தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி : யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள்தான் இருக்கிறது. திமுக கூட்டணியில் இடம்பெறபோவது யார்… அதிமுக கூட்டணியில் இணையப் போவது யார்… விஜய்யின் தவெக யாருடன் கூட்டணி வைக்கும் என இப்போதே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது தமிழக அரசியல் களம்.

தேர்தல் ஆணையமும், தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் திடீரென நேற்று(நவம்பர் 8) தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக 2018 முதல் செயல்பட்டு வந்தவர் சத்ய பிரதா சாகு. இவரது தலைமையில் 2019, 2024 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.

6ஆண்டுகளாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த அவர் மாற்றப்பட்டு அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

30வது தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சனா பட்நாயக்  தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

யார் இவர்?

அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1974ஆம் ஆண்டு பிறந்தார். பொலிட்டிக்கல் சயின்ஸில் எம்.ஏ மற்றும் எம்ஃபில் பட்டம் பெற்று யுபிஎஸ்சி தேர்வெழுதி ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.  2002 தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரி.

2009 முதல் 2010 வரை சிப்காட் இயக்குநராக இருந்தார்.

2010 முதல் 2013 வரை நீலகிரி ஆட்சியராக பணியாற்றிய அர்ச்சனா 2013ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டார். கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, சாலையோர குழந்தைகளுக்கு, கட்டாயக் கல்வி வழங்க நடவடிக்கை எடுத்தார்.

2017ஆம் ஆண்டு சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ஒடிசாவுக்கு  அயல் பணியாக மூன்று ஆண்டுகள் சென்றார். 2020ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்தார்.

தமிழக தொழில் துறை ஆணையராக இருந்து வந்த அர்ச்சனா பட்நாயக் 2023 செப்டம்பர் மாதம் , தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2023ஆம் ஆண்டு ஒடிசா பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கிய போது, தமிழ்நாட்டில் இருந்து அர்ச்சனா பட்நாயக் தலைமையிலான குழு  ஒடிசாவுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டது.  ஒடிசாவில் பணியாற்றியதன் மூலம்  அங்கிருக்கும் அதிகாரிகளை நன்கு தெரிந்தவர் என்பதால் முதல்வர் ஸ்டாலின் அவரை செலக்ட் செய்து அனுப்பினார்.

“அர்ச்சனா பட்நாயக் நேர்மையானவர். அரசியல்வாதிகளுக்கு வளைந்துகொடுக்காதவர். சத்ய பிரதா சாகுவுக்கு தலைமை தேர்தல் அதிகாரியாக  6 ஆண்டுகள் பணிகாலம் முடிவடைந்தது. அவருக்கு பதிலாக வேறு ஒரு நேர்மையான ரிமார்க் இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்து கேட்டு, அர்ச்சனா பட்நாயக்கை தேர்வு செய்திருக்கிறது தேர்தல் ஆணையம்” என்கிறார்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில்.

இவர் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு முதல் தேர்தலாக 2026 சட்டமன்றத் தேர்தலை நடத்தவுள்ளதால்,  அர்ச்சனா பட்நாயக் பக்கம் அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது.

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

இரட்டையர்களின் காதல் வலை… சிக்கிய இளம்பெண்… அப்புறம் நடந்த ட்விஸ்ட்!

’கங்குவா’வுடன் வரும் கார்த்தி! : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

பாம்புக்கடி உயிரிழப்பை தடுக்க அரசு நடவடிக்கை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel