தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து விலகிய அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் அசோகன் இன்று (பிப்ரவரி 29) காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பத்தில் அதிமுகவா? பாஜகவா? என்பதில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நிலவியது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கு அக்கட்சியில் உள்ளவர்களிடமே அதிருப்தி எழுந்தது.
அதன் வெளிப்பாடாக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸின் தலைமை நிலையச் செயலாளரான அசோகன் அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸில் புதிதாக தலைமை பொறுப்பேற்றுள்ளவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் அசோகன் இன்று காங்கிரஸில் மீண்டும் இணைந்தார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து தாய் இயக்கமான காங்கிரஸ் பேரியக்கத்தில் மூப்பனாருடைய ஆன்மாவாக அசோகன் இன்று இணைந்துள்ளார். அவரை அன்போடு வரவேற்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே நமது மின்னம்பலத்தில், “எலக்ஷன் ஃபிளாஷ் : செல்வப்பெருந்தகையை வாழ்த்திய தமாகா புள்ளிகள்- காங்கிரசோடு இணைகிறதா தமாகா?” என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், ”தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றபோது, காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அவரது வீட்டுக்கே சென்று ரகசியமாக சந்தித்து கட்டித் தழுவி சால்வை அணிவித்து வாழ்த்தியிருக்கிறார்கள் என்றும்,
அப்போது தமிழ் மாநில காங்கிரஸை காங்கிரஸ் கட்சியோடு சேர்த்து காங்கிரசை பலப்படுத்துமாறு அப்போது அவர்கள் செல்வப் பெருந்தகையிடம் வேண்டுகோளும் வைத்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
இதற்கிடையே பாஜகவுடன் த.மா.கா இணைந்தது அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. தற்போது அசோகன் இணைந்துள்ள நிலையில், வரக்கூடிய நாட்களில் தமாகவில் இருந்து மேலும் பலர் காங்கிரஸில் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திருப்பூர், நாகையை மீண்டும் கேட்கும் இந்திய கம்யூனிஸ்ட்
மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்: அறிவாலயத்தில் அறிவித்த மதிமுக