசிக்கொண்டிருந்தபோது, அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு மிகுந்த அக்கறையுடன் அறிவுரை கூறினார். தேவையற்ற யூகங்களை பரப்புபவர்களுக்கு இதனை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போன் டேப் வழக்கு: சவுக்கு சங்கர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
இயற்கை எரிவாயு பேருந்து சேவை: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!