நெல்லை கண்ணனுக்கு அரசு மரியாதை: வேல்முருகன் கோரிக்கை!

அரசியல்

தமிழறிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான நெல்லை கண்ணன் இன்று (ஆகஸ்ட் 18) நெல்லையில் காலமானார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த நெல்லை கண்ணனுக்கு அரசு மரியாதோடு இறுதி நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

நெல்லை கண்ணன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராசர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன், விழா மேடையிலேயே என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன்.

‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலக்கிய அறிவில் செறிந்த, பழகுதற்கினிய நெல்லை கண்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

tamil nadu chief minister mk stalin condolence

தமிழருவி மணியன், காமராஜர் மக்கள் கட்சி தலைவர்

“நெல்லை கண்ணனுடைய மரணம் என்னுள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், நானும், நெல்லை கண்ணனும் சமகாலத்தவர்கள். இலக்கிய உலகில் அவருக்கிருந்த ஈடுபாடு அரசியல் ஈடுபாட்டைவிட அதிகம் என்றுதான் சொல்வேன்.

தமிழை மிகவும் இருதயத்தில் வைத்து நேசித்த அற்புதமான மனிதர் அவர். குறிப்பாக கவிஞர்கள் பாரதி, கம்பன், கண்ணதாசன் ஆகிய மூன்று பேரிடம் எல்லையற்ற காதல் கொண்டவர்.

கம்பராமாயணத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை மின்னல் வேகத்தில் சொல்லக்கூடிய ஆற்றல்பெற்றவராக, ஒரே மனிதராக இலக்கிய உலகில் வலம் வந்தார். நெல்லை கண்ணன் இன்று நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்கிற செய்தி உண்மையிலேயே அதிர்ச்சியைத் தருகிறது”.

கவிஞர் வைரமுத்து

“நெல்லை கண்ணனின் மறைவு எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததோடு, ஓர் ஆழ்ந்த கனத்த மனத்தையும் விட்டுச் செல்கிறது. அவர் இவ்வளவு சீக்கிரம் மறைந்துவிடுவார் என்று நான் நினைக்கவில்லை.

அடிக்கடி அவர் நோய்வாய்ப்படுவது அவரது இயல்பு. நோய் சிலருக்கு இருந்துகொண்டே இருக்கும். அவர்களை அது பெரிதும் துயர்ப்படுத்தாது.

இது இவருக்கு நோய் இருந்து அது அவருடைய உயிரையே கொல்லுகிற அளவுக்கு நீண்டிருக்கிறது என்பது எனக்கு அதிர்ச்சி.

tamil nadu chief minister mk stalin condolence

நெல்லை கண்ணன் இடத்தை யாரும் ஈடுசெய்ய முடியாது. காரணம், அவர் ஒரு பொருள் குறித்த சிந்தனையாளர் அல்ல. சங்க இலக்கியம், நீதி இலக்கியம், கம்பராமாயணம், சமய இலக்கியம், சிற்றிலக்கியம் உள்ளிட்ட பல இலக்கியங்களோடு நெஞ்சில் பொதிந்து வைத்திருந்து தமிழக மக்களோடு பகிர்ந்துகொண்டவர்.

அதனால் ஒரு மனிதன் இறந்தான் என என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு நீண்ட தமிழின் இலக்கிய வரலாற்றைத் தேக்கிவைத்திருந்த ஒரு கருவூலம் இன்று காலமாகிவிட்டது என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகிறது”.

சுப.வீரபாண்டியன், திராவிட இயக்க தமிழர் பேரவை

உண்மையிலேயே அவருடைய மறைவுச் செய்தி கேட்டு இந்த நிமிடம் முதல் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. அரசியல் சார்ந்து சித்தாந்தம் சார்ந்து கருத்து வேறுபாடுகள் உண்டு.

ஆனாலும் அவருடைய தமிழ், இலக்கியச் சொற்பொழிவு விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் தமிழுக்கு ஒரு பெரிய சொத்தாகவே இருந்தார். அண்மையில் தமிழக அரசின் சார்பில்கூட அவருக்குரிய விருதுகள், மரியாதைகள் செய்யப்பட்டன.

எல்லாவற்றையும் தாண்டி எல்லாச் சிறப்புக்கும் உரியவர் அவர். இடையில் அவர் சில துயரங்களுக்கு ஆளானார். சிறையில் இருந்து வெளிவந்தபிறகு என்னிடம் இரண்டு மூன்று முறை பேசினார்.

எப்படி அவருடைய மறைவுச் செய்தி எனக்கு துயரத்தைத் தருகிறதோ, அதுபோல அவர் சிறையில் இருந்த செய்தியும் துயரம் தந்தன.

tamil nadu chief minister mk stalin condolence

தி.வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தி.வேல்முருகன் அவர்கள் இன்று (18-08-2022) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், ‘தமிழ்க்கடல்’ அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி பெரும் துயரமளிக்கிறது.

நாடறிந்த பேச்சாளராகவும் தமிழறிஞராகவும் விளங்கிய ‘தமிழ்க்கடல்’ அய்யா நெல்லை கண்ணன் அவர்கள், அரசியல் தலைவர், எழுத்தாளர், இலக்கியப் பேச்சாளர், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மீது கருத்தியல் உடன்பாடு கொண்ட ஐயா அவர்கள், தனிப்பட்ட முறையில் என் மீது அளவுக்கடந்த அன்பை வைத்திருந்தார்.

மதவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் அவற்றுக்கெதிராக பெரும் கருத்தியல் போரை நடத்தி வந்த சிறந்த அறிவாளர் – கருத்துப் பங்களிப்பாளரான அய்யா நெல்லை கண்ணன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று.

சமகாலத்தில் தமிழ் இலக்கியத்தை தன் சொற்களால் வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சி மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் மறைவு தமிழினத்திற்குப் பேரிழப்பாகும்.

அய்யா நெல்லை கண்ணன் அவர்களுடைய மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் இலக்கியத்தை தன் சொற்களால் வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சியை மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள அய்யா நெல்லை கண்ணன் அவர்களை போற்றும் வகையில், அவரின் இறுதிச் சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் வேல்முருகன்.

ஜெ.பிரகாஷ்

தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *