|

அன்று தமிழாசிரியர்- இன்று தமிழ்ச்செம்மல்! – புலவர் சண்முகவடிவேலுவின் நகைச்சுவைப் பயணம்!

அன்று இவரது பேச்சைக் கேட்க இவரது வகுப்பில் மாணவராக படித்திருக்க வேண்டும்,  அல்லது இவர் கலந்து கொள்ளும் பட்டிமன்றங்களில் பார்வையாளராக சென்று இருக்க வேண்டும். அப்படி சென்று இருந்தால் இந்த நகைச்சுவை நாவலரின் தென்றல் பேச்சில் மனம்  லேசாகி வாழ்க்கையின் பிரச்சனைகளை எல்லாம் மறந்து லயிக்கும் அனுபவத்தை பெறலாம்.

ஆனால் இப்போது யூட்யூபில் சண்முக வடிவேல் என்று தட்டினாலே அவருடைய நகைச்சுவை மழை நம்மை நனைக்கும். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் பட்டிமன்ற உலகிலும் நகைச்சுவை பேச்சாளர் உலகிலும் தனக்கென தனி இடத்தை பிடித்த புலவர்  சண்முகவடிவேலுவுக்கு  தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக தமிழ் செம்மல் என்ற விருதை இன்று டிசம்பர் 21ஆம் தேதி வழங்குகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விருதை தன் கரங்களால் வழங்குகிறார் .
நாகூரில் பிறந்த சண்முகவடிவேலுவை இப்போது திருவாரூர் சண்முகவடிவேல் என்றால் தான் எல்லாருக்கும் தெரியும்.

ஏனென்றால் அவரது தமிழ் உலகம் முழுவதும் விரிவடைய காரணமாக இருந்தது அவருடைய திருவாரூர் காலங்கள் தான்.

Tamil Chemmal Shanmugavadivelu

திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 35 ஆண்டுகள் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் புலவர் சண்முகவடிவேல். 70 களின் பிற்பகுதி மற்றும் 80களில் இவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பொழுது இவரிடம் பயின்ற மாணவர்கள் இன்று பலரும் பல்வேறு துறைகளில் ஜொலித்து வருகிறார்கள்.

தமிழ் பத்திரிகை உலகில் சிறந்த தடங்களை பதித்திருக்கும் ஆரூர் தமிழ்நாடன், மானா பாஸ்கரன், கோவி லெனின், ஆரூர் குணா உள்ளிட்ட பலர் இவரது மாணவர்கள்.

தமிழ் ஆசிரியர் என்றால் வகுப்புக்கு வந்து திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் குற்றால குறவஞ்சியையும் நடத்தி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று விடும் சராசரி தமிழாசிரியர் கிடையாது இவர். 

அன்றைய தமிழாசிரியர்களில் கிட்டத்தட்ட அனைவருமே மாணவர்களுக்கு வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே பணியாற்றி இருக்கிறார்கள்.

Tamil Chemmal Shanmugavadivelu

அந்த வகையில் பாடத்தை நகைச்சுவை கலந்து ஊட்டுவதன் மூலம் மாணவர்களுக்கு தமிழை எளிதில் பதிய வைக்கும் வித்தையை கைக்கொண்டார் சண்முகவடிவேல். அது மட்டுமல்ல தனது வகுப்பில் பயிலும் மாணவர்களில் தமிழ் மீது பெரிதும் ஆர்வம் கொண்டவர்களை தேர்ந்தெடுத்து பள்ளிக்கு வெளியே தான் கலந்து கொள்ளும் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தவர் சண்முக வடிவேல்.

அன்றைக்கு கோவில் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அந்த கோவில் திருவிழாக்களில் பஜனைகளும்  கதா காலேட்சபங்களும் வில்லுப்பாட்டுகளும் கர்நாடக சங்கீத கச்சேரிகளுமே அதிகம் நடைபெறும். திருவாரூர் வடக்கு வீதி முருகன் கோவிலிலும் இப்படித்தான் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இதையெல்லாம் பார்த்த சண்முகவடிவேலு அந்த கோவிலின் அறங்காவலரான தனது நண்பர் நாகராஜனிடம், ‘கோவில் திருவிழாக்களில் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், இப்போது எழுதுகிற கவிதை  போன்ற தமிழை எடுத்துச் செல்ல வழி செய்யுப்பா’ என்று உரிமையோடு வேண்டுகோள் வைத்தார்.

’புலவரே நீங்க இதுக்கெல்லாம் கேட்கணுமா? நீங்க வந்து பேசுங்க’ என்று முருகன் கோவில் நிகழ்ச்சிகளில் புலவர் சண்முக வடிவேலுக்கு கதவு திறந்தார் அறங்காவலர்.

1975 ஆம் ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகில் தமிழ் ஆன்மீக உலகில் சத்தமில்லாமல் நடந்த மிகப்பெரிய மாற்றம் இது.

Tamil Chemmal Shanmugavadivelu

பஜனைகளும் கச்சேரிகளும் நடந்து கொண்டிருந்த கோவில் திருவிழாக்களில் அப்போது புலவர் சண்முகவடிவேலுவின் தமிழ் ஒலிக்க தொடங்கியது. தான் மட்டுமல்ல தனது வகுப்பில் தமிழ் பாடல்களை தெளிவான உச்சரிப்போடும் செறிவான கருத்துக்களோடும் சொல்லத் தெரிந்த மாணவர்களையும் தன் இலக்கிய அணியில் சேர்க்கத் தொடங்கினார் சண்முகவடிவேல்.

முருகன் கோவில் மேடைகளில் தானும் பேசி தனது மாணவர்களையும் கவிதை வாசிக்க வைத்தார். அவர்கள் எழுதிய கவிதைகளை மரபுக் கவிதைகளை செல்லமாய் திருத்திக் கொடுத்து சிறப்பாக்கி அவற்றை மேடை ஏற்றி பெரும் பாராட்டுக்களை ஈட்டி கொடுத்தார். மக்களை ஈர்க்கும் தலைப்புகளில் பட்டிமன்றங்களை நகைச்சுவை தமிழோடு நடத்தினார்.

அடியார்க்கு நல்லான், அம்புஜம், ஆரூர் தமிழ்நாடன் என  தனது மாணவர்களை எல்லாம் மரபுக் கவிஞர்களாக்கி திருவாரூர் சுற்றுவட்டார கிராமங்களில் எல்லாம் கவியரங்கங்கள் பட்டிமன்றங்கள் கோவில் திருவிழாக்களில் ஏற்பாடு செய்து தமிழை கிராமங்கள் தோறும் கொண்டு சென்றார்.

தன்னுடைய சக தமிழ் ஆசிரியர்களை பட்டிமன்றத்திற்கு அழைத்து ஒரு பட்டிமன்ற குழுவையே நீடித்த காலத்திற்கு நிலைக்க வைத்தவர் சண்முக வடிவேல்.
புலவர் சண்முக வடிவேலுவும் புலவர் சீனி சண்முகமும் இணைந்து பேசும் பட்டிமன்றங்கள் புகழ் பெற்றவை.

ஒருவர் வீட்டில் நடப்பதை இன்னொருவர் சொல்வதாக சொல்லும் அந்த அங்கதங்களும் எல்லை தாண்டாத எள்ளல்களும் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவை. சீனி சண்முகம் ஒரு கட்டத்தில் சண்முக வடிவேலு ஜோடியாக இல்லாமல் பேசவே மாட்டார். அந்த அளவுக்கு இருவரது கெமிஸ்ட்ரியும் தமிழோடு தோய்ந்து போனது.

ஆசிரியராக இருந்த காலகட்டங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்கும் சென்றவர் சண்முகவடிவேலு. அந்தப் போராட்ட அனுபவங்களையும் சிறை அனுபவங்களையும் கூட மிகச் சிறந்த நகைச்சுவைகளாக அவர் மேடைகளில் சொல்லும் பொழுது இதற்காகவே போராடி சிறை செல்லலாம் என்று போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு கூட தோன்றும். கேட்பவர்களுக்கும் கூட ஒரு முறை சிறை சென்று வரலாமா என்று ஆசை வரும். 

பொதுவாகவே ஒரு மேடையில் கூறிய நகைச்சுவையை இன்னொரு மேடையில் பேசினால் பலரும் ரசிக்க மாட்டார்கள். ஆனால் புலவர் சண்முக வடிவேலு இதற்கு விதிவிலக்கானவர்.

அவர் தனது மனைவியிடம் காபி கேட்கும் அந்த நகைச்சுவை ரொம்ப பிரசித்தம். இதுவரை நூறு முறை சொல்லிட்டேன் என்று அவர் சொன்னால் கூட சார் அந்த காப்பி விஷயத்தை மறுபடியும் சொல்லுங்க சார் என்று அவரைக் கேட்பவர்கள் பலபேர்.அவரது நகைச்சுவை மருத்துவத்தால் பலன் பெற்றோர் பற்பலர்.

நீண்ட நெடுங்காலம் தமிழ் ஆசிரியராக இருந்து சிறந்த தமிழ் தலைமுறையை உருவாக்கிய சண்முகவடிவேலு வகுப்பறைக்கு வெளியேயும் தமிழை மக்களுக்கு கொண்டு சென்று சிறந்த தமிழ் தொண்டாற்றி இருக்கிறார்.

தனது மாணவர்களிடம் ஆசிரியர் என்ற கருத்தை காட்டாமல் தோழமை உணர்வோடு அவர்களை அரவணைத்து கவியரங்கம் பட்டிமன்றம் என்று அவர்களை அழைத்துச் சென்று அந்த காலகட்டத்தில் ஒரு கவியரங்கிற்கு 50 ரூபாய் என்று தன் மாணவர்களுக்கு தானே சன்மானமும் வழங்கியவர் தான் புலவர் சண்முகவடிவேலு.

இத்தகைய தமிழ் தொண்டு செய்து பழுத்த பழமான 86 வயது  சண்முகவடிவேல் அவர்களுக்கு  தமிழ் செம்மல் விருது வழங்குவது தமிழக அரசு செய்திருக்கும் மிக பொருத்தமான பாராட்டத்தக்க செயல்பாடு.

திருவாரூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் உலகம் எங்கும் இருக்கும் தமிழ் ஆர்வலர்களின் நகைச்சுவை ஆர்வலர்களின் பொக்கிஷமாகவும் திகழும் புலவர் சண்முகவடிவேலுவை வாழ்த்துவோம்.

-ஆரா

“மா.செ.க்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு”: ஓபிஎஸ் பேட்டி!

பதவி விலகத் தயார்: எலான் மஸ்க் போட்ட கன்டிஷன்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts