தமிழகம் இந்தியாவின் இரண்டாவது பெரிய தொழில்மயமான மாநிலமாக வளர்ந்து இருந்தாலும் சாதிய சமூக கட்டமைப்பில் சற்று இளக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர அதில் இம்மியளவும் உடைப்பை ஏற்படுத்தவில்லை என்பது எதார்த்த உண்மை.
இதற்கு முக்கிய காரணம் சாதிய சமூகமாக நாம் தொடர்வதற்குக் காரணம்: தொழிலாளர்கள் உழைத்து உருவாக்கும் செல்வத்தை பண ஊடகத்தின் வழியாக முதலாளித்துவ-பார்ப்பனிய ஏகாதிபத்தியவாதிகள் உறிஞ்சிக் கொள்வது.
விடுதலைக்குப் பிறகான உற்பத்தி தொழில்நுட்ப சுயசார்பு மற்றும் மாநில சுயாட்சி அரசியலில் இருந்து திராவிட கட்சிகள் விலகி இப்படியான சுரண்டலுக்குத் துணைபோனது இன்னொரு காரணம். இந்தச் சுரண்டல் பொறிமுறையின் மையக்கருவியாக விளங்குவது பணம். முதலாளித்துவ உற்பத்தியின் மூளையான இந்த மூலதனத்தைக் கைப்பற்றிக் கட்டுப்படுத்தி அதன் மதிப்பை மாற்றுவதன் வழியாகவே உலக உள்ளூர் பணமுதலைகள் நம் உழைப்பை உறிஞ்சுகின்றன.
ரூபாய் மதிப்பைச் சரித்து டாலர் மதிப்பை உயர்வாக வைப்பதன் மூலம் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களின் விலைகளையும் இங்குள்ள சொத்துக்களின் மதிப்பையும், உழைப்பாளர்களின் ஊதியத்தையும் மலிவானதாக மாற்றி பெருலாபம் பார்க்கிறார்கள் உலக ஏகாதிபத்தியவாதிகள். பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியவாதிகளோ பொருட்களின் விலைகளையும் வரிகளையும் உயர்த்தியும், தொழிலாளர்களை குறைகூலி ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றியும் தங்களின் பங்கைக் கறந்து கொள்கிறார்கள். மூலதனமும், தொழில்நுட்பமும் வளராமல் நாம் முழுமையான முதலாளித்துவ வர்க்க சமூகமாக மாறமுடியாது.
இந்த சுரண்டல் தொடரும்வரை இங்கே மூலதனம் திறளாது. இந்தச் சுழற்சி தொடரும்வரை நமது சமூகம் மாறாது எனும் நிலையில் இதனை உடைத்துப் புதிய சுழற்சியை ஏற்படுத்தும் அளவுக்கு இங்கே புரட்சிகர சூழல் இல்லை. எனவே நடைமுறை சாத்தியமானது இந்தச் சுழற்சியில் இடையீடு செய்து முதலில் மூலதனத்தை நாம் கட்டுப்படுத்துவதாகவும் பின்பு கைப்பற்றி அதன் மதிப்பை நிர்ணயிப்பதாகவுமே இருக்கமுடியும்.
ஏற்கனவே உள்ளே நுழைந்து விளையாடிக் கொண்டிருக்கும் அந்நிய டாலர் மூலதனத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை நம்மிடம் இல்லை. இணையம், இணையப் பொருட்களின்றி வாழமுடியாத சூழலுக்கு வந்துவிட்ட நிலையில் நாம் அவர்களை எதிர்த்து நிற்க எந்தத் தொழில்நுட்ப பொருளாதார அடித்தளமும் இல்லை.
இந்நிலையில் இவர்கள் அதிக விலைவைத்து பொருட்களை விற்று நம் உழைப்பை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்துவது மட்டுமே சாத்தியமானது. எனவே ஏகாதிபத்தியச் சுரண்டலைத் தடுப்பதற்கான இடைக்கால தீர்வு சந்தையில் போட்டிக்கு நிற்கும் சீன இணைய, தகவல்தொழில்நுட்ப பொருட்களை அனுமதிப்பது; அதன்மூலம் இப்பொருட்களின் விலைகளை வீழச்செய்து நம் இழப்பைக் குறைப்பது; அதனைச் செய்யும் அதிகாரம் உள்ள ஒன்றிய அரசியலை இதனை நோக்கி நகர்த்துவது. நீண்டகால நோக்கில் நாமே குறைவான செலவில் இந்தப் பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் நமது தொழிற்துறை கொள்கைகளை வகுத்துக்கொண்டு அதனை நோக்கி முன்னேறுவது.
ஏகாதிபத்திய டாலர் சுரண்டலைத் தடுக்க: இடைக்கால தீர்வு சந்தையில் அந்நிய நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியை ஏற்படுத்துவது; நீண்டகால தீர்வு நமது தொழிற்துறை வலிமையைக் கூட்டி உற்பத்தி தொழில்நுட்ப சுயசார்பை அடைவது.
டாலர் மூலதனம் ரூபாயை மலிவாக்கி அதன் தரத்தைக் (quality) குறைப்பதன் மூலம் நம்மை சுரண்டுகிறது என்றால் பார்ப்பனியம் அதன் அளவைக் (quantity) கூட்டி நீர்க்கச் செய்து அதன் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் வழியாக நம்மை உறிஞ்சிக் கொழிக்கிறது.2014இல் சுற்றோட்டத்தில் இருந்த பணத்தின் அளவு 13 இலட்சம் கோடி. தற்போது அது 31.4 இலட்சம் கோடிகளாக உயர்ந்திருக்கிறது. இதேகாலத்தில் இந்தியப் பொருளாதாரம் 20.4 இலட்சம் கோடி டாலரிலிருந்து 33.9 இலட்சம் கோடி டாலர்கள் மட்டுமே வளர்ந்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சி 66 விழுக்காடாக இருக்கும்போது சுழற்சியில் இருக்கும் பணத்தின் அளவு மட்டும் 142 விழுக்காடு உயரவேண்டிய அவசியம் என்ன?
எண்கள் இலட்சம் கோடிகளில்; புள்ளிவிவரங்கள்; டெக்கான் ஹெரல்டு, திஒயர், மின்ட், worlddata.info
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட வங்கி சீர்திருத்த வாராக்கடன் கொள்கையின் காரணமாக வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் கோடிகளை வாராக்கடனாக அறிவிக்கின்றன. அது 2018இல் உச்சத்தைத் தொட்டு தற்போது பாதியாகக் குறைந்திருக்கிறது. அதேசமயம் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கும் வாராக்கடன் அளவு குறைவதாகத் தெரியவில்லை. இப்படி அறிவிக்கப்பட்ட வாராக்கடன் வசூலாகும் அளவு வெறும் பதினான்கு விழுக்காடே (விவேக் கவுல்). இதன்படி ஆண்டுதோறும் வாராக்கடன் பெருகுகிறது; வசூலாவதும் சொற்பம்; ஆனால் நாட்டின் மொத்த வாராக்கடன் அளவு மட்டும் குறைகிறது.
எனில் இந்த இழப்பை வங்கிகள் மக்களிடம் இருந்து குறைந்தபட்ச வைப்புத்தொகை ( 21,000 கோடி) பணம் எடுக்க (8289 கோடி), பரிமாற்ற (6254 கோடி) அதிக கட்டணம் அறவிடுவதன் வாயிலாகவும் (மொத்தம் 35,587 கோடி), வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்டவற்றுக்கு அதிக வட்டி வசூலிப்பதன் வாயிலாகவும் சேமிப்புக்குக் கொடுக்கும் வட்டிவிகிதத்தை குறைப்பதன் மூலமாகவும் சரிசெய்கின்றன.
2011-12 இல் சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்துக்கு 4 விழுக்காடும் நீண்டகால சேமிப்புக்கு 9-9.25 விழுக்காடும் வட்டி கொடுத்த வங்கிகள் தற்போது முறையே 2.7-3 விழுக்காடும், 5.3-5.6 விழுக்காட்டு அளவு மட்டுமே வட்டி தருகின்றன. அப்போது ஒன்பது விழுக்காட்டுக்கும் மேலாக இருந்த விலைவாசி உயர்வுக்கு இணையாக வட்டி கொடுத்த வங்கிகள் இன்று ஆறு விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கும்போது இதற்கும் குறைவாகவேதான் வட்டி கொடுக்கின்றன. அதாவது இந்த காலத்தில் பணம் இழந்த மதிப்பைக்கூட முழுமையாக ஈடுசெய்யாமல் இழப்புக்கும் குறைவான அளவே கொடுக்கின்றன. இவ்வளவு வாராக்கடன் இருந்தும் வங்கிகள் அதிக இலாப விகிதத்தைப் பதிவு செய்கின்றன. இந்தக் கொள்ளைக்கு ஏற்ற பணக்கொள்கையை ஒன்றிய பாஜக அரசு தெரிந்தே பின்பற்றுகிறது.
இந்த அரசைப் பின்னிருந்து இயக்கும் பார்ப்பனிய-பனியாக்கள் இந்தப் பணத்தை உண்டு கொழுக்கிறார்கள். இதுவும் போதாதென்று இவர்களுக்கான வரியையும் 2019 முதல் கிட்டத்தட்ட பத்து விழுக்காடு குறைத்திருக்கிறது. 1991இல் 45 விழுக்காடாக இருந்த நிறுவனங்களுக்கான வரி இப்பொழுது 25 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. இதிலும் ரிலையன்ஸ் 16.5 விழுக்காடு அளவுதான் செலுத்துகிறது. ஒன்றியத்தின் மொத்த வரிவருவாயில் 32 விழுக்காடாக (2018-19) இருந்த நிறுவனங்களின் மீதான வரி இப்போது 26 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. இதனால் ஒன்றியத்துக்கு ஏற்படும் வருமான இழப்பு 15 இலட்சம் கோடிகள்.
இந்த வருமான இழப்பை எப்படிச் சரிசெய்கிறது ஒன்றிய பாஜக? மாதந்தோறும் வசூலாகும் ஜிஎஸ்டி வரி தற்போது 15 இலட்சம் கோடிகளைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் பெட்ரோலிய எரிபொருளின் வழியாக விதிக்கபட்டு மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளாத செஸ்வரி ஆண்டுக்கு 1 இலட்சம் கோடியிலிருந்து (2014-15) 3.63 இலட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அஞ்சலகச் சேமிப்புத் திட்டத்தில் வழியாக ஆண்டுக்கு 2.08 (2013-14) இலட்சம் கோடிகளைத் திரட்டி வந்த ஒன்றியம் தற்போது 8.78 இலட்சம் கோடிகளைத் திரட்டுகிறது. இதற்குக் கொடுக்கும் வட்டிவிகிதமும் ஆண்டுதோறும் உயரும் விலைவாசி உயர்வை விடக் குறைவானது.
அதாவது மதிப்புமிக்க பணத்தை வாங்கி செலவு செய்யும் ஒன்றியம் சில ஆண்டுகள் கழித்து வாங்கிய பணத்துக்கும் குறைவான மதிப்புக்கொண்ட ரூபாயைக் கையில் கொடுத்து மக்களின் தலையில் மிளகாய் அரைக்கிறது. அதையும் அவர்களிடமே அதிக வரிவிதித்து அதில் ஒருபகுதியைத் திருப்பித் தருகிறது. இதுமட்டுமா தொழிலாளர் வைப்புநிதி, எல்ஐசி காப்பீடுகளின் வழியாக திரட்டப்படும் பணமும் பார்ப்பனிய-பனியாக்களின் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து அவர்களின் சொத்து மதிப்பை உயர்த்துவதையும் சேர்த்துக்கொண்டால் நமது உழைப்பால் உருவாக்கப்படும் செல்வம் அனைத்தும் சேமிப்பு-வங்கிக்கடன் வரிவிலக்கு-வரிவிதிப்பு வாராக்கடன்-குறைவட்டி விகிதம் என்ற ரூபாய் சுழற்சியின் வழியாக முதலாளிகளுக்கு ஒருநீதியும் தொழிலாளிகளுக்கு அநீதியும் இழைக்கும் மனுநீதிப் பார்ப்பனியம் எப்படி செல்வத்தை சிலரிடம் குவிக்கிறது என்ற முழுவண்ணப் படத்தை மனக்கண்ணில் காணமுடியும்.
இதனோடு ஏழை எளிய மக்களின் தங்கத்தின் மீதான ஈர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அதன் விலைகளை உயர்த்தியும், செய்கூலி, சேதாரம் என்ற பெயரில் மார்வாரிகள் பொதுமக்களை மொட்டையடிப்பதையும் சேர்க்கவில்லை என்றால் இந்தப்படம் முழுமைபெறாது. மூன்றாம், நான்காம் கட்ட நகரங்கள் வரை கடைவிரிக்கும் இவர்கள் இதன்மூலம் திரளும் மூலதன நிதியைக் கொண்டு அந்த நகரங்களின் பெரும்பகுதி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். இப்படி வாங்கிய நகைகளும் கோரோனா பெரும்தொற்றுக்குப் பிறகு தீவிரமடைத்திருக்கும் விலைவாசி, வேலைவாய்ப்பின்மையால் மீண்டும் வங்கிகளுக்கும், அடகுகடைகளுக்கும் சென்றுகொண்டிருக்கிறது.
வங்கிகளில் நகைக்கடன் அளவு மட்டும் ஒரு லட்சம் கோடியை நெருங்குவதாகச் செய்திகள் வருகிறது. இந்த முதலாளித்துவ காலத்தில் மூலதனம்தான் உற்பத்தி உடலின் மூளை. உண்மையான சரக்குப்பணமான (commodity money) தங்கமும் சரி, நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கி நிர்வகிக்கபடும் காகிதப்பணமும் (paper money) சரி முழுக்கமுழுக்க பார்ப்பனிய-பனியாக்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பது மேற்கண்டவற்றில் இருந்து தெளிவாகிறது.
வடவர் ஆதிக்கத்தை எதிர்த்து வாய்கிழியப்பேசி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய தமிழகம் இந்த முதலாளித்துவ காலத்திய முக்கிய உற்பத்திக் காரணியான மூலதனத்தை அவர்களிடம் விட்டுவைத்திருப்பதன் மூலம் அவர்களை இன்னும் தனது தலையில் உட்கார வைத்து ஆடவிட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. நம்மவர்கள் இங்கே அரச ஒப்பந்தங்கள், கையூட்டின் வாயிலாக ஐந்து, பத்து இலட்ச ரூபாய்க்கு ஆளாய் பறக்கும் போது அவர்கள் வங்கிகளையே தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இலட்சம் கோடிகளில் தின்று செறித்துக் கொண்டிருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு திராவிடக் கட்சிகளின் ஆட்டத்தை அடக்க வருமானவரித்துறையை ஏவிவிட்டு அந்தப் பணத்துக்கும் ஆப்படிக்கிறார்கள். காங்கிரஸின் நிதியாதாரங்களை வெட்டிக்குறுக்கி அதனைத் தேசிய அரசியலில் இருந்து ஓரங்கட்டியதைப் போன்று திராவிடக் கட்சிகளை ஒடுக்கி தமிழக அரசியலில் இருந்து விலக்கப் பார்க்கிறார்கள். குறைந்தபட்சம் அடக்கி இந்தக் கட்சிகளை கட்டுப்படுத்தி வழிக்குக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். வருமான வரித்துறையை ஏவிவிட்டு அதானியின் காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத்துக்கு முரண்டுபிடிக்கும் திமுக அரசை இறங்கிவர வைக்கிறார்கள்.
இதற்கான தீர்வாக இந்த அரசு அரசியல் சமரசத்தைத் தேர்ந்தெடுக்குமானால் அது தனது கழுத்தில் கயிற்றை இறுக்கி அரசியல் தற்கொலைக்குத் தயாராகிறது என்று பொருள். ஏனெனில் அவர்களின் பொருளாதார ஆதிக்கத்தை அனுமதிக்கும் பட்சத்தில் திராவிட அரசியல் தொடர்வதற்கான பொருளாதார அடித்தளத்தை இழப்பது தவிர்க்கவியலாதது.
எனவே இந்தப் பொருளாதார தாக்குதலுக்குப் பதிலடியாக எதிர்ப்பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதும் அதற்கான அரசியல் போராட்டத்தை நடத்துவதும்தான் இந்தக் கட்சியும் ஆட்சியும் நீண்டகாலத்திற்கு நீடித்து நிலைத்திருப்பதற்கான அடிப்படை. என்னவிதமான எதிர்ப்பொருளாதார நடவடிக்கை எடுப்பது? எப்படி அதன்மூலம் இந்தப் பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியச் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவது? அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு
தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
ரூபாய்மைய வர்த்தகத்தின் முக்கியத்துவம் என்ன? பகுதி 14
மீண்டும் கிழக்கையும் மேற்கையும் இணைக்குமா தமிழகம்?: பகுதி 13
எதில் தன்னாட்சியும் தற்சார்பும் வேண்டும்?: பகுதி 12
சாதி எப்போது ஒழியும்? பகுதி 11
சாதிக்கும் தொழில்மயமாதலுக்குமான தொடர்பு என்ன? – பகுதி 10
எழுபதுகளையும் தொண்ணூறுகளையும் ஒத்த சூழலை எதிர்கொள்ளும் இந்தியா- பகுதி 9
சிறப்புக் கட்டுரை: உலகை மாற்றிக்கொண்டிருக்கும் உக்ரைன் போர் பகுதி 8
சிறப்புக் கட்டுரை: உடையும் ஒற்றைத் துருவம்… உருவான சமூக ஏகாதிபத்தியம்: பகுதி -7
சிறப்புக் கட்டுரை: இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும் – பகுதி 6
சிறப்புக் கட்டுரை: பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் பகுதி 5
சிறப்புக் கட்டுரை: டாலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி? பகுதி -4
சிறப்புக் கட்டுரை: விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? பகுதி-3
சிறப்புக் கட்டுரை: பெருநிறுவனங்களின் முற்றொருமையை மட்டும்தான் உடைக்கவேண்டுமா? பகுதி-2
சிறப்புக் கட்டுரை: ஐந்து பெருநிறுவனங்களை (Big 5) மட்டும்தான் உடைக்கவேண்டுமா?