“சென்னையைச் சுற்றி ரூ.6,778 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 3310 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் நடைபெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 10) விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
“முதலமைச்சர் கலைஞர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 1971-1972ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அளித்தபோது; அந்த அறிக்கை பத்தி 19, “நகர்ப்புறங்களின் வசதி வாய்ப்புகளைக் கிராமப்புறத்து மக்கள் ஒரு கால கட்டத்திற்குள் பெற்றிட வேண்டுமென்னும் குன்றா ஆர்வத்துடன் இந்த அரசு செயல்படும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு குறிப்பிட்டதற்கு ஏற்பவே, குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி, போக்குவரத்து வசதி முதலிய அனைத்து வசதிகளையும் கிராமப்புறங்களில் ஏற்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். அதன் காரணமாக, தமிழகம் மற்ற மாநிலங்களைவிட மிக வேகமாக, நகரமயமாகி வந்துள்ளது.
இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 1991-ல் 25.71 சதவீதம் என இருந்தது. 2011-ல் 31.16 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில், தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை 2011ம் ஆண்டில் 48.45 சதவீதம் என உயர்ந்து இந்திய சராசரியைவிட ஏறத்தாழ 17.29 சதவீதம் அதிகரித்து நகரமயமாதலில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இதன் விளைவாக, ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சியாகவும் வளர்ச்சி பெறுகின்றன.
ஓர் ஊராட்சியில் 10,000 மக்கள் தொகையும் ரூ.30 லட்சம் வருமானமும் இருந்தால், அந்த ஊராட்சியைப் பேரூராட்சி ஆக்கலாம் என்றும், 30,000 மக்கள் தொகையும் ரூ.50 லட்சம் வருமானமும் இருந்தால் அந்தப் பேரூராட்சியை நகராட்சியாக உயர்த்தலாம் என்றும், 3 லட்சம் மக்கள் தொகையும் 30 கோடி ரூபாய் வருமானமும் இருந்தால் அந்த நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தலாம் என்றும் நடைமுறையில் உள்ள விதிகளின் படி, தமிழகத்தில் தற்போது, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன.
ஏற்கனவே, 6 மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மேலும், காரைக்குடி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக உயர்த்தப்படும் என அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இப்படி நகர்ப்புற வசதிகள் வளர வளர, நகராட்சி நிர்வாகமும் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வசதிகளைப் பெருக்குவதில் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்:
நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திட ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் “கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்” புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்:
நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம், பெருநகர சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களிலும், ஏனைய 14 மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலத்திலும், 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒரு நகராட்சி என 7 நகராட்சிகளிலும், 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சி வீதம் 37 பேரூராட்சிகளிலும் செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2,04,860 பேர்களுக்கு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
சீர்மிகு நகரத் திட்டம்:
மக்களின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்துக்கான உட்கட்டமைப்பு, சுத்தமான மற்றும் நீடித்த நிலையான சுற்றுச்சூழல் மற்றும் சீர்மிகு தீர்வுகள் வழங்குதல் போன்ற நோக்கங்களுடன் சீர்மிகு நகரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய 11 மாநகராட்சிகளில் சீர்மிகு நகரத்திட்டம் தமிழக அரசின் பங்களிப்பு ரூ.5500 கோடி, மத்திய அரசின் பங்களிப்பு ரூ.5390 கோடி என மொத்தம் ரூ.10,890 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
110 விதியின்கீழ் அறிவித்த சாலை மேம்பாட்டுத் திட்டம்:
முதல்வர் ஸ்டாலின் 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் விதி எண்.110ன் கீழ், “649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 55,567 கி.மீ. சாலைகளில், குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம் ஆகியவற்றால் பழுதடைந்த சாலைகள் மற்றும் 2016-17 ஆம் ஆண்டுக்கு முன்பு போடப்பட்டு பழுதடைந்த நிலையில் உள்ள 20,990 கி.மீ. நீளமுள்ள சாலைகள் சீரமைக்கப்படும்” என அறிவித்தார்.
அதன்படி, 20 மாநகராட்சிகள் (சென்னை மாநகராட்சி தவிர) மற்றும் 138 நகராட்சிகளில் சுமார் 11,872 கி.மீ நீளமுள்ள சேதமடைந்த சாலைகளை நான்கு ஆண்டுகளில் சீரமைக்க உத்தரவிடப்பட்டு; சேதமடைந்த சாலைகளில் 9,346 கி.மீ. சாலைகள் நடப்புத் திட்டங்களின் கீழ் சீரமைக்கவும் மீதமுள்ள 2,526 கி.மீ நீளமுள்ள சேதமடைந்த சாலைகள் அரசின் சிறப்பு நிதி ரூ.1,000 கோடியில் 2022-2023 முதல் 2025-2026 வரை நான்கு ஆண்டுகளில் பணி முடிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற பசுமையாக்கம்:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பல ஆண்டுகளாக குவிந்திருந்த தேக்கத் திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டு மீட்டெடுக்கப்பட்ட நிலங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மரங்களை நட்டு வளர்க்க 41 உள்ளாட்சி அமைப்புகளில் மீட்கப்பட்டுள்ள 127.84 ஏக்கர் நிலத்தில் ரூ.1.66 கோடி மதிப்பீட்டில் நாட்டு மரங்களான நாவல், நெல்லி, கொடுக்காப்புளி, பாதாம், வேம்பு, புளியமரம் மற்றும் புங்கன்மரம் போன்ற 57,505 மரங்கள் நட அனுமதிக்கப்பட்டு இதுவரை 56958 மரங்கள் நடப்பட்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது.
மழைநீர் வடிகால் பணிகள்:
சென்னை புற நகர்ப்பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி மற்றும் மாங்காடு, குன்றத்தூர் மற்றும் திருவேற்காடு நகராட்சிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு 30.31 கி.மீ நீளத்துக்கு ரூ.82.15 கோடி மதிப்பீட்டில் 21 மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், தாம்பரம், ஆவடி மற்றும் கடலூர் மாநகராட்சி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம் கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, பொன்னேரி மற்றும் திருவேற்காடு நகராட்சிகளில் 69.56 கி.மீ நீளத்துக்கு ரூ.145.24 கோடி மதிப்பீட்டில் 53 மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சங்கரப்பேரி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தூத்துக்குடி புறநகர் மற்றும் முத்தையாபுரம் போன்ற பகுதிகள் வடகிழக்கு பருவ மழையின்போது ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் மழைநீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளாகியது.
மேற்படி சூழ்நிலை இனி வருங்காலங்களில் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம், மழைநீர் வடிகால் அமைத்து மழை வெள்ளத்தினைத் தவிர்க்கும் வண்ணம் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியானது நான்கு தொகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் முதல்கட்டப் பணியானது தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.230.90 கோடி மதிப்பீட்டில் 25.386 கி.மீ நீளத்துக்கும், இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட பணிகள் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.122.86 கோடி மதிப்பீட்டில் 56.359 கி.மீ நீளத்துக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி 2022-2023ம் திட்டத்தின் கீழ் ரூ.42.55 கோடி மதிப்பீட்டில் 43.094 கி.மீ நீளத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொகுதி 4ல் முதற்கட்டமாக நான்கு சிப்பங்களாக ரூ.82.98 கோடி மதிப்பீட்டில் 36.367 கி.மீ நீளத்துக்கும், மாநில பேரிடர் தடுப்பு நிதி 2023-24-ன் கீழ் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் 3.700 கி.மீ நீளத்துக்கும் மழைநீர் வடிகால் அமைக்க பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நகர்ப்புற நலிந்தோர் நலன்:
நகர்ப்புறத்தில் வாழும் தெருவோர வியாபாரிகளுக்கான வாழ்வதாரக் கூறுகள் மற்றும் நகர்ப்புறத்தின் வீடற்றோருக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய 142 தங்கும் விடுதிகள்
மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள்:
3 ஆண்டுகளில் ரூ.8,672 கோடி மதிப்பீட்டில் 13,387 கி.மீ. நீள சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1,261 கி.மீ. சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு 2513 கி.மீ. சாலைப் பணிகள் ரூ.12.72 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகின்றன.
கொசத்தலை ஆறு மற்றும் சென்னையைச் சுற்றி நடைபெறும் பணிகள் உட்பட ரூ.6,778 கோடி மதிப்பீட்டில் 2,641 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டும், மேலும், 669 கி.மீ. நீளப் பணிகள் நடைபெறுகின்றன. 8,911 கோடி மதிப்பீட்டில் 28 பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. 858 கோடி மதிப்பீட்டில் 7.42 இலட்சம் தெரு விளக்குகளை LED விளக்குகளாக மாற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
1,200 கோடி மதிப்பீட்டில் 55 பேருந்து நிலையப் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் 100 பேருந்து நிலையப் பணிகள் நடைபெறுகின்றன. 690 கோடி மதிப்பீட்டில் 62 சந்தைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 86 இடங்களில் சந்தைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. 100 அறிவுசார் மையங்கள் நகராட்சி மாநகராட்சியால் தொடக்கப்பட்டுள்ளன.
ரூ.198 கோடி மதிப்பீட்டில் 79 அறிவுசார் மையங்களுக்குக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டும், 21 அறிவுசார் மையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றும் வருகின்றன. ரூ.424 கோடி மதிப்பீட்டில் 681 பூங்கா அபிவிருத்திப் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் 396 பூங்கா மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.700 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, கரைகளைப் பலப்படுத்தப்படுத்திச் சீரமைக்கப்பட்டடுள்ளன.
ரூ.373 கோடி மதிப்பீட்டில் புதிய மின் மயானங்கள் நிறுவும் பணிகளும் நவீனப்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன. ரூ.153 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான அலுவலகக் கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.771 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பறை கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன.
ரூ.316 கோடி மதிப்பீட்டில் பயோமைனிங் மூலம் தேக்கத் திடவுக்களை அகற்றி, நிலத்தினை மீட்டெடுக்கும் பணி பல்வேறு நகரங்களில் முடிவுறும் நிலையில் உள்ளன. அவற்றின் மூலம் ஏறத்தாழ 10,000 ஏக்கர் நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு நிழல்தரும் மரங்கள் நடப்பட உள்ளன.
திறந்த வெளியில் மலம் கழித்தலை அகற்றிட ரூ.152 கோடி மதிப்பீட்டில் 72,214 தனி நபர் கழிவறைகளும் 2,081 சமுதாயக் கழிப்பிடங்களும் கட்டி முடிக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன. ரூ.500 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு வாகனங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
புதிய நியமனங்கள்:
கடந்த மூன்றாண்டு காலத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவுகளில் உள்ள பணியிடங்களான இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர், பணி ஆய்வர், பதிவறை எழுத்தர், செயல்திறனற்ற உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆக மொத்தம் 1405 பேருக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்த்தில் படித்த இளைஞர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர் பற்றாக்குறையைப் போக்கிட 2,500 பேரைத் தேர்வு செய்து நியமனம் செய்யலாம் என உத்தரவிட்டார்.
அதன்படி, 2,500 பேரை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு வைத்து யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ, அவர்களைப் பணிக்கு எடுத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டு; அதன்படித் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. தேர்வுத் தாள்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் 2,500 பேருடன் மேலும் 3,000 பேரும் தேர்வு செய்யப்பட்டு நகராட்சிகளில் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
விருதுகளால் பாராட்டப்படும் தமிழ்நாடு: நகரங்கள் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் முன்னுரிமையளித்து வருகிறார். இதன் காரணமாக, தூய்மை கணக்கெடுப்பு மாநில தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 22வது இடத்தில் இருந்து தற்போது 2023 ஆம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலில் 10வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.
மேலும் ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் தரவரிசையில் திருச்சி மாநகராட்சி மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. ஒரு லட்சத்துக்கு குறைவான நகரங்களின் தரவரிசை பட்டியலில் மாநில அளவில் மறைமலைநகர் நகராட்சி முதலிடம் பெற்றுள்ளது. தெற்கு மண்டலத்தை சார்ந்த மாநிலங்களில் உள்ள நகரங்களில் 15,000க்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் தரவரிசை பட்டியலில் கீழ்வேலூர் பேரூராட்சி முதலிடம் பிடித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில், புதுமையான திட்டங்களினால் பல்வேறு பெருமைகளைப் பெற்று நகராட்சி நிர்வாகத்துறையின் பணிகளால் நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மலர் டீச்சர்… சாய் பல்லவிக்கு பதில் நடிக்க வேண்டியது யார் தெரியுமா?
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : மாலை 5 மணி நிலவரம் என்ன?