விநாயகர் சதுர்த்தி நாளான இன்று (ஆகஸ்ட் 31) தமிழகத்தில் விநாயகர் சிலைகளை வைக்க, தமிழக போலீசார் அனுமதி கோரி அலைந்து வருகிறார்கள்.
விநாயகர் சிலைகளுக்கு அனுமதி பெற சிலை நிறுவியர்கள்தானே போலீஸாரை சுற்றி வரவேண்டும்? போலீஸ் ஏன் சுற்றிவருகிறது என்ற கேள்வி எழுகிறதா?
விநாயகர் சதுர்த்தி விழா என்பது வட மாநிலங்களில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்பெல்லாம் தமிழகத்தில் இந்த விழா பெரிதாக கொண்டாடப்படாத நிலையில், தற்போது வடமாநிலங்களை மிஞ்சும் அளவுக்கு விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
களிமண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலை, அரை அடி முதல் சுமார் ஐம்பது அடி உயரம் வரையிலும், பத்து டன் எடை வரையில் நிறுவி சில நாட்களுக்கு பிறகு ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்று ஏரி, குளம், ஆறு, கடல் போன்ற பகுதிகளில் எடுத்து சென்று கரைத்துவிட்டு வருகின்றனர்.
அப்போது பல இடங்களில் கலவரம் ஏற்பட்டு வன்முறையாக மாறுவது, ஆளும் அரசுக்கு தர்ம சங்கடங்கள் ஏற்படுத்துவது உண்டு.
அதனால் நீதிமன்ற ஆலோசனைகள் படி விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க முறையாக அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“இந்த பின்னணியில், தமிழக காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் ஓரிரு நாட்களுக்கு முன்பு அவசர உத்தரவுகளும், சில படிவங்களும் அனுப்பப்பட்டு சில வாய்வழி உத்தரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
கிராமங்கள் முதல் மாநகரம் வரையில் பொது இடத்தில் விநாயகர் சிலைகளை வைப்பார்கள்.
காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்தால், அந்த விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் அல்லது நகரம் மற்றும் மாநகர வார்டு கவுன்சிலர்களிடம் ஒப்புதல் பெற்று,
மின்சார வாரியம், தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற்று,
இன்ஸ்பெக்டரிடம் ஒப்புதல் பெற்று, ஆர் டி ஒ யிடம் அனுமதி பெற்று கொடுத்த பிறகுதான் சிலையை வைக்க வேண்டும்.
இதெல்லாம் பிள்ளையார் சிலை வைப்பவர்களின் வேலை. ஆனால் கடந்த இரு நாட்களாக இதுதான் தமிழ்நாடு போலீஸாரின் வேலையாக மாறிவிட்டது” என்கிறார் செங்கல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர்.
இதைப்பற்றி இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இளநிலை அதிகாரியிடம் கேட்டோம்.
”பிள்ளையார் சிலையை வைக்க அனுமதி கேட்டு வந்தவர்கள் ஐந்து பேர்தான். அனுமதி இல்லாமல் வைத்திருப்பவர்கள் பலபேர்.
ஆனாலும் அந்த சிலைகளை அகற்ற எங்களுக்கு உத்தரவிடவில்லை. மாறாக அனுமதி இல்லாமல் வைத்து இருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து சிலையை வைப்பவரின் ஆதார் கார்டு வாங்கி,
அனுமதி கோரும் விண்ணப்பத்தை நாங்களே எழுதி, மின்சார வாரியம், தீயணைப்பு துறை, ஊராட்சி மன்ற தலைவர், இன்ஸ்பெக்டர் மற்றும் ஆர்டிஒயிடம் நேரடியாக சென்று அனுமதி பெற்று கொடுத்து வருகிறோம்.
போலீஸே பிள்ளையார் சிலையை வாங்கி கொடுக்கவேண்டும் என்றுதான் சொல்லவில்லை” என்றார்.
விநாயகர் சிலைகளை வைக்க ஏற்பாடுகள் செய்து கொடுத்த தமிழக காவல் துறையினர் பிள்ளையார் சிலைகளுக்கு பாதுகாப்பாக செப்டம்பர் 5ஆம் தேதி வரையில் அனைத்து அதிகாரிகளும் நைட் ரவுன்ட்ஸில் இருக்கவேண்டும் என்பது உறுதியான உத்தரவாம்.
வணங்காமுடி
பல்வேறு நிபந்தனைகளுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி!