டிஜிட்டல் திண்ணை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம்…  திமுக ரோல் என்ன?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ். அழகிரி ஜூன் 27ஆம் தேதி பிற்பகல் டெல்லியில் அளித்த பேட்டியின் வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அதை பார்த்த பிறகு வாட்ஸ் அப் நம்பர் மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.

“2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட கே. எஸ். அழகிரி அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட இருக்கிறார் என்று அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. ஜூன் 25ஆம் தேதி அவரது டெல்லி விசிட்டை அடுத்து அழகிரி தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவது பற்றிய  யூகங்கள் வலிமை அடைந்தன ‌‌‌.

ஆனால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, வேணுகோபால் மற்றும் முகுல் வாசினிக் டெல்லியில் சந்தித்த பிறகு ஜூன் 27 ஆம் தேதி,  பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி… ‘நான் சந்தித்த யாரும் என்னிடம் பதவி மாற்றம் குறித்து எதுவும் பேசவில்லை. தமிழ்நாடு அரசியல் நிலவரம் பற்றி தான் பேசினார்கள். நான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்ந்தாலும் மகிழ்ச்சிதான். எனக்கு பதிலாக இன்னொருவரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான்’ என்று யூகங்களுக்கு வலு சேர்ப்பதாகவே பேட்டி அளித்தார்.

Tamil Nadu Congress leader change

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து டெல்லியில் என்ன நடக்கிறது என்று விசாரித்த போது… ’தற்போது அடுத்து வர இருக்கும் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட  மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய தலைமை கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அதே நேரம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வர வேண்டும் என்றும் விரும்புகிறது.

இதற்காக கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லகுமார், கரூர் எம்பி ஜோதிமணி, சிவகங்கை எம் பி கார்த்தி சிதம்பரம், விருதுநகர் எம்பி மாணிக்கம் பெயர்கள் ஊடகங்களில் அடிபடுகின்றன.

இந்த ரேசில் முதன்மையானவராக செல்லகுமார் இருக்கிறார் என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில். இதை அறிந்த அழகிரி தரப்பு டாக்டர் செல்லகுமாருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு இதய சிகிச்சை நடைபெற்றுள்ளது. எனவே அவரால் தமிழகம் முழுவதும் சென்று கட்சி பணி செய்ய முடியாது. எனவே மக்களவைத் தேர்தல் வரை அழகிரியை தொடர அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது.

ஒருவேளை அப்படி அழகிரியை மாற்றினால் செயல் தலைவர்களாக அவரது ஆதரவாளர்களான செங்கம் குமார், ரஞ்சன் குமார் ஆகியோரை நியமிக்க வேண்டும் என்று அழகிரி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

Tamil Nadu Congress leader change

அதேநேரம்  ராகுல் காந்தி கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லகுமாரிடம்… ’உங்களது மக்களவைத் தொகுதியிலே இருக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை விரைவில் முடித்துவிட்டு வாருங்கள். உங்களுக்கு வேறு ஒரு பொறுப்பு இருக்கிறது’ என்று உத்தரவிட்டிருக்கிறார்.

அதன்படியே செல்லகுமார் தனது கிருஷ்ணகிரி  தொகுதியில் நிறைவேற்றப்பட்டு வரும் ரயில் பாதை திட்டம், ஓசூர் பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட முக்கியமான திட்டப் பணிகள் தொடர்பாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் 16 ஆய்வுக் கூட்டங்களை  நடத்தியுள்ளார்.

மேலும் மேற்கு வங்காள உள்ளாட்சித் தேர்தல் வரும் ஜூலை 8ஆம் தேதி நடக்கிறது. அதற்கும் டாக்டர் செல்லகுமார் தான் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே ஜூலை முதல் வாரம்   தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயல் தலைவர்களாக அழகிரி சிபாரிசு செய்யப்படுகிறவர்கள் நியமிக்கப்படுவார்களா அல்லது ஜோதிமணி மற்றும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் முக்கிய பங்கு வகித்த சசிகாந்த் செந்தில் ஆகியோர் நியமிக்கப்படுவார்களா என்று எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது’ என்கிறார்கள். 

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் யார் என்ற ஆர்வத்தில் திமுகவும் இருக்கிறது. கூட்டணி கட்சி என்ற போதும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய  விவகாரங்களில் திமுக நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிட்டு வருகிறது.

கடந்த ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்க விரும்பவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தும் கூட அவரது வீட்டுக்கே சென்று திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் வலியுறுத்தினார். அந்த வகையில் உடனடியாக இளங்கோவன் வேட்பாளராக டெல்லி தலைமையால் அறிவிக்கப்பட்டார்.

இந்த பின்னணியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் விவகாரம் பற்றி திமுகவினரிடம் விசாரித்தபோது, ‘அகில இந்திய காங்கிரஸ் தலைமையே தற்போது திமுகவுடன் நல்ல இணக்கத்தோடும் உறவுடனும் இருக்கிறது.  எனவே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யார் வந்தாலும் அவர்கள் திமுகவோடு இணக்கமாகவே இருப்பார்கள்.

ஆனாலும் திமுகவுக்கு சில கணக்குகள் இருக்கின்றன’ என்கிறார்கள் திமுகவினர். அந்த வகையில்  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் யார் என்ற விவகாரத்தில் திமுகவின் ஆதரவோடு காங்கிரஸ் புள்ளிகள் சிலர் செயல்பட்டு வருவதும் நடந்து கொண்டிருக்கிறது” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

பருவ மழைக்கு முன்பே சாலைகள் சீரமைப்பு : எ.வ.வேலு உத்தரவு!

கனிம வளம் – ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு!

+1
0
+1
1
+1
1
+1
5
+1
1
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *