தமிழ் மகன் உசேனின் கடிதத்தை புறக்கணித்த பன்னீர் தரப்பு!

அரசியல்

அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனின் முடிவு ஒருதலை பட்சமானது என்று கூறி அவரது கடிதத்தை பன்னீர் செல்வம் தரப்பினர் புறக்கணித்துள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கப் பொதுக்குழுவைக் கூட்டி உறுப்பினர்களிடையே ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் அறிக்கையை அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் (பிப்ரவரி 3)ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான, அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரை, கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கை மூலமாகத் தேர்வு செய்வதற்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, அனைத்து கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி சுற்றறிக்கையை முறையாகப் பூர்த்தி செய்து, அதனை நாளை (இன்று -பிப்ரவரி 5) இரவு 7 மணிக்குள், சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக இன்று (பிப்ரவரி 5) சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன் பின் வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய வைத்திலிங்கம், “உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அதிமுக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான செயல்.
உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்க நியமிக்கப்பட்ட அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், இது சம்பந்தமாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

எந்த உணர்வுடன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோ, அந்த உணர்வை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறவே நிராகரித்துள்ளார்.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு, யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற முழு விவரத்தையும் அளிப்பது அவருடைய கடமை. இதை உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது.

ஏற்கனவே அதிமுக வேட்பாளராக செந்தில் முருகன் தேர்தல் அதிகாரி முன்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் தமிழ் மகன் உசேன் அளித்த பட்டியலில் செந்தில் முருகன் பெயர் இடம் பெறவில்லை என்பதோடு, வேட்பு மனு தாக்கல் செய்யாத தென்னரசு பெயர் மட்டும் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் என அறிவித்திருக்கிறார். அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும்.

அதைத்தவிர்த்து முன் கூட்டியே ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளர் என தமிழ் மகன் உசேன் அறிவிக்கிறார் என்றால் அவர் முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்பது தெரிகிறது. அது நடுநிலை தவறிய காரியம் மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அறவே மீறுவதாகும்.

tamil magan usain decision

வேறு யாரேனும் போட்டியிடுவதென்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழியவும், வழிமொழியவும், அவற்றை அத்தகையை வேட்பாளர் ஒப்புக்கொண்டு நிற்பதற்குமான எந்த படிவமும் தமிழ் மகன் உசேனால் உருவாக்கப்படவில்லை. எங்களுக்கு அனுப்பிய தபாலோடு இணைக்கப்படவில்லை.

அப்படியிருக்க இதர வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற உரிமையை தட்டிப்பறிக்க எந்த உரிமையும் இல்லை. முழு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுக்குழு உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என எண்ணி பார்த்து முடிவெடுக்க தமிழ் மகன் உசேன் கட்டுப்பட்டவர்.

அப்படி இருக்க ஒருவரை மட்டும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என அறிவித்து ஆதரிக்கிறீர்களா? இல்லையா? என கேட்பது முறையாகாது. இது உச்ச நீதிமன்றமே எதிர்பார்க்காத ஒன்று என்றால் அது மிகையாகாது.

தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறியது மட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் என்ற பொறுப்பையும் புறக்கணித்துவிட்டு எடப்பாடி முகவராகச் செயல்படுகிறார்.

வாக்களிக்கும் முறையை எடுத்துக்கொண்டால், வாக்குச்சீட்டைத் தபால் மூலம் தரவும், அத்தகைய வாக்குச்சீட்டுகளில் குறியீடு செய்து தபால் மூலம் அவை தலைவருக்கு அனுப்ப வழிவகை செய்திருக்க வேண்டும்.

பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் விருப்பம் போல் வாக்களிக்கும் உரிமையும், யாருக்கு வாக்களிக்கிறோம் என்ற ரகசியத்தைக் காப்பாற்றும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “உச்ச நீதிமன்றம் சொன்னபடி யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற பட்டியலை அனுப்பி பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறுவதற்குப் பதிலாக, இவரே ஒரு வேட்பாளரை நியமித்து யார் யார் ஆதரிக்கிறீர்கள், யார் எதிர்க்கிறீர்கள் எனக் கேட்கிறார்.

இது பொது வாக்கெடுப்பு ஆகும். இதுபோன்ற சட்டவிரோத செயலுக்கு நாங்கள் உடந்தையாக இருக்கமாட்டோம்” என்றார்.

அப்போது அவைத் தலைவர் நாளை டெல்லி செல்கிறாரே என்ற கேள்விக்குப் பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அவர் டெல்லி போகட்டும், இல்லை மாஸ்கோ போகட்டும். எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. எங்களைப் பொறுத்தவரை அவர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடந்துகொள்ளவில்லை என சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்களைப் பொறுத்தவரை இரட்டை இலை பிரச்சினையே இல்லை. பொதுக்குழு சரியாக நடக்கவில்லை என்பதுதான் எங்களது பதில். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்” என்றார்.

பிரியா

எங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும்: ரவீந்தர் -மகாலட்சுமி கோயில் விசிட்!

பேனா சின்னம்.. காழ்ப்புணர்ச்சி.. அரபிக்கடலில் சிவாஜி நினைவிடம் சரியா? கே.எஸ்.அழகிரி

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *