ராமர் கோவில் திறப்பு விழாவை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் பிரதமர் மோடி. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது பற்றிய ஆலோசனையை நடத்தினார்கள்.
தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரசாத சாஹு நேற்று (ஜனவரி 22) இறுதி வாக்காளர் பட்டியலை வெளிட்டார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மாநில தேர்தல் ஆணையர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள ஒர் சுற்றறிக்கை.
அதில், ‘ஏப்ரல் 16 ஆம் தேதி மக்களவைத் தேர்தலை நடத்துவது என்ற உத்தேசத்தோடு தேர்தல் பணிகளை வரையறுத்துக் கொள்ளுமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழுகட்டமாக நடந்தது. தமிழ்நாட்டில் 38 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்தது.
வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் பணப் பட்டுவாடாவால் நிறுத்தி வைக்கப்பட்டு, பின் 2019 ஆகஸ்டு 5 ஆம் தேதி நடந்தது.
இந்த நிலையில் வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலை எப்போது நடத்துவது என பள்ளித் தேர்வுகள், காலநிலை உள்ளிட்ட காரணிகளை பொறுத்து ஆலோசனைகளை வழங்குமாறு மாநில அரசுகளிடம் கேட்டிருந்தது தலைமைத் தேர்தல் ஆணையம்.
இந்த வகையில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே பிளஸ் டு பொதுத் தேர்வுகளை மார்ச் 1 முதல் மார்ச் 22 வரையிலும்,
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரையிலும் நடத்துவதாக திட்டமிட்டு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலை ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தலாம் என்ற ஆலோசனையை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
இந்த பின்னணியில்தான் தற்போது, ‘ஏப்ரல் 16 என்பதை மக்களவைத் தேர்தலின் உத்தேச தேதியாக கொண்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு’ தலைமைத் தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’மய்யத்தின் 2 நிபந்தனைகள்… ஏற்காவிட்டால் தனித்துப்போட்டி’ : மவுரியா
”நேதாஜி மட்டும் இல்லை என்றால் சுதந்திரம் கிடைத்திருக்காது” : ஆளுநர் ரவி