நாங்குநேரியில் சக மாணவர்களால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திரா செல்வியை மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் கண்ணதாசன் இன்று (ஆகஸ்ட் 18) நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.
கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திரா செல்வியை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். இதனை தொடர்ந்து இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். சபாநாயகர் அப்பாவு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாணவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னத்துரை மற்றும் அவரது தங்கையை மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் கண்ணதாசன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அரசு குற்றவியல் வழக்கறிஞர் மோகன் தாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் மாணவர் மற்றும் அவரது தாயிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மருத்துவர்களிடம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
நெல்லை சரவணன்
நிலவிற்கு மிக அருகில் சென்றது சந்திரயான் 3
“மோடி ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது” – ஸ்டாலின்