சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 29) மாலை தொடங்கிய அமைச்சரவை கூட்டம் இரவு நிறைவுபெற்றது.
அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்கள், பல்வேறு துறைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளித்தல், மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்குதல், மின்கட்டண உயர்வு, பரந்தூர் விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம்,
முன்னாள் முதலவர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு தொடர்பான டேவிதார் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கிய அறிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இதில் முக்கியமாக, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வலுவான அவசர சட்டத்தைப் பிறப்பிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதன்படி, நீதிமன்றம் சென்றாலும் தடை ஆணை பெற முடியாத அளவிற்கு வலுவான அவசர சட்டத்தைப் பிறப்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையையும் சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கிய அறிக்கையையும் சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஜெ.பிரகாஷ்