தமிழ் மொழி நம்முடைய மொழி. ஒவ்வொரு இந்தியனின் மொழி. உலகின் மிக பழமையான மொழி என்று மூன்று நாடுகள் பயணத்தை முடித்து இன்று (மே 25) டெல்லி திரும்பிய பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி பாலம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திரும்பினார்.
அவரை வரவேற்கும் விதமாக விழா ஏற்பாடு செய்திருந்ததால், பாஜக கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று காலை முதலே விமான நிலையம் முன்பு கூடினர்.
டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து விமான நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற வரவேற்பு விழா நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா பேசுகையில்,
“பிரதமர் மோடி ஆட்சியை உலகமே பாராட்டுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்டோகிராப் கேட்டார். பப்புவா நியூ கினியாவின் பிரதமரின் கால்களைத் தொட்டார்.
இது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை காட்டுகிறது. நமது பிரதமருக்கு இப்படி வரவேற்பு அளிக்கப்படுவதைக் கண்டு இந்திய மக்கள் பெருமை கொள்கிறார்கள்” என்று பேசினார்.
இந்தியாவை நேசிப்பவர்கள்
தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், ”சிட்னியில் நடைபெற்ற இந்திய புலம்பெயர்ந்தோர் நிகழ்வில் ஆஸ்திரேலிய பிரதமர் மட்டுமின்றி, முன்னாள் பிரதமர், எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் ஆளும் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
இதுதான் ஜனநாயகத்தின் பலம். அவர்கள் அனைவரும் ஒன்றாக இந்திய சமூகத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
மூன்று நாடுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு வந்த என்னை இங்கு வரவேற்க வந்திருப்பவர்கள் இந்தியாவை நேசிப்பவர்கள், பிரதமர் மோடியை அல்ல.
தமிழ் ஒவ்வொரு இந்தியனின் மொழி
தமிழ் மொழி நம்முடைய மொழி. ஒவ்வொரு இந்தியனின் மொழி. உலகின் மிக பழமையான மொழி.
‘திருக்குறள்’ புத்தகத்தின் டோக் பிசின் மொழிபெயர்ப்பை பப்புவா நியூ கினியாவில் வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.
நான் ஏன் உலகிற்கு தடுப்பூசிகளை கொடுத்தேன் என்று இங்குள்ளவர்கள் என்னிடம் கேட்டார்கள்.
இது புத்தர், காந்தியின் தேசம் என்று சொல்ல விரும்புகிறேன். எதிரிகள் மீதும் நாங்கள் அக்கறை கொள்கிறோம்.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?
டிசம்பரில் குமரியில் கண்ணாடி இழை பாலம்: அமைச்சர் எ.வ.வேலு