-இலக்குவனார் திருவள்ளுவன்
சதுரங்க ஞாலப் போட்டி 2022 இற்கு வாழ்த்துகள்!
44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி ஆடி 12, 2053 / 28.07.2022 -ஆடி 25, 2053/ 10.08.2022 நாட்களில் நடைபெறுகிறது. சதுரங்க ஞாலப்போட்டிக்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது. நேப்பியர் பாலத்தைச் சதுரங்கக் கட்டங்களாக வண்ணந்தீட்டி விளம்பரப்படுத்துவதிலிருந்து எல்லா வகையிலும் முதல்வர் அவர்கள் அறிவுரைக்கிணங்க அதிகாரிகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
மாநில அளவு விளையாட்டாக இருந்தாலும் இந்திய அளவு விளையாட்டாக இருந்தாலும் உலக அளவு பன்னாட்டு விழாவாக இருந்தாலும் திட்டமிடல், விருந்தோம்பல், செயற்பாட்டுப் பாங்கு முதலிய பலவகையிலும் தொடர்பான ஆர்வலர்களையும் இணைத்துக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றவும் தொண்டாற்றவும் செய்கிறார்கள். அந்த வகையில் சதுரங்க ஞாலப்போட்டியையும் செவ்வனே நடத்தத் திட்டமிட்டுச் செயலாற்றி வருவதற்குத் தமிழக அரசிற்கும் அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்!
அதே நேரம் நம் உள்ளத்தை உறுத்தும் பெருங்குறையைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
மத்தியில் இந்தி திணிப்பு தமிழகத்தில் ஆங்கில திணிப்பு
தமிழ்நாட்டின் புதிய திட்டங்கள் அல்லது முழக்கங்கள் முதலியவற்றில் ஆங்கிலப் பயன்பாடு இருப்பது வேதனையாக உள்ளது. ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கிறது என்றால் தமிழக அரசு ஆங்கிலத்தைத் திணிக்கிறது. இந்தித் திணிப்பின் தீமைபோல் ஆங்கிலத்திணிப்பும் நமக்குத் தீமைதான். ஆனாலும் அதிகாரிகளின் ஆங்கில மோகம் ஆங்கிலத்திற்கு இடம் கொடுத்து அங்கு இருக்கும் அல்லது இருக்க வேண்டிய தமிழை அகற்றுகின்றனர். அதற்குச் சில சான்றுகளைக் கூறலாம்.
எனினும் இப்பொழுது நடைபெற உள்ள 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி 2022 தொடர்பானவை குறித்துக் காணலாம்.
பிற நாடுகளில் பன்னாட்டுப் போட்டிகள் நடைபெறும் பொழுது அதன் மூலம் தங்கள் மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டுப் பரவலுக்கும் வழி வகுக்கும் வகையில் விளம்பரம் செய்கிறார்கள். நம் நாட்டில் ஒன்றிய அரசாக இருந்தால் இந்தி, சமஸ்கிருதப் பரவலுக்கே முதன்மை அளிக்கிறார்கள். நாமோ ஆங்கிலத்திற்கு முதன்மை அளிக்கிறோம். அப்புறம் எதற்கு “எங்கும் தமிழ் எப்பொழுதும் தமிழ்” என்று சொல்ல வேண்டும்?
44th Fide Chess Olympiad 2022 chennai என நிகழ்வுப் பெயரையும் முத்திரை, சின்னம் முதலியவற்றையும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். அல்லது ஆங்கிலம் கலந்து குறிப்பிட்டுள்ளார்கள்.
Fide என்பது Fédération Internationale des Échecs என்னும் பிரெஞ்சுச் சொல்லின் தலைப்பெழுத்துச் சொல்லாகும். இதன் பொருள் பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பு(International Chess Federation) என்பதாகும். ஒலிம்பியாடு என்பதை ஞாலப்போட்டி எனலாம். எனவே, இதனைத் தமிழில் 44ஆவது ஞாலச் சதுரங்கப் போட்டி 2022 எனலாம்.
இப்படி வைத்திருக்கலாமே!!!
“நம்ம CHENNAI” என எங்கும் விளம்பரம். இது “நம்ம சென்னை நம்ம செஸ் தம்பி” என்றும் விளம்பரப்பதாகைகள், சுவரொட்டிகள், செய்தி விளம்பரங்கள்.
சதுரங்கம் என்பது அனைவரும் அறிந்த சொல்தானே! “நமது சென்னை நமது சதுரங்கம்” என்று சொன்னால் குறைந்தா போய்விடும்? சதுரங்கம் என்பதும் தமிழ்ச்சொல்தான். யானைக்குப்பி என்றும் சொல்வார்கள். வட்டாட்டம் இருப்பதுபோல் கட்டங்களில் ஆடும் இதனைக் கட்டாட்டம் என்றும் சொல்லலாம். எனினும் சதுரங்கம் என்றே பயன்படுத்தலாம். ஆகவே, 44ஆவது சதுரங்க ஞாலப்போட்டி 2022 என்றே குறிப்பிடலாம்.
ஆங்கில மொழிக்கலப்பை அடியோடு நீக்க வேண்டும். ஆங்கில மோகத்தில் இருந்து அதிகாரிகள் விடுபடவில்லையேல் அவர்களை உயர் பொறுப்புகளில் இருந்து அரசு விடுவிக்க வேண்டும். இவர்களின் ஆங்கில மோகத்தால் தமிழ்நாட்டரசிற்கு அவப்பெயர் என்பதை அரசு உணர வேண்டும்.
மாநிலத் தன்னாட்சி கேட்பது தமிழின் தனியாட்சிக்காகத்தான். தமிழ்நாட்டில் தமிழுக்கு இடந்தராமல் தேமதுரத்தமிழோசையை உலகெங்கும் எங்ஙனம் பரப்ப முடியும்?
வரவேற்பு பாட்டிலும் ஆங்கிலம்!
சதுரங்க ஞாலப்போட்டிக்கான வரவேற்புப் பாடல் தமிழ் கலந்த ஆங்கிலமாக உள்ளது. இயக்கத்திலும் இசை ஆக்கத்திலும் மலையாளிகள் முதன்மை என்பதால், பாடல் இடையில் மலையாள வாடையும் உள்ளது. பாடல் தமிழ் வரிகள் கலந்த ஆங்கிலப் பாடலாகத்தான் உள்ளது. கவிப்பேரரசர் வைரமுத்து, கவிஞர் பழனிபாரதி, கவிஞர் தாமரை போன்றவர்களிடம் பாடல் பொறுப்பை ஒப்படைத்திருந்தால் அழகு தமிழில் அருமையாகப் பாடல் தந்திருப்பார்கள். பாடலின் கீழே உலக மொழிகளில் உரை வரிகளைத் தந்திருக்கலாம. நம் நாடுதான் ஆங்கிலத்தை மூச்சாக உடையவர்களாயிற்றே! அப்புறம் எப்படித் தமிழ்ப்பாடலைக் கேட்டிருப்பார்கள்.
அறிவிப்பு, முத்திரை, சின்னம், விளம்பரம், சட்டை முழக்கம், பாடல் என அனைத்திலும் தமிழை மறந்து செயல்படுவதைத் தடுக்க மாண்புமிகு முதல்வரும் மாண்புமிகு விளையாட்டு அமைச்சரும் மடிதற்று முந்துற வேண்டும்.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்
(திருவள்ளுவர், திருக்குறள், 954)
தமிழ்க்குடியில் பிறந்தவர் எதைப் பெறுவதாக இருந்தாலும் தமிழைக் குன்றச்செய்யும் செயல்களிலில் ஈடுபடக் கூடாது.
தமிழில் பெரியதாகவும் ஆங்கிலத்தில் சற்று சிறியதாகவும் அதே சமயம் தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் முதன்மை பொறுப்பு அதிகாரி (அவருக்கு தமிழ் புலமை உள்ளதா என உறுதி செய்துகொண்டு) கவனமாகவும் பொறுப்புணர்வோடும் மகிழ்ச்சியோடும் பணியாற்றியிருக்கவேண்டும்.
கமலஹாசனின் தமிழர் வரலாறு இந்த வகையில் சற்று கவனமாகவும் அழகாகவும் கையாளப்பட்டிருக்கிறது.
இனிமேல் கவனமாக கையாளவேண்டும். நன்றி.
தமிழில் பெரியதாகவும் ஆங்கிலத்தில் சற்று சிறியதாகவும் அதே சமயம் தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் முதன்மை பொறுப்பு அதிகாரி (அவருக்கு தமிழ் புலமை உள்ளதா என உறுதி செய்துகொண்டு) கவனமாகவும் பொறுப்புணர்வோடும் மகிழ்ச்சியோடும் பணியாற்றியிருக்கவேண்டும்.
கமலஹாசனின் தமிழர் வரலாறு இந்த வகையில் சற்று கவனமாகவும் அழகாகவும் கையாளப்பட்டிருக்கிறது.
இனிமேல் கவனமாக கையாளவேண்டும். நன்றி.
“சதுரங்கத் திருவிழாவில் வெட்டப்படும் தமிழ் “- சரியான தமிழ்ச் சிந்தனை.
சதுர்-அங்கம் இரண்டும் வடசொற்கள்.
ஆனாசதுரங்கம் தமிழ்ச்சொல் என்கிறார் இலக்குவன் திருவள்ளுவனார். எப்படி என்று விளக்கியிருக்கிலாம்.
ஆனாலும் தமிழர்கள் நாவில் புழங்கிவரும் சொல் என்ற அளவில் அதனையே பயன்படுத்தலாம்.
இந்த ஆங்கிலத் திணிப்புக்கு உலக அளவில் நடைபெறும் நிகழ்வு என்று காரணம் கூறுவார்கள். தமிழ் மொழிக்கு முதன்மை இடம் தந்துவிட்டு ஆங்கிலத்தில் துணையாகப் பயன்படுத்தலாம். இதுவே தில்லியில் நடைபெற்றிருந்தால் எல்லாம் இந்தியாவிலிருந்து.
சப்பான் சீனா வில் நடைபெற்றால் சப்பானிய, சீன மொழிகளே முதன்மைப்பட்டிருக்கும்.
அந்த மொழியுணர்வு தமிழக அரசு அலுவலர்களிடத்தில் இல்லை.
முதல்வரே திராவிட மாடல் என்று தமிழும் ஆங்கிலமும் கலந்துதான் பயன்படுத்துகிறார்.
இந்தப் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போவது நல்லதல்ல.
ஆனால் பல இஆப அதிகாரிகள் ஆங்கிலக் கலப்புத் தமிழையே முன்னெடுப்பதில் குறியாக இருக்கிறார்கள்.
தவிர்கப்பட வேண்டிய போக்கு இது.
வெற்றிப்பேரொளி.
9442285418