தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தில் இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை வனத்துறை திறந்துள்ளது. இதில் வெள்ளியங்கிரி மலை ஏற அரசு ரூ.5,099 கட்டணம் நிர்ணயித்துள்ளது.
இந்தநிலையில், வெள்ளியங்கிரிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் வரும் பக்தர்களை தடுப்பதற்கு உதயநிதி திட்டம் தீட்டுகிறார் என்று பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மற்றும் பாஜக தகவல் தொழில்நுட்ப அணி துணை தலைவர் செல்வக்குமார் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுதொடர்பாக மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், கோவை வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மலையேற்றம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு ரூ.5,099 கட்டணம் நிர்ணயித்துள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு இன்று (அக்டோபர் 26) மறுத்துள்ளது.
இதுதொடர்பாக உண்மை சரிபார்ப்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் மலையேற்றம் செய்ய வனத்துறை சார்பில் ‘டிரெக் தமிழ்நாடு திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய ரூ.5,099 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், காப்பீடு, வழிகாட்டி வசதி, இருவேளை உணவு, இருவேளை ஸ்னாக்ஸ், 13 கிமீ வாகனப் பயணம், துணி பேக், தொப்பி, பேனா, பறவைகள் பேம்பிளட் போன்றவை அடங்கும்.
இது முழுக்க முழுக்க டிரெக்கிங் சேவை மட்டுமே. ஆன்மீகப் பயணம் இல்லை. கோயிலுக்கு முன்பே இந்த பயணம் முடிந்துவிடும். பக்தர்கள் மலையேற்றம் செல்லும் மாதங்களில் இந்த டிரெக்கிங் சேவை வழங்கப்படாது. மலையேற்றம் செய்யும் பக்தர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“அண்ணே நீங்க என்ன சொல்றீங்களோ செஞ்சிருவோம்” – செல்லூர் ராஜூவிடம் அமைச்சர் மூர்த்தி