தமிழக பட்ஜெட் 2023-24: முக்கிய அம்சங்கள் – முழு விவரம்!

அரசியல்

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 20) நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய நிதியமைச்சர், முன்னெப்போதுமில்லாத அளவில் பல கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, நாங்கள் பதவியேற்கும் போது சுமார் 62,000 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, நடப்பு ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு குறைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடு

மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னையில் நினைவிடம் ஒன்று அமைக்கப்படும்.
அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக அரசால் ஐந்து கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

தமிழ் மொழி உலக மொழியாக வளர்வதற்கு, புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு, ‘தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு’ நடத்தப்படும். தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்க தமிழ்ப் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும்.
அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது. வரும் ஆண்டில், மேலும், 591 அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இச்சலுகையை அரசு வழங்கும்.

சென்னையில் அனைத்துத் தரப்பு மக்களின் வரவேற்பினைப் பெற்றுள்ள சங்கமம் கலை விழா, வரும் ஆண்டில் மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் முழுவதும் 25 பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

உலகாண்ட சோழர்களின் பங்களிப்பைப் போற்றவும், அக்கால கலைப்பொருட்கள், நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கவும், தஞ்சாவூரில் “மாபெரும் சோழர் அருங்காட்சியகம்” ஒன்று அமைக்கப்படும்.

இலங்கை தமிழர் நலன்

மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு 7,469 புதிய வீடுகள் கட்டப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக, 3,510 வீடுகளுக்கான பணிகள் 176 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 3,959 வீடுகளைக் கட்ட, வரும் நிதியாண்டில் 223 கோடி ரூபாயை அரசு வழங்கும்.

முன்னாள் படை வீரர்களுக்கான அறிவிப்பு

உயிர்த் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசால் வழங்கப்படும் கருணைத் தொகை 20 இலட்சம் ரூபாயிலிருந்து, இருமடங்காக உயர்த்தி 40 இலட்சம் ரூபாயாக வழங்கப்படும்.

சுகாதாரத் துறை

தமிழகத்தில் 711 தொழிற்சாலைகளிலுள்ள 8.35 இலட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் 1,000 படுக்கைவசதி கொண்ட ‘கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை’ இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனையில், 110 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவும், செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் விடுதிக்கு புதிய கட்டடங்களும் 147 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் 40 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். வரவு-செலவுத் திட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 18,661 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை

வரும் நிதியாண்டில், அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வரும் நிதியாண்டில் 110 கோடி ரூபாய் செலவில் நான்காம் ஐந்தாம் வகுப்புகளுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும் சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும்.

வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்காக 40,299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை

2,877 கோடி ரூபாய் செலவில், 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது. வரும் கல்வி ஆண்டிலேயே, இப்பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 2,783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘திறன்மிகு மையங்களாக’ தரம் உயர்த்தப்படும்.

120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் ‘தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம்’ (TN-WISH) அமைக்கப்படும்.

இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் (Factory Skill Schools) என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில், 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
மொத்தமாக, உயர்கல்வித் துறைக்கு 6,967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை அரசு அமைக்கும்.

25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வசதிகளுடன் சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை விரிவாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன்

மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் 100 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம், வரும் நிதியாண்டிலிருந்து ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 3,513 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் , சீர்மரபினர் நலன்

வரவு-செலவுத் திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு 1,580 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள்

வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30,122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் 18 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நல்ல நோக்கத்திற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கென சிறப்பு ‘புத்தொழில் இயக்கம்’ ஒன்று தொடங்கப்படும்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்திறனையும் நிதி நிலையையும் மேம்படுத்த அடிப்படைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான, நீண்டகாலத் திட்டமொன்றை அரசு வகுக்கும். பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 10,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மதிப்பீடுகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 16,262 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

மீனவர் நலன்

வரும் நிதியாண்டில் மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணம், மீன்பிடித் தடைக்கால நிவாரணம், மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டங்கள் என 4.3 இலட்சம் மீனவர்கள் பயன்பெறும் வகையில் 389 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பவளப்பாறைகள் மீன்களுக்கு புகலிடம், உணவு அளித்து மீன்குஞ்சுகள் பிழைக்கும் வாய்ப்புகளை அதிகரித்து மீன்வளத்தைப் பாதுகாக்கின்றன. நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட, பாக் வளைகுடா பகுதியில் 3 மாவட்டங்களில் கடற்பகுதியில் 217 செயற்கை பவளப்பாறை அலகுகள் 79 கோடி ரூபாயிலும், பாக் வளைகுடா தவிர ஏனைய மாவட்டங்களில் 200 செயற்கை பவளப்பாறை அலகுகள் 64 கோடி ரூபாயிலும் ஒன்றிய மாநில நிதியுதவியுடன் அமைக்கப்படும்.

சுற்றுச்சூழல்

கடல் மாசுபாட்டைக் குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ என்ற திட்டத்தை 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த அரசு செயல்படுத்த உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில் “தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்” என்னும் புதிய சரணாலயத்தை இந்த அரசு ஏற்படுத்தும். இது மாநிலத்தின் 18வது வனவிலங்கு சரணாலயமாகும்.

பறவைகள் பாதுகாப்புக்காக மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் செலவில் “பன்னாட்டுப் பறவைகள் மையத்தை” அரசு அமைக்கவுள்ளது.

இந்த வரவு-செலவுத் திட்டத்தில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறைக்கு 1,248 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி வளர்ச்சித் துறை

ஊரகப்பகுதிகளில் சிறப்பான சாலை வசதிகளையும், பொருளாதார மேம்பாட்டையும் உறுதிசெய்திட, முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை அரசு இவ்வாண்டு தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், முக்கியமான இணைப்புச் சாலைகள், பேருந்துகள் இயங்கும் சாலைகள் தரம் உயர்த்தப்படும். வரும் நிதியாண்டில், 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,145 கி.மீ. சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

கிராமப்புறங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில், 6,618 நீர்நிலைகளில் மொத்தம் 638 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும், 10,000 சிறிய நீர் நிலைகள், குளங்கள், ஊரணிகள் 800 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 22,562 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற மேம்பாடு

Tamil Nadu Budget 2023-24

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள்
7,145 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்களில் நிதியுதவிக்காக முன்மொழியப்படும். வரும் நிதியாண்டில் உயிர் நீர் இயக்கத்தைச் செயல்படுத்த 6,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்க, முதற்கட்டமாக, 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கவும் இதர வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மொத்தம் 172 கோடி ரூபாய் செலவில் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் அரசு-தனியார் பங்களிப்புடன் ஏறத்தாழ 1,500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

சென்னைத் தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை 50 கோடி ரூபாய் செலவில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தும்.

20 கோடி ரூபாய் செலவில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு ஆகிய நான்கு இடங்களில் விளையாட்டு, பொழுதுபோக்கு மையங்கள் உருவாக்கப்படும்.

எழில்மிகு கோவை மற்றும் மாமதுரை என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படும். தலா ஒரு கோடி ரூபாய் செலவில் இத்திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்படும்.

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 24,476 கோடி ரூபாயும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 13,969 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெள்ள மேலாண்மை

வரும் ஆண்டில் சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளும், நீர் வழிகளைத் தூர்வாரும் பணிகளும் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

சமச்சீர் வளர்ச்சி

மலைப்பகுதிகள் உட்பட தமிழகத்தில்மிகவும் பின்தங்கிய 50 வட்டாரங்கள் கண்டறியப்பட்டு, ஒவ்வொன்றிலும் தலா ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். வளமிகு வட்டாரங்கள் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அரசு தொடங்கும்.

சென்னையில் சீரான, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய “வடசென்னை வளர்ச்சி திட்டம்” என்ற திட்டத்தை 1,000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும்.

நெடுஞ்சாலைகள் துறை

வரும் ஆண்டில், 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும்.

சென்னை புறவட்டச் சாலை திட்டத்திற்காக 1,847 கோடி ரூபாயும், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்திற்கு 1,500 கோடி ரூபாயும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II க்கு 645 கோடி ரூபாயும் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 19,465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை

1,600 கோடி ரூபாய் முதலீட்டில் வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் மேம்படுத்தப்படும். இரண்டாம் கட்டமாக, தாம்பரம், திருவொற்றியூர், சைதாப்பேட்டையில் உள்ள 3 பணிமனைகள் 1,347 கோடி ரூபாய் முதலீட்டில் மேம்படுத்தப்படும்.

Tamil Nadu Budget 2023-24

1,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும். 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இம்மதிப்பீடுகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்திற்கு 2,800 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்திற்கு 1,500 கோடி ரூபாயும், டீசல் மானியத்திற்கு 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறைக்கு 8,056 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டம்

கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

மதுரை மாநகரம், தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ இரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

எரிசக்தி துறை

2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு இருக்கும் வகையில் பசுமை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு சிறப்பு நிறுவனம் ஒன்றை அரசு உருவாக்கும்.

2030ஆம் ஆண்டுக்குள், 77,000 கோடி ரூபாய் செலவில் 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அரசு-தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
மின் பயன்பாட்டுத் தரவுகளை தானியங்கி முறையில் பெறுவதற்கு, முழு சீரமைக்கப்பட்ட மின் பகிர்மானத் திட்டத்தின் (RDSS) கீழ், கட்டணம் செலுத்தும் அனைத்து நுகர்வோர் இணைப்புகளுக்கும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் வசதியுடன் ‘திறன்மிகு மின் அளவிகள்’ (Smart meter) நிறுவப்படும்.

கைத்தறி, துணி நூல்

சேலத்தில் சுமார் 880 கோடி ரூபாய் செலவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் ஒன்றிய மாநில அரசுகளின் நிதியுதவியுடனும் தனியார் தொழில் முனைவோர்களின் பங்களிப்புடனும் புதிய ஜவுளிப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

Tamil Nadu Budget 2023-24

20 கோடி ரூபாய் செலவில் 10 சிறிய கைத்தறிப் பூங்காக்கள் அரசால் நிறுவப்படும். புதிய துணிநூல் கொள்கை ஒன்று வெளியிடப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்

பெரிய தொழிற்சாலைகள் உட்பட அனைத்து தொழில் நிறுவனங்களையும் இணைத்து, ஒருங்கிணைந்த தரவுதளம் ஒன்றை ஏற்படுத்த இந்த முயற்சி வழிகோலும். இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 1,509 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்துறை

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 நாட்களில் சென்னையில் நடத்தப்படவுள்ளது. இதற்கென, வரவு-செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 85 தொழில் திட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களின் மூலம் 1,44,028 கோடி ரூபாய் முதலீட்டில் 2,14,478 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இரண்டு புதிய தொழிற்சாலைகள் இராணிப்பேட்டையிலும், கள்ளக்குறிச்சியிலும் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 32,000 பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
தொழில் துறைக்கு 3,268 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம்

மின்னணு முறையில், நேரடியாக, எளிதான, வெளிப்படையான முறையில் அனைத்து சேவைகளையும் மக்களுக்கு வழங்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நோக்கத்தை எய்த, ‘Simple Gov’ என்ற ஒரு புது முயற்சியை அரசு தொடங்கும்.

உயர்தர இணைய இணைப்பை ஏற்படுத்தவும், குறைந்த விலையில் பல்வேறு மின் சேவைகளை வழங்கவும், “ஒருங்கிணைந்த மின்னணு கட்டமைப்பு” (Unified Digital Infrastructure) அரசால் அமைக்கப்படும். இத்திட்டம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும்.

Tamil Nadu Budget 2023-24

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில்,“தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTech city)” அரசு அமைக்கும்.

ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு இலட்சம் சதுரடி கட்டடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

சுற்றுலா

சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், அனைத்துத் துறையினருடன் கலந்தாலோசித்து, சுற்றுலாக் கொள்கை ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இது விரைவில் வெளியிடப்படும்.

பிச்சாவரம், பூம்புகார் மற்றும் ஒகேனக்கல் ஆகிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்

இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, 4,491 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4,236 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.


வரும் நிதியாண்டில், 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும். வரும் ஆண்டில், பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் 485 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

சமூகப் பாதுகாப்பு

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக 5,346 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவல் துறை

அனைத்து காவல் நிலையங்களிலும் 38.25 கோடி ரூபாய் மொத்தச் செலவில் கண்காணிப்புக் கேமரா அமைப்பு மேம்படுத்தப்படும்.

அரசுப் பணியாளர் நலன்

பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும். வரும் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம் 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக வரும் நிதியாண்டிலிருந்து உயர்த்தப்படும்.

மகளிர் உரிமைத் தொகை

இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் – பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

நாளை வேளாண் பட்ஜெட்: இன்று கருத்துக் கேட்பா?: ஈஸ்வரன் கண்டனம்!

பட்ஜெட் – மின்மினிப் பூச்சியல்ல உதயசூரியன்: மு.க.ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *