பரந்தூர் விமானநிலையம்: மத்திய அரசிடம் தமிழக நிதியமைச்சர் பேசியது என்ன?

Published On:

| By Kalai

பரந்தூர் விமான நிலைய கோப்புகள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக விமான போக்குவரத்து அமைச்சர் உறுதியளித்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  கூறியுள்ளார்.

டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய  சிந்தியா ஆகியோரை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டெல்லியில் இன்று(டிசம்பர் 22)சந்தித்து பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

பின்னர், டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வெளியுறவுத்துறை அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது, தமிழகத்தின் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தொழில் தொடங்க முனைப்புடன் இருப்பது தொடர்பாக விவாதித்தேன்.

பின்னர் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து மதுரை வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசித்தேன். குறிப்பாக மதுரை வெளிவட்ட சாலை பணியை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

மதுரை – கொச்சி நான்கு வழிச்சாலை திட்டத்தின் DPR பணிகள் 2018 ஆம் ஆண்டு முடிவடைந்த பிறகும் அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. அந்த அனுமதியை  விரைந்து  வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். 

பின்னர், பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவற்றை சென்னை சென்ற பிறகு முதல்வரிடம் விவரிக்க உள்ளேன். 

மேலும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து மதுரை விமான நிலைய விரிவாக்கம்  தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளேன். சர்வதேச விமானங்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கான அனுமதிகளையும் விரைவுபடுத்த கோரியுள்ளேன்.

விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த பின்னர் விமான இயக்குனரகம் தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஓடுபாதை underpass அமைப்பதற்கு பதிலாக வேறு மாற்றங்களை செய்வது குறித்து விளக்க கடிதத்தை அனுப்புவதாக  அமைச்சர் சிந்தியா தெரிவித்துள்ளார். அது தொடர்பான விளக்கங்களையும் முதல்வருடன் ஆலோசித்து வழங்குவோம்.

குறிப்பாக, பரந்தூர் விமான நிலைய கோப்புகள் கிடைக்கப்பெற்றது என்றும், அதனை விரைந்து பரிசீலித்து விரைவில் முடிவை அறிவிப்பதாக மத்திய  விமான போக்குவரத்து துறை அமைச்சர்  உறுதி தெரிவித்துள்ளார்” என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கலை.ரா

“காவி இருக்கும் இடத்தில் இருந்தால்தான் நல்லது”: செல்லூர் ராஜூ காட்டம்!

சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel