பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (மே 8) மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 3 கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி, இஸ்லாமியர்களுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்தார். இது நாடு முழுவதும் சர்ச்சையானது.
இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, “காங்கிரஸ் இந்தியாவில் ஆட்சி பொறுப்பேற்றால், உத்தரப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை “பாபரின் பெயரில்” பூட்டிவிடும்” என பேசியிருந்தார்.
இதற்கும் பல்வேறு தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில், “பிரதமர் மோடி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்” என கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக இன்று (மே 8) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரச மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “தேர்தல் பரப்புரையில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி மதக் கலவரத்தை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். ஏப்ரல் 21ஆம் தேதி முதல் பல தேர்தல் பிரச்சாரங்களில் முஸ்லீம்களுக்கு எதிராக விரும்பத்தகாத வகையில் கருத்துகளை பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி குறித்தும் தவறான பரப்புரைகளை பிரதமர் மோடி செய்து வருகிறார்” என செல்வப்பெருந்தகை மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில், பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் செல்வப்பெருந்தகை மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த மனுவில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்று இருப்பதாகவும், அதனை நீக்கவேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது, “பிரதமர் மோடி முஸ்லீம்கள் குறித்து பேசியதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தோம். அவர்கள் பிரதமரின் பெயரை நீக்க சொல்லி இருக்கிறார்கள். இதனை மாற்றி சமர்ப்பிக்குமாறு சொல்லி இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பான கருத்துகளை எல்லாம் கூறி ட்வீட் போடுவார். பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பேசுவார். எருமை அரசியல், சாதி அரசியல், மத அரசியல் என அனைத்தையும் பற்றி பேசுவார். மக்களிடையே வன்மத்தை தூண்டும் வகையில் பேசுவார்.
பாஜகவால் தான் இப்படி உண்மைக்கு புறம்பான வேலைகளை, மக்களுக்கு எதிரான வேலைகளை செய்யமுடியும். ஆனால், அவர்களுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யக்கூடாது” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தக் லைஃப் : சிம்புவின் மரண மாஸ் கெட்டப்.. அறிமுக வீடியோ இதோ!
மியூசிக் டைரக்டர் பெயர் இல்லாத அதர்வாவின் “DNA” ஃபர்ஸ்ட் லுக்..!