டார்வின் கோட்பாடு நீக்கம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கண்டனம்!
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பாடநூல்களில் இருந்து நீக்கப்பட்ட டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பாடத் திட்டத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி குழுமம் மற்றும் மத்திய அரசை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் எஸ். தினகரன் பொதுச் செயலாளர் எஸ்.சுப்ரமணி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,
“பெருந்தொற்றின் பெயரால் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை தேசிய கல்வி ஆராய்ச்சி குழுமம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது கண்டனத்திற்குரியது. கொரானா வைரஸ் பெருந்தொற்று பரவல் கூட டார்வின் கோட்பாடான இயற்கை தேர்வின் ஒருபகுதி தான். டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கூடுதலாக அறிந்து கொள்ளவும், அறிய வைக்கவும் மிகவும் பொருத்தமான காலம் இதுவாகும்.
பாடபுத்தகங்களில் இருந்து டார்வின் கோட்பாட்டை நீக்கியது அறிவியல் கற்பித்தலை ஊனமாக்கும் செயல். மனிதர்கள், பகுத்து அறிந்து, விரிவாக்கம் செய்து கொள்வதின் மீது விழுந்த மாபெரும் அடி. மேலும் அறிவியல் மனப்பான்மையை மழுங்கடிக்கும். உயர் கல்வியின் தரத்தை பெருமளவு பாதிக்கும். அறிவியல் ஆய்வுகளையும், ஆய்வு மனப்பான்மையையும் மட்டுப்படுத்தும்.
ஒட்டுமொத்த உயிரியல் ஆய்வுகளின் அடிப்படைகளில் ஒன்று, பரிணாம வளர்ச்சி கோட்பாடு. டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டையும் அதனை ஒட்டிய பகுதிகளையும் பெட்டி செய்தியையும் கூட வெட்டி எடுத்ததன் விளைவாக, உயிரியல் ஆய்வுகள் பற்றிய சிந்தனை, சிறுவயதில் முளைப்பதற்கான பெருந்தடையாகும்.
பரிணாம வளர்ச்சி கோட்பாடு அனைத்து உயிரியல் பாடங்களுக்கும் அடிப்படை என்ற வகையில், பல உயிரியல் ஆய்வுகளுக்கு பயன்பட்டு, மனித குலம் சந்திக்கும் பல பெரும் சவால்களுக்கு தீர்வு கிடைக்கவும் பயன்பட்டுள்ளது.
வரவிருக்கும் காலங்களில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் பருவநிலை மாற்றம், நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளின் பயன்பாடு, அதனால் ஏற்படும் விளைவுகள், மனிதர்கள்- உயிரினங்கள் – ஆகிய சூழலியல் ஒன்றிணையும் போது ஏற்பட்டு வரும் சிக்கல்கள் என பலவற்றுக்கு பரிணாம வளர்ச்சி கோட்பாடு பயன்படுகிறது.
பள்ளிப் பருவத்திலேயே இந்தப் பாடத்தை தடை செய்யும் போது அதன் விளைவுகள் அளவிட முடியாததாக இருக்கும்.
2018-ஆம் ஆண்டில் அன்றைய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்த சத்தியபால் சிங் “குரங்கிலிருந்து மனிதனாக மாறியதை ஒருவரும் பார்த்தது இல்லை. எனவே பரிணாம வளர்ச்சி கோட்பாடு அறிவியல் பூர்வமானது அல்ல. அதனை பாட திட்டத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்” என்று நாடாளுமன்றத்திலேயே பேசினார்.
இத்தகைய மத்திய அரசின் கருத்து நிலையின் வெளிப்பாடாகவே பரிணாம வளர்ச்சி கோட்பாட்டைப் பாட திட்டத்தில் இருந்து நீக்கி உள்ளது தேசிய கல்வி ஆராய்ச்சி குழுமம்.
டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டிற்கு எதிராக மதம் சார்ந்த கருத்து நிலைகளும், மதவாதம் மிகவும் அதிகமாக ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சி வரும் நாடுகளிலும் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை தடை செய்வதும், நிரூபிக்கப் படாத கருதுகோள் என கற்பிப்பது, படைப்பூக்க கோட்பாட்டை முன் நிறுத்துவது என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு அறிவியல் பூர்வமானது என நிரூபண சான்றுகளே கிடைத்து வருகின்றன.
டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு அகற்றம் என்பது இதனையும் தாண்டி, பகுத்தறியும் சிந்தனை மீதும், அறிவியல் மனப்பான்மை மீதும் விழுந்த அடி என்றே கருத வேண்டும்.
அறிவியல் கல்வி வளர்ச்சிக்கும், உலக அளவில் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் நாம் பெற்றுள்ள வெற்றிகளையும் பாதிக்கும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் எதிரானது.
எனவே, பரிணாம வளர்ச்சி கோட்பாட்டையும், அதனை ஒட்டிய பகுதிகளையும் நீக்கியதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ் நாடு அறிவியல் இயக்கம், தேசிய கல்வி ஆராய்ச்சி குழுமம் மற்றும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.
செல்வம்
பிடிஆர் ஆடியோ சர்ச்சை: அண்ணாமலைக்கு மா.சுப்பிரமணியன் பதில்!
யாத்திசை – ஒரு தொடர்கதையின் தொடக்கம்!