விஜய் குட்டி திராவிட மாடலை உருவாக்குகிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் தவெக மாநாட்டுக்காக இன்று (அக்டோபர் 4) பந்தல்கால் நடப்பட்டது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய், “நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. நமக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாகச் சிலர் இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“’மற்ற கட்சிகளை போல நம் கட்சி சாதாரண கட்சி அல்ல’ என தனது அறிக்கையில் விஜய் குறிப்பிட்டிருக்கிறார். ஆண்ட கட்சி, ஆண்டு கொண்டிருக்கும் கட்சி, மத்தியில் பல மாநிலங்களை ஆளும் கட்சி, பல ஆண்டுகளாக பல கொள்கைகளை கொண்ட கட்சிகள் எல்லாம் இருக்கிறது. ஆனால் அவரது இந்த வார்த்தை தமிழக அரசியலில் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று எனக்குத் தெரியவில்லை.
அவரது கட்சியை உயர்வாக சொல்லலாம். ஆனால், மற்ற கட்சிகளை சாதாரண கட்சிகள் எனச் சொல்லுவதற்கு விஜய் எந்த அளவுக்கு உயர்ந்து விட்டார் என்பது எனக்கு தெரியவில்லை.
அரசியல் கட்சித் தலைவர் என்று வரும்போது, மற்ற அரசியல் கட்சிகளையும், கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் மதிக்க வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பெரியார் திடலுக்கு சென்று மரியாதை செலுத்திய விஜய் இன்று பிரம்ம முகூர்த்தத்தில் பந்தல்கால் நட்டிருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழிசை, “ நேரம் காலம் எல்லாம் எங்களை விட திமுகவினர் தான் அதிகம் பார்க்கிறனர். பெரியாரையும் கும்பிடுவோம். அதே நேரத்தில் மறைமுகமாக கடவுளையும் கும்பிடுவோம் என திமுக பாணியை விஜய் பின்பற்றுகிறார். எதற்கு இந்த இரட்டை வேடம். அதை விஜய் கைவிட வேண்டும். திராவிட மாடல் போல, ஒரு குட்டி திராவிட மாடலை விஜய் உருவாக்குகிறார்” என்று குறிப்பிட்டார்.
விஜய்க்கு இது கடைசி படமா என தெரியவில்லை. இனி எத்தனை கடைசி வரும் என தெரியவில்லை என்று குறிப்பிட்ட தமிழிசை, “விஜய் மாநாட்டுக்கு சினிமாவுக்கு வருவது போல் கூட்டம் வரும். அதில் சந்தேகமில்லை. மாநாட்டை விஜய் நடத்திக் காண்பித்துவிடுவார். ஆனால், கட்சியை எப்படி நடத்திக் காண்பிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மக்களை வேலைக்குச் செல்ல வேண்டாம், மாநாட்டிற்கு வாருங்கள் என சொல்வது நியாயம் இல்லை” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஹரிஷ் கல்யாண் நடிக்கும் பான் இந்திய திரைப்படம்!