தமிழக சாலை பணிகள் – கட்கரி சொன்னது என்ன? தயாநிதி மாறன் பேட்டி!

அரசியல்

டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்த பின் தயாநிதி மாறன் எம்.பி.செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி பேசிய தயாநிதி மாறன் எம்.பி., “சென்னை முதல் ராணிப்பேட்டை வரை நான் சென்று வந்தேன். அங்கு நெடுஞ்சாலை மிக மோசமாக இருக்கிறது. 100 கி.மீட்டரை கடக்கவே 4 மணி நேரம் தேவைப்படுகிறது. எனவே ஒப்பந்தக்காரர்கள் செய்யும் தாமதத்தைப் பேசி சரிசெய்து சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “அண்மையில் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பணிகளைப் பார்வையிட்டேன். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முழு ஒப்புதல் தேவை.
சாலைப் பணிகளை மேற்கொள்ளத் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அனுமதி தேவைப்படுகிறது. இதற்கு சில சமயங்களில் 3 மாதங்கள் அல்லது சற்று கூடுதல் மாதங்களுக்கு மட்டுமே அவகாசம் வழங்கப்படுகிறது.

நிலம் எடுப்பதில், சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது” எனத் தமிழக அரசு மீது குற்றம்சாட்டியிருந்தார்.

தமிழகத்தில் சாலை அமைக்க மாநில அரசின் முழு ஒத்துழைப்பு தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி தமிழக முதல்வர் நிதின் கட்கரிக்கு கடிதம் ஒன்று எழுதினார்.

அதில்,காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் சென்னை – ராணிப்பேட்டை இடையேயான தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் சமீபத்தில் சில மாவட்டங்களுக்குச் செல்லும்போது தான் ரயிலில் பயணிக்க நேரிட்டது.

இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. வலியுறுத்தியபோது நீங்கள் அளித்த உறுதியற்ற பதில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Nadu Road Works

மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கத் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனால் நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய அமைச்சர் கூறிய பதில் துரதிர்ஷ்டவசமானது.

சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கி வருகிறது.சென்னை – ராணிப்பேட்டை இடையேயான தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த வேண்டும். ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்திட வேண்டும்.

சாலைகளை நல்ல நிலையில் பராமரித்திட வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பினையும் தமிழ்நாடு அரசு வழங்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை இன்று (பிப்ரவரி 13) மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து வழங்கினார் தயாநிதி மாறன் எம்.பி.

பின்னர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிக்காக அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக இருக்கிறது என முதல்வர் எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சரிடம் கொடுத்தேன்.

அவர் நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளையும் அழைத்து எங்கெங்கே பிரச்சினைகள் இருக்கிறது, எதையெல்லாம் சீர் செய்யலாம். எவ்வளவு விரைவில் சரி செய்யலாம் என ஆலோசித்து மக்கள் பயன்படுகிற வகையில் ஒத்துழைப்புத் தருகிறேன் என்று உறுதியளித்தார்.

சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்படும் என்று கூறினார்.

சென்னை – பெங்களூரு சாலையில் எங்கெங்கு பிரச்சினை இருக்கிறதோ அது சரி செய்யப்படும் என்றார். தேவைப்பட்டால் நெடுஞ்சாலை ஆணைய தலைவரைச் சென்னைக்கு அனுப்பி தமிழக தலைமை செயலாளரிடம் ஆலோசனை நடத்தி அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறினார்.

விரைவில் சென்னை – பெங்களூர் சாலை சரி செய்யப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன். சிறு சிறு பிரச்சினைகள் தான் இருக்கிறது. சாலை அமைக்க அனைத்து ஒத்துழைப்பும் தமிழக அரசு வழங்குகிறது.

வரும் மார்ச் மாதம் சென்னை – மதுரவாயல் சாலை திட்டப்பணிகள் தொடங்கப்படும் என்று அவர் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கான டெண்டர்கள் முடித்து மதிப்பீட்டுத் தொகை மார்ச் மாதத்துக்குள் ஒதுக்கப்படும் என்று கூறினார்.

திமுக கொண்டு வந்ததால் தான் இந்த திட்டம் கடந்த 10 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்தது. 7000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் முடிவுக்கு வர உள்ளது” என்றார்.

பிரியா

பிரபாகரனோடு களத்தில் நின்றவர்கள் சொல்வது என்ன?: வைகோ

திருவண்ணாமலைக் காரர்களும் இடைத் தேர்தலும்: எ.வ.வேலுவை புகழ்ந்த துரைமுருகன்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *