சட்டப்பேரவை நேரலை : தமிழக அரசு பதில்!

அரசியல்

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 20) தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக் கோரி லோக் சத்தா கட்சி தமிழக தலைவர் ஜெகதீஸ்வரன் 2012ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதே கோரிக்கையை வைத்து 2015ஆம் ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் கடந்த ஜூன் 6ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டப்பட்டது. அதன்படி தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் இன்று கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “ஆளுநர் உரை, பட்ஜெட், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதில் அளிப்பது, அரசு 110விதியின் கீழ் வெளியிடும் அறிவிப்புகள் ஆகியவை சபாநாயகரின் ஒப்புதலுடன் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளம் மூலமாகவும் வெளியிடப்படுகிறது.

அதேசமயம் சட்டமன்ற அதிகாரிகள் மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள், கடந்த 2021 நவம்பரில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை மற்றும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய பின்பற்றப்படும் நடைமுறைகள் பற்றி ஆய்வு செய்தனர்.

இதில் கோவா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மற்றும் டெல்லி சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதும், கேரளாவில் கேள்வி நேரம் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுவதும், ஒடிசாவில் எடிட் செய்யப்பட்டு அன்றைய தினம் மாலை சட்டப்பேரவை நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்படுவதும் தெரியவந்தது.

இந்த அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஜனவரி 6 முதல், கேள்வி நேரம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 2023 எப்ரல் 12 முதல் கவன ஈர்ப்பு தீர்மானங்கள், முக்கிய தீர்மானங்கள் மீதான விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

Tamil Nadu Legislative Assembly will be broadcast live

இது தவிர, அன்றைய தினம் நடந்த பேரவை நிகழ்வுகளை எடிட் செய்து சில மணி நேரங்களில் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படுகிறது, அதில் முக்கிய தலைவர்கள், எதிர்கட்சி உள்ளிட்ட உறுப்பினர்களின் உரைகளும் இடைபெறும்.
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர் தான் முடிவெடுக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக கொறடாவும் முன்னாள் அமைச்சருமான வேலுமணி இவ்வழக்கில் தன்னையும் இணைக்குமாறு மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அதில், “இவ்வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சட்டமன்ற செயலாளர் தரப்பில் நேரடி ஒளிபரப்பிற்கு சாத்தியமில்லை. அவை குறிப்புகள் அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டது. சட்டமன்றத்தில் அதிமுக பிரதிநிதிகள் எப்படி செயல்படுகின்றனர் என்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

2011 – 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், சட்டமன்றத்தில் ஆளும்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்கள் பதிவு செய்யப்பட்டு எடிட் செய்யப்பட்டு தொலைக்காட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போதைய அரசு எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளை மறைத்து குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே அனுப்புகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் வேலுமணி தனது மனுவில், “நாடாளுமன்றத்தை போல சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய எந்த தடையும் இல்லை. அதுபோன்று நேரடி ஒளிபரப்பு செய்வதால் தமிழ்நாடு அரசிற்கு எந்த கூடுதல் செலவீனமும் இல்லை.

மத்திய அரசு ‘நேவா’ செயலியை அறிமுகபடுத்தியுள்ளது. அதன் மூலமாக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும். இதற்கு ஆகும் செலவில் 60% மத்திய அரசும் 40% மாநில அரசும் ஏற்றுக்கொள்வது என தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Legislative Assembly will be broadcast live

நீதிமன்ற நடவடிக்கையும் நேரடி ஒளிபரப்பு துவங்கி உள்ள நிலையில், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரும் வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 20) விசாரணைக்கு வந்தது

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “எது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமோ அது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். நேரமில்லா நேரத்தை உடனடியாக நேரடி ஒளிபரப்பு செய்யமுடியாது. இதுகுறித்து சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர், “பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமென விஜயகாந்த் தாக்கல் செய்த வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தன்னை இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற எஸ்.பி.வேலுமணி மனுவை ஏற்கக்கூடாது’ என்று வாதிட்டார்.

இதை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பிரியா

விஜய் குறித்து அவதூறு: பாஜக பெண் நிர்வாகி கைது!

செந்தில் பாலாஜி மனைவி கேவியட் மனு தாக்கல்!

‘கலைஞர் கோட்டம்’: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *