Tamilachi Thangapandian who responded to Tamilisai

தமிழிசைக்கு பதிலடி கொடுத்த தமிழச்சி

அரசியல்

திமுக 40 தொகுதிகளிலும் வென்று எந்த பயனுமில்லை என்று பேசிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இன்று (ஜூன் 8) பதிலடி கொடுத்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 இடங்களையும் கைப்பற்றி வெற்றி பெற்றது. இது குறித்து தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது,

“தமிழகத்தில் முன்பு இருந்ததை விட பாஜக தற்போது அதிக வாக்குகள் பெற்றுள்ளது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், ஒரு இடங்களில் கூட வெல்ல முடியவில்லை என்பது கவலை அளிக்கிறது. எங்களுக்கு இடமில்லை என்பதை விட, எந்த பயனுமில்லாத திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிக இடம் கிடைத்தது வருத்தத்தை அளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

தமிழிசை சவுந்தரராஜனின் இந்த கருத்திற்கு தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்று (ஜூன் 8) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Tamilachi Thangapandian who responded to Tamilisai

இது தொடர்பாக தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்… அப்படியில்லை…

1. தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது.

2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார்.

3. ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை – அடங்கி அரவணைத்துச் செல்வது என்பதை பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக உணரத் தொடங்கியிருக்கும்; தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கும்.

4. இனி பாஜக அசைக்கவே முடியாத சக்தி என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.

5. ஜனநாயகத்தில் மக்களே அதிகாரமிக்கவர்கள்; தனிமனிதர்களோ அல்லது ஒரு இயக்கமோ மக்களைவிட அதிகாரம் கொண்டது இல்லை என்பதை இந்தத் தலைமுறைக்கு 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது.

ஒருவேளை தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும். மேலே சொன்னது எதுவுமே நடக்காமல் போயிருக்கலாம்…

தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது; மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது…

அதனால்தான் இதன் பெயர் நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது” என தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வரலெட்சுமி திருமணம்: ஸ்டாலினை நேரில் அழைத்த சரத்குமார்

சஞ்சு சாம்சனுடன் பிரச்சனையா? – போட்டுடைத்த ரிஷப் பண்ட்

+1
0
+1
0
+1
0
+1
9
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *