வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக, பிரதமர் மோடி தலைமையில் நேற்று (பிப்ரவரி 29) நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்தது.
சில வாரங்களுக்கு முன் கோவையில் நடந்த பாஜக நாடாளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், “இந்த மாத இறுதியில் பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளிவரும். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொகுதிகளும் இருக்கும். தயாராக இருங்கள்” என்று சொல்லியிருந்தார். இதை மின்னம்பலத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
இந்த பின்னணியில்… தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிக்கையை வெளியிடும் முன்பாகவே தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக தயாராகி வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரம் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தினார். அதாவது உபியில் பாஜக பலம் குறைந்த தொகுதிகள் மற்றும் கடந்த முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அந்த தொகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிப்பது, பிரச்சாரத்தைத் தொடங்குவது பற்றி ஆலோசனை நடத்தினார். பல மாநிலங்களிலும் இந்த ரீதியான ஆலோசனை நடந்தது.
அந்த ஆலோசனைகளின்படி பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வேட்பாளர்களின் முதல் பட்டியலை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் பிப்ரவரி 29 ஆம் தேதி இரவு 11 மணிக்கு டெல்லியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் கூடியது. இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை இந்த ஆலோசனை நீடித்தது.
பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பாஜக மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், கோவா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#WATCH | BJP Central Election Committee (CEC) meeting concludes; Prime Minister Narendra Modi leaves from the BJP headquarters, in Delhi. pic.twitter.com/CIMprdMPKf
— ANI (@ANI) February 29, 2024
அதேநேரம் பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் தொடர்பான பரிசீலனை முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன என்று என்.டி.டி.வி. ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பஞ்சாபில் அகாலி தளம், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜன சேனா மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆகிய மூன்று மாநிலங்களிலும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருப்பதால் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இந்த மாநிலங்கள் இடம்பெறுவது இன்னும் இறுதியாகவில்லை என்கிறார்கள் டெல்லி பாஜக வட்டாரங்களில்.
17 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 150 வேட்பாளர்களின் பட்டியல் இந்த கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்தியா கூட்டணி ஒவ்வொரு மாநிலமாக தொகுதிப் பங்கீட்டை அறிவித்து வருவதால், இந்தியா கூட்டணிக்கு உளவியல் அழுத்தம் கொடுக்கும் வகையில் பாஜக அதிரடியாக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.
பகலில் பரப்புரைக்கு பல மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரம் இல்லாமையால் டெல்லியில் நள்ளிரவில் ஒன்று கூடி இந்த முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளனர்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காஸாவின் பலி எண்ணிக்கை 30,035 ஆக உயர்வு!
வீல்சேர் வழங்காததால் உயிரிழந்த முதியவர் : ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்!