தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் – அமித்ஷா உறுதி : டி.ஆர்.பாலு பேட்டி!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று (ஜனவரி 13) தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்பிக்கள் வைகோ, ரவிக்குமார், ஜெயக்குமார், சுப்புராயன், வெங்கடேசன், நவாஸ் கனி, சின்னதுரை ஆகியோர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.37,907 கோடியை விடுவிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “கடந்த டிசம்பர் மாதம் 3, 4 மற்றும் 16,17 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழக எம்.பிக்கள் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வெள்ளச் சேதம் குறித்து விரிவாக எடுத்துரைத்தோம்.
கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி பிரதமர் மோடியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து தேசிய பேரிடரிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக விரைந்து நிதியளிக்க வேண்டும் என்று மனு அளித்தார்.
இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்பு குழுவினர் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டனர்.
தமிழகத்திற்கு தேவையான ரூ.37,907 கோடியை விரைந்து வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஜனவரி 27-ஆம் தேதிக்குள் நிதி வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் புறக்கணிப்பதாக இருந்தால் மத்திய அமைச்சர்களையோ, மத்திய குழுவினரையோ ஆய்வு செய்வதற்காக தமிழகத்திற்கு அனுப்பியிருக்க மாட்டார்கள்.
வெள்ள சேதம் ஏற்பட்ட பகுதிகளை நிதியமைச்சர் சென்று பார்வையிடுவது இதுதான் முதல்முறை. தமிழகத்தின் மீது மத்திய அரசு கரிசனத்தோடு இருப்பதாக தான் நாங்கள் கருதுகிறோம். நிதி ஒதுக்கிய பிறகு தான் ஓர வஞ்சனையாக செயல்படுகிறார்களா இல்லையா என்பது தெரியவரும்” என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? – ஸ்டாலின் பதில்!
இந்தியா கூட்டணி : ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை மறுத்த நிதிஷ் குமார்