ஸ்ரீராம் சர்மா
இன்றமைந்திருக்கும் முதலமைச்சரை போல அமைதியும், பொறுமையும் மென்மையான அணுகுமுறையினையும் கொண்டதோர் முதலமைச்சரை இதுகாறும் தமிழ்நாட்டின் சட்டசபை கண்டதில்லை.
அப்படிபட்டவரின் ஆட்சியில் கூட்டப்பட்ட சமீபத்திய சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்ற தமிழ்நாட்டின் ஆளுனர் அவர்களோ தனது பங்களிப்பை திடுக்கென முடித்துக் கொண்டு வெளிநடப்பு செய்துவிட்டார் ஒரு சிட்டுக்குருவியைப் போலே.
ஆகட்டும். அது அவரது இஷ்டம்.
ஆனால், தமிழக சட்டமன்றத்தில் தேசிய கீதத்தை இசைக்க மறுத்ததால்தான் வெளிநடப்பு செய்கிறேன் என அவர் சொன்னதுதான் நமக்கு உறுத்துகிறது. எளியேன் படித்த இலக்கியங்களின் வழியே காணும்போது ஆளுனரது அந்த செய்கை அதிர்ச்சியூட்டுகின்றது. அபாண்டமானதாக தோன்றுகின்றது.
ஆம், ஆளுனரது செய்கையானது மகாகவி பாரதியாரின் “பாஞ்சாலி சபதம்” அதன் சூதாட்ட சருக்கத்தின் வரிகளை எனக்கு சுருக்கென நினைவூட்டுகின்றது.
ஒளிசிறந்த மணியின்
மாலை
ஒன்றை அங்கு வைத்தான்
இதன் விளக்கத்தை முடிவில் காண்போம்.
*******
தயவுசெய்து கூர்ந்து கவனியுங்கள்!
ஆதியில் ஒன்றாக இருந்த இந்த உலகத்தைக் காலப் போக்கில் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமேரிக்கா, தென் அமேரிக்கா, அண்டார்ட்டிக்கா, ஐரோப்பா என ஏழு கண்டங்களாக பிரித்து வைத்தார்கள். இந்தியத் துணைக் கண்டம் எனத் தனியே பிரித்து அழைக்க ஆரம்பித்தது 19 நூற்றாண்டுக்குப் பிறகான பிரித்தானியர்களின் வசதிக்காகவே.
அதன்முன், உன்னத கலாச்சாரங்களை தன்னகத்தே கொண்ட இந்த மண்ணுக்கு ஏக தலைமை ஒன்று இருந்துள்ளதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
இராமாயணத்தில் ஈடு இணையற்றவர் எனப் போற்றப்பட்ட தசரத சக்ரவர்த்தியே கூட அயோத்தியை தலை நகராகக் கொண்ட கோசல நாட்டை மட்டும்தான் ஆண்டு வந்தார். அது பாரதத்தின் ஒரு பகுதி மட்டுமே. மற்ற மற்ற நாடுகளை ஆண்ட மன்னர்கள் அவரை அடிபணிந்து சக்ரவர்த்தியாக ஏற்றுக் கொண்டனர் என்பதுதான் கம்பர் நமக்குக் காட்டும் காட்சி.
ஆக, அன்றைய நாளில் இருந்தே இங்கே படி நிலை அரசாட்சியாகத்தான் இருந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசுகளின் கீழே தனித்தனியாக – அந்தந்த அரசுகளின் கீழே சமஸ்தானங்களாக – அந்தந்த சமஸ்தானங்களுக்குக் கீழே தனித்தனிப் பாளையங்களாக – பாளையங்களுக்குக் கீழ் தனித்தனிக் கிராமங்களாகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம்.
அதுதான் சாத்தியமான படி நிலை அரசாட்சி. அசோகரும் அக்பரும் நீண்ட நெடிய இந்த இந்தியப் பெருமண்ணை தன்னந்தனிச் சக்ரவர்த்திகளாக நின்று பேரரசாங்கம் செய்தார்கள் என்று பாடப் புத்தகங்களில் நீட்டிச் சொல்லப் படித்திருக்கிறோம். அவை அனைத்தும் புகழளவுக்குத் தானே அன்றி வேறூன்றிய அதன் ஆட்சி முறை பாற்பட்டல்ல என்பதை உணர்ந்தாக வேண்டும்.

அன்றைய பாரதப் பெருமண்ணுக்குரியது ஏறத்தாழ அறுபது லட்சம் கிலோமீட்டர் பரப்பளவு. அந்த மொத்தப் பரப்பளவையும் நுணுகி அரசாளும் அளவுக்கு அன்றைய ஆட்சியாளர்களுக்குப் போதிய போக்குவரத்து வசதிகள் இருந்திருக்கவில்லை என்பதே உண்மை.
விடுதலைக்குப் பிறகான ஜனநாயக கோட்பாட்டில் இந்த நாடு ஒன்றுபட்டது என்பதும் நாமெல்லோரும் இந்தியர்கள்தான் என்பதும் இந்த மாமண்ணில் வாழும் ஒவ்வொருவரின் மனதிலும் எழுதாச் சட்டமாக ஊன்றிவிட்டது. அது தொடர்கிறது. அதில் நியாயமுள்ளது.
ஆனால், முற்காலத்து சேர, சோழ, பாண்டிய, அசோகர், அக்பர், ஆங்கிலேயர் காலம் வரை இந்த மொத்த இந்தியாவையும் முழுமையாக ஆண்டு நின்றவர்கள் எவருமில்லை என்பதையும், அப்படியான ஒற்றை ஆட்சி முறை இந்த பரந்த மண்ணுக்கு சாத்தியமே இல்லை என்பதையும் முந்தைய வரலாறுத் தரவுகளில் வழியே நாம் உணர்ந்தாக வேண்டும்.
மின்னம்பலத்தில் முன்பு நான் எழுதிய “கவனம் புதிது” எனும் தொடரைப் படித்தால் இதனை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்.
*******
அகண்ட உலகத்தில் பொருளாதார போர் கிளர்ந்து எழுகின்ற இந்த நாளில், தனித்தனி மாநிலமாக நாம் பிரிந்திருந்தால் அதனைப் பயன்படுத்தி அன்னியர்கள் ஊடுருவிவிட வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதில் நியாயம் உண்டுதான்.
அதற்காக, சுயாட்சியினை விட்டுக் கொடுத்து விட முடியாது என்பதுதான் அண்ணா, கலைஞர், ஸ்டாலின் போன்ற தலைவர்களின் திராவிடக் குரலாக நாம் கொள்ள வேண்டும்.
தேசியத்துக்கும் திராவிடத்துக்கும் இடையே இயைந்ததோர் ‘நல்லமைப்பை” அறிவு சார்ந்து உண்டாக்கி விடுவதுதான் பாரதமாம் பெருநாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதை ஒன்றியத்துள்ளோர் உணர்ந்தாக வேண்டும்.
அதனை உணராமல் வெகுண்டு செய்யும் கலகங்களினால் எந்த ஒரு உயர்வையும் நாம் காணப் போவதில்லை !
*******
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
திராவிடக் கொள்கையை, அதன் அடிநாதமான தன்மானத்தை உணர்ந்து கொள்ளாமல், அந்த நியாயத்தை தேசியத்துக்கு எதிரானதாக சித்தரித்தபடி தொடர்ந்து சாட்டை வீசிக் கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தாக வேண்டும்.
காரணம், கடந்த கால வரலாற்றை சொன்னால் அவர்களது சூதாட்டம் அம்பலப்பட்டு விடும்.
கவனியுங்கள் !
1971-ம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் நெருக்கியபோது அதனை எதிர்த்து சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம் போட்டது தமிழ்நாடு!
1972-ம் ஆண்டு பாகிஸ்தான் மீது போர் நடந்தபோது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறு கோடி ரூபாய் நிதியினை அளித்ததும் தமிழ்நாடு.
1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது இந்தியாவிலேயே அதிகத் தொகையான 50 கோடி ரூபாயை, அன்றைய பிரதமர் வாஜ்பாய் இடம் மூன்று தவணைகளாக வழங்கியதும் இந்தத் தமிழ்நாடே!
மேற்கண்ட அனைத்தையும் செய்து கொடுத்தவர் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர்.
சொல்லுங்கள், அவரது வழி வந்த இன்றைய முதல்வர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் தேசியத்தை, தேசிய கீதத்தை புறக்கணித்துவிட்டார் என்பது நம்பும்படியாகவா இருக்கின்றது?

மாநில சுயாட்சி தத்துவத்தோடு அதன் பின்னிருக்கும் தன்மானத்தோடு “தேசிய கீதம்” என்பதைக் கோர்த்துவிடுவதன் மூலம் தேசிய அரங்கில் தமிழகத்தை குற்றவாளி போல சித்தரிக்க முயல்கிறீர்கள் எனில் அதில் பிழை உளதா?
ஐயா, திராவிட மாடலை எதிர்த்தடிக்க உங்களுக்கு நியாயமான வேறு ஆயுதங்கள் ஏதும் அகப்படவில்லையா? உங்கள் அரசியல் ஆவலாதித்துக்கு புனிதமான தேசிய கீதம்தானா அகப்பட்டது?
என்னதான் உங்களுக்கு போர் வெறி என்றாலும் பெற்ற அன்னையை முன் நிறுத்தி அம்பெறிவதா? இந்து தர்மம் என்றல்ல எந்த தர்மமும் அதனை ஏற்குமா ?
*******
குட்டிக் கதை ஒன்று !
பரம்பரையாக உழுது வரும் விவசாயி ஒருவன் முடிவெடுத்துக் கொண்டு நிற்கும் முனிவர் ஒருவரிடம் மாட்டிக் கொண்டானாம்.
“ஐயா, எவ்வளவு உழுதும் எனது நிலம் மேம்படவில்லை. உங்களது தவ வலிமையினால் எனது நிலத்தை மேம்படுத்தும் வரம் ஒன்றை தர இயலுங்களா?”
“அதெற்கென்ன தந்தால் போச்சு. சொல், உனக்கு உன் தாய் வேண்டுமா அல்லது உன் நிலம் வேண்டுமா?”

“ஐயா, நான் எதையோ கேட்டால், எதற்கோ முடிச்சு போடுகிறீர்களே… நீங்கள் கேட்கும் இரண்டும் என் உயிருக்கு இணையானதல்லவா? ஒன்று வாழ்வு கொடுத்தது.. மற்றது என்னை வாழ வைப்பது! எதனை விட்டுக் கொடுக்க சொல்கிறீர்கள் ஐயா?”
“உன் வியாக்யானம் எல்லாம் எனக்கு வேண்டாம். இரண்டில் ஒன்றை முடிவு செய்.“
“………………..”
“என்ன பதிலே சொல்லாமல் உழுது கொண்டு இருக்கிறாய்? ஓஹோ, உனக்கு அவ்வளவு திமிரா. சரி, நான் கிளம்புகிறேன். எக்கேடு கெட்டேனும் போ.”
காவி பூசிய முனிவர் கிளம்பியேவிட்டார்.
வெடுக்கென கிளம்பிய முனிவரை விரக்தியோடு பார்த்துக் கொண்டிருந்த அந்த விவசாயியோ, “இவர் முனிவராக இருக்க லாயக்கில்லாதவர். இவரிடம் வரம் கேட்டது எனது தவறுதான்” என முடிவெடுத்தபடி,
தான் உழுது கொண்டிருந்த நிலத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு போய் தன் தாயின் காலடியில் வைத்து வணங்கினான். தாய் மனம் குளிர்ந்தாள். அந்தக் கணமே அவனது அன்னவயல் ஓங்கிச் செழித்ததாம் !
*******
மேற்கண்ட குட்டிக் கதையில் அந்த அப்பாவி விவசாயி உயர்ந்து போனான்.
பெற்ற தாயை அதன் புனிதத்தை வாழ்வாதாரத்தோடும் தன்மானத்தோடும் கோர்த்து விட்ட அந்த முனிவனோ தாழ்ந்து போனான்.
காரணம் என்ன ?
பாரதியாரின் வரிகளில் சொன்னால் ..
ஒளிசிறந்த மணியின்
மாலை
ஒன்றை அங்கு வைத்தான்
*******
கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.
300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிராமணர்களையும் அரவணைத்ததே திராவிடம் !
அரசாங்கப் பள்ளிக்குள் ஆலகாலம் விற்பதா?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜகவும் புறக்கணிப்பு – அண்ணாமலை அறிவிப்பு!
ஹெல்த் டிப்ஸ்: எடையைக் குறைக்க நினைப்பவர்களே… இந்த விஷயங்களை மறந்துவிடாதீர்கள்!
பியூட்டி டிப்ஸ்: அழகுக்காக அடிக்கடி கண்ணாடியைக் கழற்றுபவரா நீங்கள்?