தமிழிசை மூவர் மண்டபம்: மின்னம்பலம் கட்டுரை- முதல்வர் எடுத்த ஆக்‌ஷன்!

அரசியல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணி மண்டபத்தை முதல்வர் உத்தரவின் பேரில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் டிசம்பர் 23ஆம் தேதி ஆய்வு செய்தார்.

கடந்த டிசம்பர் 21ஆம் தேதி நமது மின்னம்பலத்தில் கலைஞர் அமைத்த தமிழிசை மண்டபம் : கவனம் செலுத்துவாரா ஸ்டாலின் என்ற தலைப்பில் பத்திரிகையாளர் பிரியன் எழுதிய சிறப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

அதில், “தமிழிசை மூவர் என்றும் சீர்காழி மூவர் என்றும் போற்றப்படும் முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகியோருக்கு 2010-11 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சீர்காழியில் கலைஞர் மணிமண்டபம் எழுப்பினார்.
இதையடுத்து 2011ல் தேர்தல் வந்ததால் பார்த்து பார்த்து கட்டிய மணிமண்டபத்தை கலைஞரால் திறக்கமுடியவில்லை. 2013ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மண்டபம் சரியாகப் பராமரிக்கப்படவில்லை. வருடா வருடம் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் நடக்க வேண்டிய தமிழிசை மூவர் விழாவும் சரிவர நடக்கவில்லை.

திமுக ஆட்சியிலும்-கோவிட் காலத்துக்கு பிறகும், இதே நிலை தொடர்வதாகச் சொல்கிறார்கள் தமிழிசை ஆர்வலர்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசிய இந்த காலகட்டத்தில், தமிழிசை மூவர் மணிமண்டபத்தைப் பற்றிய செய்திகளை அவரது கவனத்துக்குக் கொண்டு செல்வது நமது கடமையாகிறது” என்று குறிப்பிட்டிருந்தோம்.

மின்னம்பலம் கட்டுரை எதிரொலியாக முதல்வர் ஸ்டாலின் சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணி மண்டபத்தை நேரில் சென்று ஆய்வு செய்து பழுது பார்க்க அமைச்சர் சாமிநாதனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று(டிசம்பர் 24) மணிமண்டபத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.


அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கர்நாடக இசைக்கு தமிழ் கீர்த்தனைகளை இயற்றிய தமிழிசை மும்மூர்த்திகளான பதினான்காம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்த முத்துத் தாண்டவர், பதினெட்டாம் நூற்றாண்டில் தில்லையாடியில் பிறந்த அருணாசலக் கவிராயர் மற்றும் தில்லைவிடங்கள் கிராமத்தில் பிறந்த மாரிமுத்தாப் பிள்ளை ஆகிய மூவரின் நினைவாக 2000ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ’தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் நிறுவப்படும்’ என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் 2010 ஆம் ஆண்டு ரூ.1,51,00,000/- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பத்து ஒன்று இலட்சம் மட்டும்) மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 0.44 ஏக்கர் பரப்பளவு இடத்தில், 358.80 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞரின் தனிப்பட்ட வழிகாட்டுதலின் கீழ் மைய மண்டபத்தில் ஏழு கலசங்களுடன், எந்த திசையிலிருந்தும் தமிழிசை மூவரைக் காணும் வகையில் இம்மணிமண்டபம் வடிவியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த மணிமண்டபம் கடந்த காலங்களில் சரிவரப் பராமரிக்கப்படாததால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது எனக் கோரிக்கை மனு வரப்பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் படி, தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் சிறப்புப் பழுது பார்ப்பதற்கும், புதிய கழிப்பறை மற்றும் அலங்கார கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும், பொதுப்பணித்துறையின் மூலம் திட்ட மதிப்பீடு பெறப்பட்டு ரூ.47,02,500/-க்கு நிதியொப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சீரமைப்புப் பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.

பிரியா

ஒரே நாளில் 3.7கோடி பேருக்கு கொரோனா: திணறும் சீன மக்கள்!

“போதிய ஆக்ஸிஜன் இருப்பு வைத்திடுக”- மத்திய அரசு அறிவுரை!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.