ஒப்புதல் படிவம்: தமிழ் மகன் உசேன் முக்கிய அறிவிப்பு!

அரசியல்

ஒப்புதல் படிவத்தைப் பூர்த்தி செய்து அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் அதிமுக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவில், அதிமுக பொதுக்குழு மீண்டும் கூட்டப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களுடைய ஒப்புதலைப் பெற்று வேட்பாளர் குறித்த விவர அறிக்கையைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்குப் பதிலாக வேட்பாளர் விவரம் கொண்ட ஒரு விரிவான சுற்றறிக்கையை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி அவர்களுடைய ஒப்புதலைப் பெற்று விவர அறிக்கையாகத் தயார் செய்ய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் முடிவு செய்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கையானது தேர்தல் ஆணையத்திடம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதனையடுத்து அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் ஒப்புதல் படிவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் படிவத்தைப் பூர்த்தி செய்து பொதுக்குழு உறுப்பினர்கள் நாளை அதிமுக அலுவலகத்தில் படிவத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அதிகாரப்பூர்வ வேட்பாளரை, கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கை மூலமாகத் தேர்வு செய்வதற்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, அனைத்து கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை இன்று (பிப்ரவரி 4) அனுப்பப்பட்டுள்ளது.

கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி சுற்றறிக்கையை முறையாகப் பூர்த்தி செய்து,

அதனை நாளை (பிப்ரவரி 5) இரவு 7 மணிக்குள், சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகம்,

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் என்னிடம் சேர்த்துவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

அதானி ஸ்பான்சர்… விருது மறுத்த தமிழ் கவிஞர்

“ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற வேண்டும்”: அண்ணாமலை

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *