ஆரியத்தின் பதற்றம்: ஆளுநரின் சனாதன தர்ம புரட்டு

Published On:

| By Minnambalam

 ராஜன் குறை

சென்ற வாரம் தமிழ்நாட்டு சட்டசபையில் அரசு எழுதிக்கொடுத்த உரையினை படிக்காமல் தன் போக்கில் சில மாற்றங்களைச் செய்து படித்தார் ஆளுநர். அவர் படித்தது அவைக் குறிப்பில் இடம் பெறாது, அரசு தயாரித்து அவர் ஒப்புதல் அளித்த உரைதான் இடம்பெறும் என்றதும் அவையை அவமதித்து வெளிநடப்பு செய்தார். அதற்கு மறு நாள் திருவையாறு சென்று மேலும் பல பிரச்சினைக்குரிய சங்கதிகளைப் பேசியுள்ளார்.  

அவர் பேசியதில் மிகவும் புதுமையான ஒரு புரட்டு என்னவென்றால் சனாதன தர்மம் தமிழகத்தில்தான் தோன்றியது என்பதாகும். இது போன்ற ஒரு கருத்தை இதுவரை யாரும் கூறியதில்லை. இவ்வாறு கூறுவதற்கு ஆளுநர் எந்த ஆதாரமும், விளக்கமும் அளிக்கவில்லை. மேலும் சனாதன தர்மம் என்றால் என்னவென்பதற்கும் தன்னிச்சையாக ஏதோ ஒரு விளக்கத்தை தந்துள்ளார். மற்றவரில் நம்மை அறிவது, நம்மில் மற்றவரை அறிவது என்று ஏதேதோ கூறியுள்ளார்.

இப்போது தொலைக்காட்சிகளில் பேசும் பல இந்துத்துவர்களும், பார்ப்பன சிந்தனையாளர்களும் இவ்வாறு சனாதன தர்மத்துக்கு மனம்போன போக்கில் விளக்கங்களை அளித்து வருகின்றனர். பொதுவாக உலகெங்கும் மானுட சமூகங்கள், குழுக்கள் கடைப்பிடித்த ஒழுக்கங்களை, கொல்லாமை, பிறர் பொருட்களை கவராதிருத்தல், பாலியல் ஒழுக்கம், பொது நலனை அனுசரித்தல் போன்றவற்றை சனாதன தர்மம் என்று கூறுகின்றனர்.

இவர்களுடன் வாதிடும் முற்போக்காளர்கள் சனாதன தர்மம் என்றால் அதில் வர்ணாசிரம தர்மம் என்பதும் இடம்பெறுகிறதா என்று கேட்கிறார்கள். அதற்கு உடனே வர்ணங்கள் பிறப்பால் தீர்மானிக்கப்படவில்லை, அது செய்யும் தொழில், குணம் ஆகியவற்றை பொறுத்தது என்று பதில் அளிக்கப்படுகிறது.

எப்படியாவது சனாதன தர்மம் என்பது இந்துக்கள் அனைவருக்கும் பொதுவானது, அதுவே இந்தியாவின் கலாச்சாரம், தேசியத்தின் அடிப்படை என்பதை நிறுவிவிட வேண்டும் என்ற பதற்றத்தைப் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் ஆரிய, பார்ப்பனீய கலாச்சாரத்தின் மேலாதிக்கத்தை பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும்போதே நிறுவி விட வேண்டும் என்பதா, அல்லது பாஜக கட்சிகூட பார்ப்பனர்களை கைவிட்டு விடும் என்ற கவலையா என்று தெரியவில்லை.

RNRavi hate speech in assembly

சனாதன தர்மம் என்றால் என்னவென்று சான்றுகள் சொல்கின்றன?

தமிழக அரசின் திரு.வி.க. விருது பெரும் தமிழறிஞர் பொ.வேலுசாமி முகநூலில் சனாதன தர்மம் குறித்து  1905 மற்றும் 1907 ஆகிய ஆண்டுகளில் வெளியான இரண்டு தமிழ் நூல்களை முகநூலில் பகிர்ந்துள்ளார். அவை காசி ஹிந்து வித்யாசாலை கமிட்டியால் மாணவர்களுக்குத் தெளிவை உண்டாக்குவதற்காக தொகுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தொகுத்ததை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.

இவற்றில் 1907ஆம் ஆண்டு வெளியான  நூல் மிகவும் தெளிவாக வரையறைகளை முன்வைக்கிறது. அவற்றை அப்படியே கீழே தருகிறேன்.

சனாதன தர்மம்‌ என்றால்‌ நித்தியமான மதம்‌ அல்‌லது புராதனவிதி என்று பொருள்படும்‌. இது வெகு காலங்களுக்கு முன்‌ மானிடர்க்‌ களிக்கப்பட்ட புண்‌ணிய புஸ்ககங்களான வேதங்களை ஆதாரமாகக் கொண்டது. இந்த மதத்திற்கு ஆரியமதம்‌ என்ற பெயரும்‌ இடப்பட்டிருக்கின்‌றது. ஏனெனில்‌ ஆரிய மகாஜாதியாருள் முதலாம்‌ வகுப்பாருக்கு இம்மதம்‌ கொடுக்‌கப்பட்டது. (ஆரிய என்னும்‌ பதத்திற்கு மேன்மை பொருந்திய என்று அர்த்தம்)‌. இவ்வுலகில்‌ பூர்வகாலங்‌களில்‌ வசித்துச்சென்ற ஜாதியார்களைக்காட்டிலும்‌ ஒழுக்கம்‌, ரூபம்‌, இவற்றிற்‌ சிறந்த ஒரு மகாஜாதியாருக்கு இந்த “ஆரிய” என்னும்‌ பெயரிடப்பட்டது. இவ்வாரிய மகாஜாதியாரின்‌ முதல்‌ குடும்பங்கள்‌ இப்‌பொழுது இந்தியாவென்று கூறப்படுமின்னாட்டின்‌ வட பாகத்தில்‌ குடியேறினார்கள்‌. அவ்விதமவர்கள்‌ முதலில்‌ குடியேறின நாட்டிற்கு ஆரிய வர்த்தம்‌ என்ற பெயரிடப்பட்டது.

“கிழக்கு மேற்கு ஹிமாலயம்‌ விந்தியமாகிய இவ்விரண்டு பர்வதங்கட்கும் மத்தியிலுள்ள பூமியை ஆரியவர்த்தம்‌ எனக்கூறுவர்‌ பெரியோர்‌.”

அக்காலத்துக்குப்‌ பிறகு இம்மதம்‌ ஹிந்துமதம்‌ என்னும்‌ பெயரடைந்தது. இப்பெயராலேயே தற்காலம்‌ ௮து வழக்கமாய்க்‌ குறிப்பிடப்படுகின்றது.

மேற்கண்ட பத்தியில் பல விஷயங்கள் தெளிவுபடுகின்றன. ஒன்று சனாதன தர்மம் என்பதற்கு வேறு இரண்டு பெயர்கள் உண்டு. ஒன்று ஆரிய மதம், மற்றொன்று இந்து மதம். சனாதன தர்மம் ஆரியர்களின் வேதங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆரியர்கள் வட நாட்டில் குடியேறியவர்கள். அதாவது இமயத்துக்கும், விந்திய மலைகளுக்கும் இடையிலுள்ள பகுதியே அவர்கள் குடியேறிய ஆரியவர்த்தம்.

இக்கருத்துகள் எல்லாம் எண்ணிறைந்த ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகளாகும். காசி ஹிந்து வித்தியாசாலை கமிட்டியாரும் ஆராய்ந்து தொகுத்து இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவியோ, வேறு யாருமோ இந்தக் கருத்துகளை மறுக்க வேண்டுமென்றால், அதற்கு தக்க ஆதாரங்களை தர வேண்டும்.

RNRavi hate speech in assembly

வேதங்களை யார் படித்தார்கள்?

இந்த நூல்களை மேலும் ஆராயும்போது சுருதி, சுமிருதி ஆகிய இரண்டுமே சனாதன தர்மத்தின் முக்கிய அங்கங்கள் என்று அவை கூறுகின்றன. இதில் சுருதி என்பதில் வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உப நிடதங்கள் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது. இவற்றில் மிக முக்கியமானதான வேதங்களை எடுத்துக்கொள்வோம். அவையே மூல நூல்கள்; புனிதமானவை.

வேதங்களை இந்துக்கள் எனப்படும் அனைவரும் படித்தார்களா? ஆளுநர் ரவி எல்லோரையும் உள்ளடக்கும் உன்னதமான தத்துவம் சனாதன தர்மம் என்று கூறுகிறார். அப்படி எல்லோரையும் உள்ளடக்குவதும், ஒரே குடும்பமாக நினைப்பதும்தான் சனாதன தர்மம் என்றால் புனித நூல்களான வேதங்களை அனைவரும் படிக்க வகை செய்ய வேண்டுமல்லவா?

எனக்குத் தெரிந்தவரை வேதபாடசாலைகளில் பிராமணச் சிறுவர்கள் மட்டும்தான் படிப்பார்கள். வேறு யாரும் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக நான் கேள்விப்பட்டதில்லை. எந்த காலத்திலேயும் சத்திரியர்களோ, வைசியர்களோ, சூத்திரர்களோ வேதம் படித்ததாகத் தெரியவில்லை.

பார்ப்பனர்கள் மட்டும்தான் படிப்பார்கள். ஆனால், வேதங்கள் அனைவருக்கும் புனிதமான நூல் என்ற விநோதமான ஏற்பாடு சனாதன தர்மம் எனப்படும் இந்து மதத்தில் மட்டுமே இருக்குமென தோன்றுகிறது. பைபிளை கிறிஸ்துவர்கள் எல்லோரும் படிக்கிறார்கள்; குரானை முஸ்லிம்கள் எல்லோரும் படிக்கிறார்கள். ஆனால், வேதங்களை இந்துக்கள் எல்லோரும் படிப்பதில்லை; படிக்க அனுமதிக்கப்படவில்லை.

சரி பார்ப்பனர்கள் மட்டும்தான் படிப்பார்கள் என்றாலும், அவர்கள் எல்லோருமே படிப்பார்களா என்றால் அதுவும் கிடையாது. ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே பிராமணர்கள் அமைப்பொன்றில் பேசும் காணொலி பரவலாகக் காணக் கிடைக்கிறது. அவர் கஞ்சிக்கு வழியில்லாத ஏழை பிராமண மாணவர்கள் மட்டும்தான் வேத பாடசாலையில் இலவச உணவை கருத்தில் கொண்டு படிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார். இதுவும் நாம் நேரடியாக காணக்கூடிய உண்மைதான்.

அப்படியே வறுமையின் காரணமாக வேதம் படிப்பவர்களும் வேதங்களின் பொருள் உணர்ந்து படிக்கிறார்களா, அதில் உள்ள அரிய கருத்துகளை அனைவருக்கும் கூறுகிறார்களா என்றால் அதுவும் கிடையாது. வேதங்கள் எனப்படும் சுலோகங்களை மனனம் செய்வார்களே தவிர அவற்றை புரிந்துகொள்வதோ, ஆராய்வதோ, விவாதிப்பதோ கிடையாது. ஆனால் வேதங்களை ஆதாரங்களாகக் கொண்டதுதான் சனாதன தர்மம் என்கிறார்கள்.

RNRavi hate speech in assembly

மனு சுமிருதியும், வர்ண தர்மமும்

நான்கு சுமிருதிகள் சனாதன தர்மத்தில் முக்கியமானவை என்று இந்த நூல்கள் கூறுகின்றன. அவை: 1. மனுஸ்மிருதி; 2. யாஞ்ஞய வல்க்கிய ஸ்மிருதி; 3. சங்கிலிகதஸ்மிருதி; 4. பராசரஸ்மிருதி.

வர்ணங்கள் குண அடிப்படையில் காணப்படவேண்டும் என்பதெல்லாம் மேலோட்டமான புரட்டு. உண்மையில் இந்த நூல் என்ன சொல்கிறதென்றால் ஜீவாத்மாவின் வளர்ச்சிப் பாதையில் அவை இந்த நாலு வர்ணங்களுக்கான குணத்துடன் இருக்கும். எந்த வர்ணத்தின் குணத்தில் இருக்கிறதோ அந்த வர்ணத்தின் சரீரத்தில் பிறக்க வேண்டும்.

ஆனால் இப்போதெல்லாம் ஜீவாத்மாக்கள் தவறான சரீரத்தில் பிறப்பதால் பெரும் குழப்பங்கள் விளைகின்றன என்று சொல்கின்றன. அதாவது சூத்திர குணத்துடன் இருக்கும் ஜீவாத்மா சூத்திர சரீரத்தில் பிறக்காமல், பிராமண சரீரத்தில் பிறந்துவிடுவதால் பெரும் குழப்பங்கள் விழைகின்றன என்று இந்த நூல்கள் புலம்புகின்றன.

நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். சரீரங்கள், அதாவது மனித உடல்கள், திட்டவட்டமாக வர்ணங்களாகப் பிரிந்து உள்ளன. ஜீவாத்மா அதன் குணத்துக்கேற்ற சரீரத்தில் பிறக்க வேண்டுமாம். தப்பான சரீரத்தில் பிறக்கக் கூடாது.

சூத்திர உடல்கள் பிறருக்கு ஊழியம் செய்யவே உள்ளன. அந்த சரீரத்தில் போய் பிராமண குணமுள்ள ஜீவாத்மாக்கள் பிறந்தால், அவை அவற்றுக்குரிய தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் கலகம் செய்கின்றன என்று சொல்கிறது இந்த நூல். அவதார் திரைப்படம் நினைவுக்கு வருகிறதா?

ஜீவாத்மா சூத்திர உடலில் பிறந்து முதிர்ச்சியடைந்து அடுத்த பிறவியில் பிரமோஷன் பெற்று வைசிய உடலிலோ, சத்திரிய உடலிலோ பிறந்து பின்னர்தான் பிராமண உடலில் பிறக்க வேண்டும். அந்தந்த உடலுக்குரிய தர்மத்தை அது கடைப்பிடித்தால்தான் பிரமோஷன் கிடைக்கும்.

இதையெல்லாம் சரியாகப் படிக்காமல் தொலைக்காட்சிகளில் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். எந்த சான்றாதாரமும் காட்டுவதில்லை. வர்ணங்கள் முதலில் பிறப்பின் அடிப்படையில் இல்லை என்று நேரில் பார்த்தாற்போல பேசுகின்றனர்.

சரி அப்படித்தான் முதலில் இருந்தது என்று வைத்துக் கொள்வோம். பின்னால்தானே பிறப்பின் அடிப்படையில் வர்ணம் என்பது உருவானது? அது தவறென்றால் இப்போதும் ஏன் அதனை தொடர வேண்டும்? எதனால் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளும் அகமண முறையை பின்பற்ற வேண்டும்?

ஆளுநரும் வசுதேவ குடும்பகம், எல்லோரும் குடும்பத்தின் அங்கம் என்றெல்லாம் சொல்கிறாரே, அவர் ஏன் ஜாதியெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளுங்கள். இந்துக்கள் எல்லோரும் ஒரே குடும்பம்தான் என்று சொல்லக் கூடாது?

குறிப்பாக தொலைக்காட்சியில் வர்ணம் எல்லாம் குணரீதியானது என்று கூறும் பிராமண சங்கத்துக்காரர் ஒருவர் அவர் சங்க நிகழ்ச்சியில், இளம் வயது ஆண், பெண்களை நிற்க வைத்து, ஒரு கையை உயர்த்தி நாங்களெல்லாம் பிராமணர்களை மட்டுமே திருமணம் செய்துகொள்வோம் என சபதம் ஏற்கச் செய்கிறார்.

ஒருபுறம் சனாதன தர்மம் மற்றவரில் நம்மை காண்பது, நம்மில் மற்றவரை காண்பது, வெரி வெரி இன்க்ளூசிவ், ஆல் ஆர் ஒன் ஃபேமிலி என்பது, மற்றொருபுறம் அகமண முறையை இறுக்கமாகப் பின்பற்றுவது. ஜாதியை காப்பாற்றுவது. என்ன ஓர் இரட்டை வேடம்!

சனாதன தர்மத்தையாவது காப்பாற்றுவார்களா?

அது மட்டுமல்ல பிரச்சினை. ரங்கராஜ் பாண்டே பிராமணர் சங்கக் கூட்டத்தில் என்ன கேட்கிறார் என்றால்  நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த பிராமணர்கள், வேதம் படித்து கோயிலிலோ, அல்லது புரோகிதராகவோ வேலை செய்யும் குடும்பத்தில் திருமணம் செய்து கொள்வார்களா என்று கேட்கிறார்.

அதாவது சனாதன தர்மத்தைக் காப்பாற்ற வேதம் படித்துவிட்டு, கோயில் வேலை செய்தாலோ, சடங்குகளை செய்துவைக்கும் புரோகிதராக இருந்தாலோ அவர்களைப் பட்டயக் கணக்காளராகவோ, மருத்துவராகவோ, பொறியாளராகவோ உள்ளவர்கள், அவர்கள் பெண்கள் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள் என்று சொல்கிறார்.

ரங்கராஜ் பாண்டே ஒன்றும் இல்லாததைச் சொல்லவில்லை; நாமே பார்த்துத் தெரிந்துகொள்ளக் கூடியதுதானே இதெல்லாம். யோசித்துப் பார்த்தால் சனாதன தர்மத்தின் நிலை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. பிறகு ஏன் அதை எல்லோர் தலையிலும் கட்ட வேண்டும்?

எதனால் இந்த ஆரிய பதற்றம்?

இந்தச் சூழ்நிலையைக் கவனமாக ஆராய்ந்தால்தான் ஆரிய கருத்தியல் ஏன் பதற்றமடைகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். அது திராவிடத்தை கண்டு மட்டும் பதற்றமடையவில்லை. அதன் ஆகப் பெரிய நம்பிக்கையான பாரதீய ஜனதா கட்சியைக் கண்டும் பதற்றமடைகிறது.

தேர்தலில் வெல்ல வேண்டுமானால் பணம் வேண்டும்; பெருவாரி மக்களின் ஓட்டு வேண்டும். இதெல்லாம் பனியா முதலாளிகள், பார்ப்பனரல்லாத சமூகங்கள் அவர்களிடையேதான் உள்ளது. அதனால் நாளடைவில் அந்த கட்சியும் பார்ப்பனர்களை கைகழுவிவிட்டால் என்ன செய்வது என்ற ஒரு அச்சம் ஏற்படத்தானே செய்யும்?

இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. ஆரிய கருத்தியல் அதன் மேலாதிக்க ஆசையை கைவிடுவது மட்டுமே காலத்துக்குப் பொருத்தமாக இருக்கும். இந்திய வரலாறு என்பது ஆஸ்திகம் மட்டுமல்ல. திராவிட பண்பாடு, நாஸ்திக மதங்களான பெளத்தம், சமணம், அஜீவகம் என பல்வேறு வளமான த த்துவ மரபுகளைக் கொண்ட து.

ஆரியம் தானும் அந்த பன்மைத்துவ பண்பாட்டு நீரோட்டங்களில் ஒன்று என்பதை ஏற்றுக்கொண்டு அமைதியடைய வேண்டும். எப்படியாவது சனாதன தர்மத்தை இந்தியாவின் ஒரே கருத்தியலாக நிறுவ வேண்டும் என்ற ஆசையைக் கைவிட வேண்டும். கூடியவரை காலத்துக்கேற்ற மானுடவாத சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு, அகமண முறை போன்ற தீய வழக்கங்களை, வர்ண கோட்பாட்டு சிந்தனையை கைவிட வேண்டும்.

இந்த காலத்துக்கேற்ற புதிய தர்ம சாஸ்திரங்களை சமஸ்கிருதத்தில் எழுதுங்கள். எல்லோரையும் அதில் பயிற்றுவிக்கச் செய்யுங்கள். பிற்ப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறுங்கள். அறிவியலுக்குப் பொருந்தாத மறுபிறவி கோட்பாடெல்லாம் வேண்டாம். ஜீவாத்மாவும் வேண்டாம், பரமாத்மாவும் வேண்டாம். நல்லாத்மாவாக இருங்கள்.

கட்டுரையாளர் குறிப்பு:

RNRavi hate speech in assembly by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

22 ஓவரில் சுருண்டது இலங்கை… வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்தியா

ஆக்ரோஷம்… அதிரடி… பாக்ஸ் ஆபீஸில் வீரசிம்ம ரெட்டி அதகளம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.