‘டிடி நியூஸ்’… காவிமயமாக்க திட்டமா? – ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்!

அரசியல்

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் வண்ணத்தை காவி நிறமாக மாற்றியதில் தவறில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று (ஏப்ரல் 22) பதிலளித்துள்ளார்.

மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் இந்தி சேனலான தூர்தர்ஷன் (டிடி சேனல்) தனது லோகோவை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றியது.

இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஏப்ரல் 21) வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், “உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள். தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள். வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள். பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்.

தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள். தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலளித்து தமிழிசை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற சமஸ்கிருத பெயர் வைப்பதா என்ற கேள்வி கேட்கும் ஸ்டாலின் அவர்களே…. ஆகாஷவாணி என்ற பெயர் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்திருந்தே உள்ளது.

எப்போது உங்கள் குடும்ப தொலைக்காட்சியான சன் டிவி என்ற ஆங்கில பெயரை தமிழாக்கம் செய்யப் போகிறீர்கள்? DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளார்கள்.

காவி என்பது தியாகத்தின் வண்ணம்…. நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி… அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே” என்று தெரிவித்திருந்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Gold Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் பெண்கள்!

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி: சாதனை படைத்த குகேஷ்

+1
1
+1
1
+1
1
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *