உறுதியாக இருக்க வேண்டும்… : எடப்பாடியின் கூட்டணி கருத்துக்கு தமிழிசை பதில்!

அரசியல்

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் உதிரியாக இருக்கக் கூடாது உறுதியாக இருக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 10ஆம் தேதி திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை பொறுத்தவரை ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு என்று கூறியிருந்தார்.

இதனால் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுந்தது.

இதுதொடர்பாக சென்னையில் இன்று (நவம்பர் 12) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், “அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கும், ஜெயக்குமாருக்கும் என்ன சூழல் மாறியது என்று எனக்குத் தெரியவில்லை. 2026 தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அழகான ஒரு வார்த்தையை சொன்னார்.. ஒத்தக் கருத்துடைய கட்சிகள் எல்லாரும் ஒன்றாக இணைய வேண்டும் என்றார்.

ஒத்த கருத்து என்றால் என்ன.. மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளுக்கு எல்லாம் இன்றைக்கு ஒத்த கருத்தாக உள்ளது.

இந்த ஒத்த கருத்து உடையவர்கள் ஒத்துப்போய் வந்தால் நல்லது என்பது தான் என்னுடைய கருத்து.

எடப்பாடி அண்ணனே இன்னும் காலஅவகாசம் இருக்கிறது என்பதையே கூறினார். ஆனால் எதற்கு அண்ணன் ஜெயக்குமார் போன்றவர்கள் முடிவெடுத்து அறிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை..

பாஜக கூட்டணியில் பல பேர் வந்து சேரலாம். பாஜகவுடன் சேர்ந்து பல கட்சிகள் கூட்டணி அமைக்கலாம். திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் விலகி வரலாம்… அவர்கள் எதிர் கூட்டணியில் சேரலாம்.. அதனால் 2026 தேர்தலுக்கு காலஅவகாசம் இருக்கும் போது, திராவிட முன்னேற்ற கழகமே எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது.

கொள்கை அடிப்படையில் தான் கட்சிகள் ஒன்றாக வரவேண்டும் என்பதில்லை. பொதுவான ஒரு கட்சியை எதிர்க்க வேண்டும் என்று வந்தால் கொள்கைகள் மாறுபடலாம்.

எந்த கட்சியை தோற்கடிக்கப்போகிறோம் என்பதில் எல்லோரும் உறுதியாக இருக்க வேண்டுமே தவிர உதிரியாக இருக்கக் கூடாது” என்றார்.

திமுக- அதிமுக என இரண்டு கட்சிகளுமே எங்களுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிதான். அதனால் அரசியல் சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று குறிப்பிட்ட தமிழிசை, 2026ல் வலுவான கூட்டணி அமையும் என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் …. வழக்கறிஞர் சிக்கியது எப்படி?

ரிச் அண்ட் மிடில்கிளாஸ் லுக்! விருப்பமில்லாமல் நடிக்க வந்து வெற்றி பெற்ற ஜெயபிரகாஷ்

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *