ராஜன் குறை
ஆளுநர் ரவி அதிரடி அரசியல் கருத்துகளைக் கூறி எதிர்ப்பலைகளை உருவாக்கும் வழக்கம் கொண்டவர். அவரைப்போல எந்த தமிழ் நாட்டு ஆளுநரும் அரசியல் கட்சிகளின், சமூக செயற்பாட்டாளர்களின், சிந்தனையாளர்களின், மக்களின் ஒருமித்த கண்டனங்களைச் சந்தித்ததில்லை. தமிழ்நாட்டில் தொடர்ந்து அரசியல் சர்ச்சைகளை உருவாக்குவதற்காகவே நியமிக்கப்பட்டவர்போல நடந்துகொள்பவர்.
கடந்த வாரம் அவர் ஆட்சிப்பணிக்குத் தயாராகும் மாணவர்களிடையே பேசிய கருத்துகள் முந்தைய கருத்துகளையெல்லாம்விட சற்று கூடுதலாகவே மக்களாட்சியின் மாண்பைக் குலைப்பதாக அமைந்துள்ளது எனலாம்.
மக்கள் பிரதிநிதிகளால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநர் அனுமதி அளிக்காமல் கிடப்பில் போட்டால் அது நிராகரிக்கப்பட்டதாகவே பொருள் தரும் என்று கூறியுள்ளார். இது அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்களுக்கு, மக்களாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் முரணானது. உச்ச நீதிமன்றம் பல நேரங்களில் வழங்கியுள்ள தீர்ப்புகளுக்கு எதிரானது.

தமிழ்நாட்டின் முதல்வர் உடனே தன் கண்டனங்களை வெளிப்படுத்தினார். சர்வாதிகாரி போல ஆளுநர் பேசுவது ஏற்கத்தக்கதல்ல என்று கண்டித்தார். அதற்கு அடுத்த நிலையில் தி.மு.க கூட்டணியிலுள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்து ஆளுநருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏப்ரல் 12ஆம் தேதி அறிவித்துள்ளனர். சட்டமன்றத்திலும் ஆளுநரின் பேச்சைக் கண்டித்து தனி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆளுநர் மக்களாட்சி நெறிமுறைகளுக்கு பெரியதொரு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார்.
ஆளுநரின் செயல்பாடுகளுக்கு ஒன்றிய அரசே முழுப்பொறுப்பினை ஏற்க வேண்டும். ஏனெனில் அவர் ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரிலேயே குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். ஒன்றிய அரசு பரிந்துரை செய்தால் மறு நொடியே குடியரசுத் தலைவர் அவரை பதவியிலிருந்து நீக்கிவிடலாம். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதனால் ஆளுநரின் ஒவ்வொரு சொல்லும், செயலும் ஒன்றிய அரசின் உடன்பாடு இல்லாமல் நிகழ முடியாது.
மாநில உரிமைகளைச் சீண்டிப்பார்க்கும் நோக்குடனும், மாநில சுயாட்சி கோரிக்கையினை மட்டம் தட்டவும், மாநிலத்தின் மீதான அதன் ஆதிக்கத்தை வலியுறுத்தவும், காலனீய ஆட்சி போன்ற சூழலை உருவாக்கவும்தான் ஒன்றிய அரசு ஆர்.என்.ரவி என்ற ஆளுநரை கைப்பாவையாக பயன்படுத்துகிறதோ என்று எண்ணாமல் இருக்க முடியாது.
ஏனெனில் ஆளுநர் இரண்டு வெகுமக்கள் ஈடுபாடு கொண்ட போராட்டங்களையும் கொச்சைப்படுத்தியுள்ளார். சூழலியல் நோக்கில் நடந்த வெகுமக்கள் போராட்டங்களான கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம், அப்பாவி மக்கள் உயிர்களைப் பறித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் ஆகிய இரண்டும் அந்நிய நாட்டு நிதியால் தூண்டிவிடப்பட்டவை என்றும் ஓர் ஆதாரமில்லாத, அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஆளுநர் இதுபோன்ற கருத்துகளை பேசலாமா, ஆளுநர் பதவி என்பது எதனால் உருவாக்கப்பட்டது, அது ஏன் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வது பயனளிக்கும்.

மக்களாட்சியில் இறையாண்மை
மக்களாட்சிக்கு ஒரு சில பண்டைய வடிவங்கள் இருந்தன என்று கருதப்பட்டாலும், நவீன காலத்தில் மக்களாட்சி என்பது உருவாகி இருநூற்றைம்பது ஆண்டுகள்தான் ஆகின்றன எனலாம். அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் என்ற பெயரில் வட அமெரிக்காவில் குடியேறியவர்கள் இங்கிலாந்து மன்னராட்சியிலிருந்து 1784ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று, தங்களுக்கென்று ஓர் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிக் கொண்டபோதுதான் மன்னரில்லா ஒரு நவீன மக்களாட்சி குடியரசு உலக வரலாற்றில் உருவானது.
இறையாண்மை என்பதற்கான ஆதாரம் நாட்டின் குடிமக்களே என்ற எண்ணம் வேரூன்றியது. அதுதான் “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற சொல்வழக்கு. மன்னருக்கு பதிலாக மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் அதிபரே இறையாண்மையின் அறிகுறியானார்.
இந்த இடத்தில்தான் நாம் இறையாண்மை என்றால் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். மனித சமூகங்கள் ஒன்றிணைந்து வாழத்துவங்கியபோது அவை இயற்கையினை புரிந்துகொள்ள இறைவன் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொண்டன. இறைவனே அனைத்து இயற்கையையும் உருவாக்கி வழி நடத்துவதாக நினைத்தன.
அந்த மனிதக் குழுக்கள் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொள்ள ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தபோது, அந்தத் தலைவன் இறைவனின் அருள் பெற்றவன் என்று கூறிக்கொண்டன. பூசாரிகள் இறைவன் சார்பாக அரசனுக்கு மகுடம் சூட்டினர்.
அந்த இறைமை அருள் பெற்ற தலைமையே இறையாண்மையாக அறியப்பட்டது. அதுவே அரசியல் அதிகாரத்தின் மையமாக இருந்தது. மக்களெல்லாம் அரசனின் முற்றதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்திரிகள், நிலப்பிரபுக்கள், படைத்தலைவர்கள் அனைவரும் அரசனின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். ஆலோசனைகள் கூறலாமே தவிர, அதிகாரத்தில் பங்கெடுக்க முடியாது.
இந்த அரசனுக்கு பதிலாக மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் அதிபரை அமெரிக்கா இறையாண்மைக்கு உரியவராக்கியது. ஆனால் இவருடைய அதிகாரத்தினை இருவகையான மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அவைகள் கட்டுப்படுத்தும். ஒன்று தொகுதிவாரி பிரதிநிதிகள். இன்னொன்று மாநில பிரதிநிதிகள். இந்த அவைகளின் ஒப்புதல் பெற்றுதான் அதிபர் எதையும் செய்ய முடியும். அரசியலமைப்பு சட்டத்துக்கும் கட்டுப்பட்டுதான் இயங்க முடியும். தன்னிச்சையாகச் செயல்பட முடியாது.
இங்கே முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது மக்களாட்சி என்பது மக்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளின் ஆட்சி மட்டுமல்ல, அது சட்டத்தின் ஆட்சியும் என்பதுதான். எனவேதான் மக்களாட்சியில் இறையாண்மை என்பது நிர்வாக இயந்திரத்தின் ஆட்சியியல், மக்கள் பிரதிநிதிகளின் அரசியல், நீதிமன்றங்கள் நிலைநிறுத்தும் சட்டத்தின் ஆட்சி ஆகிய மூன்றாகப் பிரிந்துள்ளது.
இறையாண்மையின் அடையாளமாக இருப்பவர் இந்த மூன்றுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். அமெரிக்க முறையில் அதிபர் அப்படி பொதுவானவராகக் கருதப்பட்டாலும் அவர் ஒரு கட்சியினை சேர்ந்தவராக இருப்பவர் என்பது சற்றே குறைபாடு உடையதுதான்.
இங்கிலாந்து வேறொரு நடைமுறையை மேற்கொண்டது. அது அரசரை நீக்கவில்லை. ஆனால் அரசரின் அதிகாரம் முழுவதையும் மக்கள் பிரதிநிதிகளின் அரசுக்கு, அதன் அமைச்சரவைக்கு, அதன் தலைவரான பிரதமருக்கு மாற்றிவிட்டது. அதன் மூலம் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு குறியீட்டு தலைவராக, இறையாண்மையின் தூய அடையாளமாக அரசர் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு உருவானது. ஆனால் அவர் அரசியலில் எந்த கருத்தும் கூறக்கூடாது, பொதுவெளியில் அரசியல் குறித்து பேசவே கூடாது என்பதும் நடைமுறையானது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்த இரண்டு முன்மாதிரிகளின் கலவையாக உருவானது. குறியீட்டு அடையாளமாக ஓர் அதிபர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே எல்லா சட்டங்களில் கையெழுத்திடுவார். ஆனால், அவர் நாடாளுமன்ற பெரும்பான்மையின், பிரதமரின் முடிவுகளுக்கு இணங்கித்தான் செயல்படுவார். அவர் பொதுவெளியில் உரை நிகழ்த்தினாலும் நேரடியாக எந்த அரசியல் கருத்துகளையும் கூற மாட்டார். பொதுவாக நாட்டு நலன் குறித்துத்தான் பேசுவார் என்பதே நடைமுறையானது.

மாநிலங்களின் இறையாண்மை
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இறையாண்மை என்பது ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே பகிரப்பட்டுள்ளது. ஏற்கனவே சொன்ன நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், நீதிமன்றம் என்ற முப்பிரிவு பகிர்தலுக்கு அப்பால் இறையாண்மை ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயும் பகிரப்பட்டுள்ளது. மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட இயல்கள், துறைகள் என்னென்ன, ஒன்றிய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்னென்ன, இரண்டும் பகிர்ந்துகொள்ளும் இயல்கள், துறைகள் என்னென்ன என்பதெல்லாம் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன.
மக்கள்தான் இறையாண்மையின் மூலாதாரம் என்பதால் மக்கள் தேர்ந்தெடுக்கும் மாநில அரசும், ஒன்றிய அரசும் அந்த இறையாண்மையின் பங்குதாரர்கள் என்பதே அடிப்படை கருத்தாகும். அதுதான் கூட்டாட்சி தத்துவம். இந்திய அரசு Union of States அதாவது மாநிலங்களின் ஒன்றியம் என்றே வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அளவில் இறையாண்மையின் குறியீடாக குடியரசுத் தலைவர் விளங்குவதுபோல, மாநிலத்திலும் குறியீட்டுத் தலமையாக அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு பொது நபர் இருக்க வேண்டும் என நினைத்தார்கள். அவர்தான் ஆளுநர்.
ஆனால் அந்த ஆளுநரை யார் தேர்ந்தெடுப்பது என்பதில்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் அன்றைய நிலையில் சரியாக சிந்திக்காமல் விட்டுவிட்டது. குடியரசுத் தலைவரை மக்கள் பிரதிநிதிகள் மறைமுகமாகத் தேர்ந்தெடுப்பது போல, மாநிலத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஆளுநரை தேர்ந்தெடுக்க வகை செய்திருந்தால் அவர் மாநில இறையாண்மையின் குறியீடாக இருந்திருப்பார்.
ஆனால் ஆளுநரை ஒன்றிய அரசில் ஆட்சி செய்யும் கட்சிதான் முடிவு செய்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும், அவர் ஆளுநரை நியமனம் செய்வார் என்று கூறும்போது அவர் ஒன்றிய அரசை ஆளும் கட்சிக்கு கடமைப்பட்டவராக மாறுகிறார். ஆனாலும் கூட இந்திய மக்களாட்சியின் துவக்க காலத்தில் ஆளுநர்கள் அவர்களது குறியீட்டு தன்மையினை உணர்ந்து, கெளரவமாக அந்த பதவியின் மாண்பினை காப்பவர்களாகவே விளங்கி வந்தார்கள்.
நாள்பட, நாள்பட ஒன்றியத்தில் ஆளும் கட்சியின் கைப்பாவைகளாக ஆளுநர்கள் செயல்படும் சூழல் உருவானது. மாநில அரசு பெரும்பான்மை இழக்கும்போது, தேர்தல் முடிவுகளில் குழப்பம் நிலவும்போது மாநில ஆளுநர்கள் அரசியல் உள் நோக்கங்களுடன் செயல்படும் சந்தர்ப்பங்கள் உருவாகத் தொடங்கின. மாநில அரசை கலைக்கவே ஆளுநர்கள் பரிந்துரை செய்யும் பழக்கமெல்லாம் உருவானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டும் தீர்ப்புகளை வழங்கி ஆளுநரின் செயல்பாடுகளை நெறிப்படுத்தியது.
சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டங்களை ஆளுநர் கிடப்பில் போடலாமா?
இப்போது ஒரு முக்கியமான சட்டச் சிக்கல் உருவாகியுள்ளது. அது என்னவென்றால் சட்டமன்றம் இயற்றி அனுப்பும் சட்டங்களை ஏற்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது. கிடப்பில் போடுவது.
அரசியலமைப்பு சட்டம் சொல்வது என்னவென்றால், ஆளுநருக்கு ஏதேனும் கேள்விகளோ, மாற்றுக் கோணங்களோ இருந்தால் மீண்டும் பரிசீலிக்கச் சொல்லி சட்டத்தைத் திருப்பி அனுப்பலாம். ஆனால் சட்டமன்றம் மீண்டும் அந்த சட்டத்தை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஏற்கத்தான் வேண்டும். இதேதான் குடியரசுத் தலைவர் நிலையும்.
இதிலும் அரசியலமைப்பு சட்டம் ஓர் இடைவெளியை உருவாக்கி விட்டது. அது என்னவென்றால் எத்தனை காலத்திற்குள் குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதற்கு காலக்கெடு எதையும் விதிக்கவில்லை. இது நன்னம்பிக்கையின் அடிப்படையில் வரையறுக்கப்படாமல் விடப்பட்டது.
ஆனால் இதனைப் பயன்படுத்தி ஆளுநர்கள் தேவையற்ற வகையில் தாமதம் செய்வது என்பது தவறானது என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முப்பதாண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. ஆனால் சட்டமன்றம் தீர்மானம் இயற்றியும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்திய பிறகும் தாமதம் செய்தார். அதனால் உச்ச நீதிமன்றமே அவர்களை விடுவித்துவிட்டது.
தற்போது மாநில அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்து சட்டம் இயற்றியுள்ளது. காரணம் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழக்கும் பலர் பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வதுதான். மக்களின் உயிரைக் காக்கும் கடமை மாநில அரசுக்கு உள்ளது என்பதால் இந்த சூதாட்டத்தை மாநில அரசு தடை செய்துள்ளது.
அரசு ஒரு சட்ட வல்லுநர் குழு அமைத்து, ஆராய்ந்து இயற்றி, சட்டமன்றத்தால் ஏற்கப்பட்ட இந்தச் சட்டத்தை பல மாதங்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். பின்னர் சில குறிப்புகளுடன் திருப்பி அனுப்பினார். மாநில சட்டமன்றம் மீண்டும் அந்தச் சட்டத்தை நிறைவேற்றி திருப்பி அனுப்பியுள்ளது. மீண்டும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வருகிறார். இதைப்போல பல்வேறு சட்டங்களுக்கும் ஒப்புதல் அளிப்பதில் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் காலதாமதம் செய்து வருகிறார்.
இந்த நிலையில்தான் ஆளுநர் சட்டத்தை கிடப்பில் போடுவது சட்டத்தை நிராகரிப்பதற்கு சமம் என்று பேசியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தில் அவருக்கு அந்த உரிமை கிடையாது என்பது தெளிவு. ஆயினும் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் நோக்குடன் அவர் செயல்படுகிறார்.
ஆளுநர் மாநில மக்களால் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. அவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு குறியீட்டு அதிகார மையம். அவருடைய அதிகாரம் ஒன்றிய அரசின் இறையாண்மையின் அடிப்படையில் அமைவது. அவர் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட இயல்களில், துறைகளில் தலையிடுவது மாநில இறையாண்மையினை ஒன்றிய அரசு பறிப்பதற்கு சமமானது. அது கூட்டாட்சி தத்துவத்துக்குக் குழிபறிக்கும் செயல்.
அதேபோல குறியீட்டு பதவியினை வகிக்கும் ஆளுநர், நாளும் சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துகளைப் பேசுவது என்பது அவர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது ஆகும். அரசியலில் ஈடுபடுபவர்கள், மக்கள் பிரதிநிதிகள் எந்த கருத்தையும் கூறலாம். ஆனால் அனைவருக்கும் பொதுவான குறியீட்டுத் தலைமையாக இருப்பவர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் கூறுவது தகாது.
எப்படி இங்கிலாந்து அரசரோ, இந்திய குடியரசு தலைவரோ அரசியல் பேசுவதில்லையோ, அதேபோல ஆளுநரும் அரசியல் கருத்துகளைக் கூறுவது முறையல்ல. இன்றைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அவ்வாறு செய்து வருவது கண்டனத்திற்குரியது. இது மக்களாட்சியை தடம் புரளச் செய்யும் செயல் என்பதையே, அரசியல் தத்துவம் அறிந்தவர்கள் கூற முடியும். ஒன்றிய அரசும் இந்த நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com