பட்ஜெட் உரையில் தமிழ்நாட்டுக்கு எந்தவித திட்டங்களும் நிதி ஒதுக்கீடும் அறிவிக்காத நிலையில், `தமிழ்’, `தமிழ்நாடு’ என்ற வார்த்தை ஒரு முறை கூட இடம்பெறாதது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) 2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில் வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.ரூ.2.66 லட்சம் கோடி, நகர்ப்புற வீட்டுவசதித்துறைக்கு ரூ.10 லட்சம் கோடி, கல்வித்துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான பிரதமரின் தொகுப்புத் திட்டத்திற்கு ரூ.1.4 லட்சம் கோடி என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
அதே போன்று கூட்டணி கட்சியை சேர்ந்த நிதிஷ்குமாரின் பீகார் மாநிலத்திற்கு சுமார் 60 ஆயிரம் கோடியும், சந்திர பாபு நாயுடுவின் ஆந்திரா மாநிலத்திற்கு ரூ. 15 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ள பாதிப்பு பேரிடர் நிவாரண நிதியாக அசாம், இமாச்சல், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழும் இல்லை… தமிழ்நாடும் இல்லை!
எனினும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதே வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு எந்த நிதி ஒதுக்கீடும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் மற்றும் நிதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த கோரிக்கையையும் மத்திய அரசு தனது பட்ஜெட்டில் பரிசீலிக்கவில்லை.
மேலும் கடந்த கால பட்ஜெட் வாசிப்பின் போது ’திருக்குறள்’, ’புறநானூறு’ ஆகியவற்றில் இருந்து சில வரிகளை மேற்கோள் காட்டி பேசி வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இம்முறை ஒரு தமிழ் வார்த்தை கூட இடம்பெறாமல் பட்ஜெட் உரையை வாசித்து முடித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி உட்பட எந்தவித அறிவிப்பும், நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் அதற்கு திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டைப் போன்றே கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் பெயரும் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ்நாட்டையும், தமிழையும் மத்திய அரசு வஞ்சித்துள்ளதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பதவியில் இருப்பதற்கான இன்சூரன்ஸ்!
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “தொடர்ந்து பதவியில் இருப்பதற்கான Insurance-ஆக இந்த பட்ஜெட்டை பயன்படுத்தியுள்ளது மோடி அரசு. இதன்மூலம் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவை சந்தோஷப்படுத்தப் பார்க்கின்றனர். தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்துவிட்டு ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு அள்ளி கொடுத்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
பீகார், ஆந்திராவுக்கான பட்ஜெட்!
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியும், பொருளதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், “இது பீகார், ஆந்திராவுக்கான பட்ஜெட். தமிழ்நாடு என்ற வார்த்தையே நிதியமைச்சர் வாயில் இருந்து வரவில்லை. திருக்குறளும் சொல்லவில்லை. கார்ப்ரேட்டுகளுக்கு வரியை ஏற்றவில்லை.
மேலும் சமீபத்தில் இத்தனை ரயில் விபத்துகள் நடந்தபோதும் ஒன்றிய பட்ஜெட்டில் ரயில்வே என்ற வார்த்தை ஒருமுறை கூட இடம்பெறவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தங்கம் முதல் புற்றுநோய்களுக்கான மருந்து வரை… எது எதற்கு வரி குறைப்பு!
பட்ஜெட் : உங்கள் சம்பளம் எவ்வளவு? வருமான வரி வரம்பில் மாற்றம்!