இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சரவையின் சீனியாரிட்டி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார்.
சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், இன்று (டிசம்பர் 14) அமைச்சராகப் பொறுப்பேற்றதுடன், தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, இன்று அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு, அமைச்சர் காந்தி வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள்து.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு, அமைச்சர் முத்துசாமி வசம் இருந்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் மதிவேந்தனுக்கு வனத்துறையும், அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத் துறையும் என மாற்றி ஒதுக்கப்பட்டுள்ளன.
சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு முன்னாள் படைவீரர்கள் நலத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவரிடம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையின் சீனியாரிட்டி பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் 10வது இடத்தில் உள்ளார்.
முதல் இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்க, இரண்டாவது இடத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
உதயநிதிக்கு அடுத்து 11வது இடத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளார்.
அதுபோல் உதயநிதிக்கு உரிய அங்கீகாரத்தை முதல்வர் வழங்குவார்; அவருக்கு அதற்கான தகுதிகள் உள்ளது எனப் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 23வது இடத்திலும், இந்து சமய அறநிலையத்துறை பி.கே.சேகர்பாபு 26வது இடத்திலும் உள்ளனர்.
உதயநிதியின் நண்பரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி 30வது இடத்தில் உள்ளார். 35 அமைச்சர்கள் உள்ள இந்த பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கடைசி இடத்தில் உள்ளார்.
ஜெ.பிரகாஷ்
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: தமிழக காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வங்கதேச டெஸ்ட்: ஏமாற்றிய சீனியர் இந்திய வீரர்கள்!