Governor speech in Tamilnadu Assembly

ஆளுநர் உரையில் இருந்தது என்ன?

அரசியல்

நடப்பாண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (பிப்ரவரி 12) துவங்கியது. அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி வாசிக்க மறுப்பு தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையளித்து ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை நிராகரித்ததாகவும், ஆளுநர் உரையின் பல பத்திகளில் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதனையடுத்து, ஆளுநர் ரவி தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த முக்கிய கருத்துக்கள்:

வளர்ச்சிப் பாதையில் தமிழகம்!

கடந்த பத்தாண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள்தொகையில் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம், இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது.

2022-23 ஆம் ஆண்டில், 7.24 சதவீத நிலையான தேசிய வளர்ச்சி வீதத்தை விஞ்சி, நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதே வேளையில், சராசரி பணவீக்கத்தைப் பொறுத்தவரை, 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் 6.65 சதவீத பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது.

நாட்டைவிட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைவதோடு, அதே காலகட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும், நமது மாநிலம் திறம்படச் செயல்பட்டு வருவதை இது மெய்ப்பிக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையின் கீழ், இந்த அரசின் அயராத முயற்சியின் விளைவாக, குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியினை தமிழ்நாடு கண்டுள்ளது.

மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால், 2021-22ஆம் ஆண்டில் நான்காம் இடத்திலிருந்த நமது மாநிலம், 2022-23 ஆம் ஆண்டில் நாட்டிலேயே முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

நிதி ஆயோக்கின் 2022 ஆம் ஆண்டு ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை விஞ்சி, நாட்டிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

உலக முதலீட்டாளர் மாநாடு!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, 14.54 லட்சம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முன் எப்போதும் இல்லாத அளவிலான, மொத்தம் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்வதற்கு, சாதனை படைக்கும் வகையில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு அரசு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இம்முதலீடுகள், மாநிலத்தின் முன்னேற்றப் பாதையை வடிவமைத்து, உயர்நிலை பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும். மேலும், இந்நிகழ்வில் முதலமைச்சர் 1 டிரில்லியன் டாலர் தமிழ்நாடு பொருளாதாரம் குறித்த தொலைநோக்கு’ ஆவணத்தை வெளியிட்டார். இந்த உயரிய இலக்கை அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளை நமது அரசு எடுத்து வருகிறது.

Governor speech in Tamilnadu Assembly

மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரணம்!

மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத எதிர்பாரா மழைப்பொழிவினால் மாநிலத்தின் பொதுச் சொத்துகள் மற்றும் கட்டமைப்புகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளுக்காக தென் மாவட்டங்களுக்கு 18,214 கோடி ரூபாயும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 19,692 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது.

இப்பேரழிவின் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் வழங்கப்பட்ட இரண்டு விரிவான அறிக்கைகளின் அடிப்படையிலும் மத்திய அரசு அலுவலர் குழுவின் நேரடி ஆய்வின் அடிப்படையில் தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக மத்திய அரசு நிதி வழங்கும் என்று நம்புகிறோம்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு!

சங்ககாலத் தமிழர் கடைபிடித்த உலக உடன்பிறப்பு நேயத்தை எடுத்துரைக்கும் இந்த மகத்தான வரிகள் தான் இந்த அரசை வழிநடத்திச் செல்கின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது நாட்டின் உன்னதமான கொள்கைகள் தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தைப் பேணி பாதுகாப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது.

சிறுபான்மையினர் மற்றும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுடன் என்றும் நாம் துணை நிற்போம்.

அந்த வகையில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒரு போதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு!

அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்கள் மூலமாகவே, தகுதியானவர்களைச் சென்றடைவதன் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட இயலும்.

இந்த அடிப்படையிலேயே, ஆண்டில் நடைபெற்றிருக்க 2021 ஆம் வேண்டிய தேசிய பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்து மேற்கொள்ளப்படும்போது சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பையும் ஒருங்கிணைத்து நடத்திடுமாறு பிரதமரை முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

நம்பகத்தன்மை வாய்ந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து, உரிய கொள்கை முடிவுகளை எடுத்திட இந்த முயற்சி பெரும் உதவியாக இருக்கும் என்பதால் இக்கோரிக்கை மத்திய அரசால் ஏற்கப்படும் என்றும் இந்த அரசு நம்புகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அப்பாவு கேட்ட அம்பதாயிரம் கோடி ரகசியம்: அப்டேட் குமாரு

காதலர் தினத்துக்கு இடையூறா? – காங்கிரஸ் கோரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *