தமிழக நிதிநிலைமை குறித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் நேற்று (ஜனவரி 18) எம்ஜிஆா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
“2021-இல் அதிமுக ஆட்சியை விட்டு வந்தபோது, தமிழக அரசின் கடன் ரூ. 5.18 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. இதில் ரூ. 1.14 லட்சம் கோடி திமுக கடன் வாங்கி வைத்தது.
அதிமுக ஆட்சியில் கொரோனா காரணமாக வருவாய் இல்லை. அப்படி இருந்தும் கடன் குறைவாகத்தான் இருந்தது.
ஆனால் தற்போது தமிழக அரசின் கடன் தொகை ரூ. 8 லட்சம் கோடிக்கும் மேல் உயா்ந்துள்ளது. இருந்தும் புதிய திட்டங்கள் எதையும் இந்த ஆட்சி செயல்படுத்தவில்லை. அரசின் கடன் மட்டும் எப்படி பல மடங்கு அதிகரிக்கும்? அரசின் கடன் தொகையை அதிகரித்திருப்பதுதான் திமுக அரசின் சாதனையாக இருக்கிறது.
இந்த கடனையெல்லாம் எப்படி கட்டுவது? யார் கட்டுவது? வரி மேல் வரி போட்டு மக்களிடம் தான் வசூலிக்கிறார்கள்” என்று விமர்சித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு இன்று (ஜனவரி 19) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார்.
விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு நிதிநிலை திவாலாக போகிறது என்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவருக்கு அடிப்படை புரிதல் இல்லை.
அதிமுக ஆட்சியில் குறைவாக கடன் வாங்கியதாகவும் திமுக ஆட்சியில் அதிகம் கடன் வாங்கியதாகவும் கூறுகிறார்.
2011ல் வரவு – செலவு திட்ட கணக்கை எடுத்துக்கொண்டால், அதன் மொத்த மதிப்பு 1 லட்சத்து 2 ஆயிரம் கோடியாகத்தான் இருந்தது. அப்போது நம்முடைய உள்நாட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பு 7.51 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதைத்தாண்டி நிதிக்குழு ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதை நிர்ணயிக்கும். அதன்படி, 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடு அரசு 28.7 சதவிகிதம் அளவுக்கு கடன் வாங்கலாம் என்று நிதிக்குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால்2021-22-ல் தமிழ்நாடு அரசு 27.01 சதவிகிதம் அளவுக்கே கடன் வாங்கியது. 2022-23-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29.3 சதவிகிதம் கடன் வாங்க பரிந்துரைத்த நிலையில் 26.87% கடன் மட்டுமே வாங்கப்பட்டது.
2023-24ல் 29.1 சதவிகிதம் பரிந்துரைக்கப்பட்டது, நாம் 27.1 சதவிகிதம் மட்டுமே கடன் அளவு வைத்திருந்தோம் 2024-25ல் 28.9 சதவிகிதம் கடன் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் 26.4 சதவிகிதம் தான் வாங்கினோம். இந்த வரம்புக்குள் தான் நாம் கடன் வாங்கியிருக்கிறோம்.
அவர்கள் ஆட்சியில் 3 லட்சம்தான் வாங்கியிருக்கிறார்கள், அதைவிட அதிகமாக இந்த ஆட்சியில் வாங்கியிருக்கிறார்கள் என்று ஒப்பிடமுடியாது. வரம்புக்குள் கடன் வாங்குகிறோமா, அதை திருப்பி செலுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். அவர்கள் ஆட்சியிலும் கடன் வாங்கியிருக்கிறார்கள்.
மிகப்பெரிய மாநிலமான மகாராஷ்டிராவும் கடன் வாங்கியிருக்கிறது. நமது வளர்ச்சி சதவிகிதம் 14 %ஆக அதிகரித்திருக்கிறது. நிதி மேலாண்மையில் நுட்பமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்” என புள்ளி விவரங்களோடு கூறினார்.
மேலும் அவர், ”மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நாங்கள் தான் அமித்ஷாவை அழைத்து வந்து பேர் வைத்தோம் என்கிறார் எடப்பாடி. இந்த திட்டத்துக்கு பேர் வச்சாரே… சோறு வச்சாரா… இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மாநில அரசு 26,000 கோடி செலவழித்திருக்கிறது.
மின்சாரத் துறையை பொறுத்தவரை 56,000 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம். மத்திய அரசு திட்டங்களுக்கு அவர்கள் பங்கீடு நமக்கு கொடுக்காததால், கடன் சுமையும் அதிகரித்திருக்கிறது.
பேரிடர் பாதிப்பு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் பங்கு என எதற்குமே நிதி கொடுப்பதில்லை.
அதுபோன்று, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதிப்பகிர்வாக வெறும் ரூ.7057 கோடி மட்டுமே அளித்துள்ளது. தென்மாநிலங்களுக்கு மொத்தமாக 27,336 கோடிதான் கொடுத்திருக்கிறார்கள். உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு 40% அளவுக்கு ஒன்றிய அரசு வரிப் பகிர்வு அளித்துள்ளது. உபிக்கு மட்டும் ரூ.31,000 கோடி வழங்கியுள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.
ஒன்றிய அரசால் நமக்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது. எனினும் முதல்வரின் அறிவுரையால் நாங்கள் நிதிநிலைமையை திறமையாக கையாண்டு வருகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“என்னைக்கும் விடாமுயற்சி” : வெளியானது செகண்ட் சிங்கிள்!
டிஜிட்டல் திண்ணை: இடைத் தேர்தல் வியூகத்தில் ஸ்டாலின் செய்த திடீர் மாற்றம்!