டிஜிட்டல் திண்ணை: நிர்மலா பேட்டியால் கொதித்த தமிழ்நாடு- சமாளிக்க மோடி எடுத்த அவசர ஆக்‌ஷன்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் பிரதமர் அலுவலகத்தில் இன்று டிசம்பர் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு அவசர உயர் அதிகாரிகள் கூட்டம் பற்றிய தகவல் இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதை பார்த்துவிட்டு தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

“தமிழ்நாட்டில் கடுமையான வெள்ள பாதிப்புக்கு உள்ளான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் ஏற்கனவே வெள்ள பாதிப்புக்கு உள்ளான சென்னை சுற்றுப்புற மாவட்டங்கள் ஆகியவற்றுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பிரதமர் மோடியை சந்தித்து கடந்த டிசம்பர் 19ஆம் தேதி கோரிக்கை வைத்திருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதற்குப் பிறகு  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்… தமிழ்நாடு சந்தித்துள்ள வெள்ள பாதிப்பு என்பது தேசிய பேரிடரில் வராது என்றும் அதனால் தேசிய பேரிடர் என்ற வகையில் நிதி ஒதுக்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் திமுக அரசையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார்.

தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பு தேசிய பேரிடரில் வராது என்று நிர்மலா சீதாராமன் கூறியதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்த நிலையில்… வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இது கோபத்தை உண்டு பண்ணியது.

இந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் ஆவேசமான ஆக்ரோஷமான பேச்சு தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிரான மனநிலையை மேலும் அதிகப்படுத்தக் கூடும் என்றும், இதற்கு உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய உளவுத்துறை டெல்லி மேலிடத்திற்கு தகவல் அனுப்பியது. பாதிக்கப்பட்ட தூத்துக்குடி ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தராஜன் போட்டியிட்ட தொகுதி, திருநெல்வேலி தற்போது பாஜக குறிவைத்துள்ள தொகுதிகளில் ஒன்றும் என்பதும் மேலே சென்ற மெசேஜில்  அடக்கம்.

 

இந்த நிலையில்  டிசம்பர் 23ஆம் தேதி இரவு 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தூத்துக்குடி பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக கருத முடியாது என்று கூறிய நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி பயணம் மேற்கொள்வதாக அறிவித்தது தமிழ்நாடு பாஜகவிலேயே அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான்… இன்று டிசம்பர் 24ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் கூட்டம் திடீரென கூடியது. தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகள் பற்றி ஆலோசனை நடத்தியது. பிரதமர் உத்தரவுப்படி நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழ்நாடு அதிகாரிகளோடு ஏற்கனவே ஆலோசனை நடத்தியதையும் மேலும் தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற மத்திய குழுவினரின் கருத்துக்களையும் அடிப்படையாக வைத்து இந்த கூட்டத்தை நடத்தினர். வெள்ள பாதிப்பு களுக்காக தமிழ்நாட்டுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும், நிவாரண நிதி எவ்வளவு அளிக்கலாம் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இந்த அவசரக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதன் பிறகு இன்று இரவு பிரதமர் மோடி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், ‘மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி சென்னை புயல், தென் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க எனக்கு தொலைபேசி மூலம் அழைத்துப் பேசினார். நான் அவரிடம், நிதி வளம் குறைவாக இருந்தபோதிலும், மாநில அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அவருக்கு விளக்கி, மத்திய அரசிடம் இருந்து உடனடி நிதி உதவியை நாடினேன். இந்த இரட்டை பேரிடர்களை சமாளிக்க மத்திய அரசின் ஆதரவு உண்டு என மாண்புமிகு பிரதமர் உறுதியளித்ததோடு, மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை வெள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார்’ என்று தெரிவித்துள்ளார்.

நிர்மலாவின் பேட்டியால் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு உதவ மறுத்துவிட்டது என்ற பேச்சுகள் அதிகரித்துவிட்ட நிலையில், பிரதமரே நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலாவின் பயணத்தின்போது நிவாரண நிதி பற்றிய ஆரம்பகட்ட அறிவிப்புகளை  வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி: கூட்டணிக் கட்சிகளை சமாளித்து முடித்த திமுக

வெள்ள பாதிப்புகள்: முதல்வரிடம் பேசிய பிரதமர்

+1
0
+1
3
+1
1
+1
4
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *