தேர்தலை தவிர்த்து வேறு எதையும் சிந்திக்கவே மாட்டீர்களா என்று அமைச்சர் சேகர்பாபுவிற்கு தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். tamilisai soundarajan questions sekar babu
மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களை பார்வையிடுவதற்காகத் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (டிசம்பர் 25) காலை தூத்துக்குடிக்கு சென்றார். இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “பாண்டிச்சேரியுடைய கவர்னர் வேலையை அந்த அம்மாவை பார்க்கச் சொல்லுங்கள்.
பாஜகவினுடைய செய்தி தொடர்பாளராக மாற வேண்டாம் என சொல்லுங்கள். அவர்களுடைய எதிர்கால திட்டம் தமிழகத்தில் எங்காவது நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட வேண்டும் என்பது தான். நிச்சயமாக எங்கு போட்டியிட்டாலும் ஏற்கனவே தமிழக மக்கள் அவருக்கு தோல்வியை தான் பரிசாக கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் தோல்வியை தான் பரிசாக தருவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திருநெல்வேலியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், “இன்று காலை 5 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்தேன். வந்ததில் இருந்து இன்னும் ஒரு நிமிடம் கூட உட்காரவில்லை. ஒவ்வொரு கிராமத்தை பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. வீடுகள் சேதமடைந்துள்ளது. குழந்தைகளுக்கு பால் பவுடர் இல்லை. பெண்களுக்கு உடுத்திக் கொள்ள துணியில்லை.
கண்மாய்களுக்கு, குளங்களுக்கு சரியான தடுப்பு சுவர் கூட கட்டவில்லை. பல இடங்களில் தண்ணீர் இன்னும் தேங்கியுள்ளது. நான் நேரடியாகவே சொல்கிறேன், தமிழக அரசு இன்னும் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால் வானிலை ஆராய்ச்சி மையத்தை குறை சொல்கிறார்கள். மத்திய அரசு இன்னும் நிதி தரவில்லை என்று சொல்கிறார்கள்.
எனவே வானிலை ஆராய்ச்சி மையம் சரியாக சொன்னால் தான் நடவடிக்கை எடுப்போம். மத்திய அரசு நிதி கொடுத்தால் தான் உதவி செய்வோம் என்று சொல்லும் அரசு எதற்கு. முதலமைச்சர் வெறும் ஒரு மணி நேரம் முதலமைச்சராக இருந்துள்ளார். இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் வெறும் 1 மணி நேரம் தான் முதலமைச்சர் பாதிப்புகளைப் பார்வையிட்டுள்ளார். இது திராவிட மாடலா அல்லது திண்டாட்ட மாடலா என்று சொல்கின்ற வகையில் உள்ளது.
ஆனால் நான் தூத்துக்குடியில் போட்டியிடுவதற்காகத் தான் வந்துள்ளேன் என்று சேகர்பாபு கூறுகிறார். உங்களுக்கு எப்போதும் ஓட்டு, போட்டிதானா?. அதற்கு மேல் சிந்திக்கவே மாட்டீர்களா?
நான் உண்மையான உணர்வோடு, என்னுடைய சகோதர, சகோதரிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வந்தேன், அவ்வளவு தான். மக்களை பற்றி கவலையில்லை. நாங்கள் ஏன் வந்தோம் என்பது தான் கவலை. தம்பி உதயநிதியை தற்போது பார்த்தேன். யார் அப்பா வீட்டு கார் இவ்வளவு போகிறது என்று தெரியவில்லை. அவர் ஒரு அமைச்சர் தான். ஆனால் ஒரு முதலமைச்சருக்கு கொடுக்கப்படும் பந்தாவை விட அதிகமாக இருக்கிறது. ஆனால் மற்ற அமைச்சர்கள் இப்படி போகிறார்களா என்று தான் தெரியவில்லை.
டிசம்பர் 18 ஆம் தேதி மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஆனால் முதலமைச்சர் டெல்லி சென்றுவிட்டார். மக்களை அவர்கள் இன்னும் பாதுகாத்திருக்க வேண்டும்.
அதேபோல் நான் பாஜகவின் செய்தி தொடர்பாளர் இல்லை. மக்களின் செய்தி தொடர்பாளர். சேகர்பாபுவிற்கு என்ன பிரச்சனை வந்தது. நான் என்னுடைய ஊர் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று வருகிறேன். அவர் ஏன் பதறுகிறார்.
தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது. அதனால் அறிவிக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தேசிய பேரிடராக அறிவித்தால் மட்டும் போதுமா? தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் அல்லது நிதி தர வேண்டும். இதையே தான் பேசிக் கொண்டிருக்கிறீர்களே தவிர நேரடியாக என்ன முன்னேற்பாடுகளை செய்தீர்கள். சென்னையில் 4,000 கோடி ரூபாயை வைத்து என்ன செய்தீர்கள்.
முன்னறிவிப்பிற்கும், மக்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கும் எதற்கு நிதி வேண்டும். முதலமைச்சர் வருவதற்கு எதற்கு நிதி வேண்டும். நிதி கொடுத்தால் தான் முதலமைச்சர் வருவாரா இங்கே.
இன்று நான் பார்வையிட்ட பகுதிகள் குறித்து அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கும், நாளை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடமும் கொடுக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மீண்டும் ஒரு டபுள் எவிக்ஷன்: வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர்கள் யார்?
2023 ஒரு பார்வை : மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் முதல் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் வரை – என்ன நடந்தது?
tamilisai soundarajan questions sekar babu