சொன்னீங்களே… செஞ்சிங்களா?: அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி!

Published On:

| By Kavi

சட்டமன்றத் தேர்தலின் போது விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றுவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

பருவம் தவறி பெய்த மழையின் காரணமாகக் காவிரி டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ20,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதோடு நெல் கொள்முதல் தொடர்பான வழிகாட்டுதல்களில் கூடுதல் தளர்வு அதாவது 22 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்வதற்கான அனுமதியை வழங்கும்படி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதினார்.

அதன்படி டெல்டா மாவட்டங்களில் நெல்லை ஆய்வு செய்வதற்கு நாளை மத்தியக் குழு தமிழகம் வருகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அரசின் நெல் கொள்முதல் ஈரப்பத வரைமுறையின்படி நெல் ஈரப்பதம் 17 சதவீதத்திற்குக் கீழே இருக்கவேண்டும் என்பதாகும்.

ஆனால் தற்போது பெய்த கனமழையினால் ஈரப்பதம் 22% மேல் இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமென்ற விவசாய மக்களின் கோரிக்கைக்குத் தமிழக பாஜக துணை நிற்கும்.

அதேசமயம், ஆளும் திமுக அரசுக்கு சில கேள்விகளை முன் வைக்க கடமைப்பட்டுள்ளோம். ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் நெல் விவசாயிகளுக்கு 52.02 கோடி செலவில் தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்றார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். கொடுத்தார்களா?.

2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் 5 கோடி ரூபாய் செலவில் 60ஆயிரம் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்தனர். கொடுத்தார்களா?.

36 கோடி ரூபாய் செலவில் 6 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்குக் கிடங்குகள், உலர் தளங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள். செய்தார்களா?.

தேர்தல் வாக்குறுதியில் நெல் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். நிறைவேற்றினார்களா?

இதுபோன்று கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு வஞ்சித்து வருகிறது.

தற்போது இயங்கிவரும் நெல் சேமிப்பு கிடங்குகள் குறித்தும் பெருவாரியான விவசாய மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அதற்கும் இந்த அரசு எந்த வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

போதிய உலர் தளங்கள் இல்லாததால் விவசாயிகள் சாலையில் நெல்லை உலர வைப்பது இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலட்சியப் போக்குடன் செயல்படும் இந்த திறனற்ற திமுக அரசு இதற்கு மேலும் தாமதிக்காமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

வியாபாரமாகும் பிரபலங்களின் திருமண நிகழ்வுகள்!

யூடியூப் டிரெண்டிங்கில் ஆட்டநாயகனாய் வலம் வரும் நடிகர் விஜய்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel